28 ஆண்டுகால அரச சேவையிலிருந்து இன்றுடன் (14.09.2026) இளைப்பாறும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாகாணப் பணிப்பாளர் திரு. சிவசோதி சிவகெங்காதரன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் பி. ப. 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வட மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெறும் திரு. சிவசோதி சிவகெங்காதரன் அவர்கள், 1998 ஆம் ஆண்டு கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் சேவையில் இணைந்தார். அவர் 1998 முதல் 2005 ஆம் ஆண்டு வரை கைத்தொழில் விரிவாக்க உத்தியோகத்தராகவும், 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதில் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். தொடர்ந்து 2007 முதல் 2017 ஆம் ஆண்டு வரை உதவிப் பணிப்பாளராகவும், 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். 2022 ஆம் ஆண்டு முதல் 14.09.2026 வரை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாகாணப் பணிப்பாளராக பொறுப்புடன் கடமையாற்றி, தனது 28 ஆண்டுகால அரசுப் பணியை நிறைவுசெய்து ஓய்வுபெறுகிறார். இந் நிகழ்வில் வரவேற்புரை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தொழில் முயற்சி ஊக்குவிப்பு முகாமையாளர் திருமதி சிவதாரணி ரமேஷ்குமார் அவர்களால் ஆற்றப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், திரு. சிவகங்காதரன் அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்புமிக்க அரச சேவையைப் பாராட்டினார். திரு. சிவகங்காதரன் அவர்கள் ஒரு திறமையான அரச உத்தியோகத்தர் என்பதற்கு அப்பால், எளிமை, பணிவு, நேர்மை, நட்புணர்வு மற்றும் மனிதநேயம் கொண்ட சிறந்த பண்பாளர் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். பதவி, வயது அல்லது அதிகார நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாது அனைவருடனும் அன்புடனும் மரியாதையுடனும் பழகும் சிறந்த பண்பு அவரிடம் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னுடன் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குவதிலும், மேலதிகாரிகளுடன் சிறந்த புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுவதிலும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எனப் பாராட்டினார்.
கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆழமான அறிவையும் நீண்டகால அனுபவத்தையும் கொண்டிருந்த அவர், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை உள்ளிட்ட பல்வேறு கைத்தொழில் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும், மாவட்டத்தின் கைத்தொழில் முயற்சியாளர்களின் வளர்ச்சியிலும் அர்ப்பணிப்புடன் பங்களித்துள்ளார் எனக் குறிப்பிட்டார். ஓய்வுபெறும் நாள் நெருங்கியபோதும், இறுதி நாள் வரை அதே அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் பணியாற்றியமை அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் ஒரு சிறந்த உதாரணம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். திரு. சிவகங்காதரன் அவர்கள் ஓய்வுக்குப் பின்னரும் தனது அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி கைத்தொழில் மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகளில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என வாழ்த்திய அரசாங்க அதிபர், அவருக்கும் அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கும் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் சிறப்பான ஓய்வுக்காலம் அமைய இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி கணக்காளர், உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் திரு. சிவகெங்காதரன் அவர்தம் பாரியார் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள். நிகழ்வில் ஏற்புரையாற்றிய திரு. சிவகங்காதரன், தமக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பான கௌரவிப்பை தாம் எதிர்பார்க்கவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததுடன், நிகழ்வை ஏற்பாடு செய்த மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.தமது நீண்டகால அரச சேவைப் பயணத்தில் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன், தம்முடன் இணைந்து பணியாற்றி ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 8 10 9 12 13 14 15 16 17 18 19 20

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (14.09.2026) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. “மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக கூட்டுறவு மாற வேண்டும்!” – அரசாங்க அதிபர் இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டம் கூட்டுறவுத் துறையில் நீண்ட வரலாற்றையும் பெருமையையும் கொண்ட மாவட்டமாகும். குறிப்பாக, நெருக்கடியான காலங்களிலும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி முக்கிய பங்காற்றியுள்ளன. தற்போதைய போட்டிமிக்க சூழலில், கூட்டுறவுச் சங்கங்கள் காலத்திற்கேற்ப தங்களது வணிக உத்திகள் மற்றும் சேவை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாகும். ‘Coop City’ என்ற வலுவான அடையாளத்தை உருவாக்கி, ஒரே கூரையின் கீழ் மளிகை, மருந்து, எரிபொருள், டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குவதுடன், இளைஞர்களை தொழில்நுட்பத்துடன் இணைத்து கூட்டுறவுத் துறையை நவீனப்படுத்த வேண்டும். தனியார் துறையை விட குறைந்த விலையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதும், மக்களுக்கு தேவையான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் கூட்டுறவுத் துறையின் முக்கிய பலமாகும். சேவை ஒரு கடமை என்ற அடிப்படையில் மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக கூட்டுறவு மாற வேண்டும். பழமையான சிறந்த அனுபவங்களைப் பாதுகாத்துக்கொண்டு, புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, மக்களை மையப்படுத்திய சேவைகளை முன்னெடுப்பதன் மூலமே கூட்டுறவுத் துறையை எதிர்காலத்திற்கு வலுவாகக் கொண்டு செல்ல முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். கூட்டுறவு அமைப்புக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான ஆராய்வு! இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் கூட்டுறவு அமைப்புக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. உலர் உணவுப் பொருட்கள் விநியோகத்திற்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை! குறிப்பாக, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினால் உலர் உணவுப் பொருட்களை அரச சார்பற்ற நிறுவனங்கள், வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசணைத் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு வழங்குவதற்கான கொடுப்பனவுகளை முன்னுரிமைப்படுத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எரிபொருள் விநியோகத்தில் அளவு வேறுபாடுகள்! குறித்து பரிசோதனை கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக நடைமுறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பெற்றோலிய பவுசர்களில் நிரப்பப்பட்டு அனுப்பப்படும் எரிபொருளின் அளவுகளில் வேறுபாடுகள் காணப்படுவதாக பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கமைவாக, எரிபொருள் நிரப்பப்படும் பவுசர்களின் தரம், கொள்ளளவு மற்றும் நிரப்பப்படும் எரிபொருளின் அளவு ஆகியவற்றை உரிய முறையில் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிறை மற்றும் அளவைகள் உத்தியோகத்தரிடம் அரசாங்க அதிபர் அறிவுறுத்தினார். கூட்டுறவுக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நடவடிக்கை!

குருநகர் பகுதிகளில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான காணிகளில் சிலர் குடியிருந்து வருவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறித்த காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அரசாங்க அதிபர் தெரிவித்தார். பனை, தென்னை அபிவிருத்தித் துறையின் பிரச்சினைகள் ஆராய்வு! பனை, தென்னை அபிவிருத்திச் சங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. கள் உற்பத்தி நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரக் கட்டணங்கள், திறந்து மூடும் நேரம், மதிய நேரத்தில் நிலையங்களை மூடும் நடைமுறை மற்றும் பனை உற்பத்திகளுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி அனுமதிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. திக்கம் வடிசாலை, நிதி, ASMP மற்றும் ஆளணி பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேலும், திக்கம் வடிசாலை, கூட்டுறவு நிதியிடைக் கடன், ASMP செயற்திட்டம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஆளணி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. கெளரவ அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு! இவ்விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிப்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ. இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடனும், வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. வசந்த சமரசிங்க அவர்களுடனும் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், பனை, தென்னை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது பிரச்சினைகளை நேரடியாக முன்வைத்து, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எ. சந்திரசேகரன், நிறை மற்றும் அளவைகள் உத்தியோகத்தர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், பனை, தென்னை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7
வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் - பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வடக்கு (J/417), பொலிகண்டி தெற்கு (J/395) மற்றும் வல்வெட்டித்துறை தென்கிழக்கு (J/392) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இன்றைய தினம் (12.09.2026) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர். கெளரவ பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாகக் திறந்துவைக்கப்பட்டன. மேலும், இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு. திருலிங்கநாதன்,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், உதவிப் பிரதேச செயலாளர், உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 11 12 13 14 15 16 17 18 20 21 22 23 24 26 27 28
 
 

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ சாரணர் சேவை - 2026 இல் பங்கேற்றவர்களுக்கான “சான்றிதழ் வழங்கும் விழா” இன்று (12/09/2026) முற்பகல் 10:00 மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ் மாவட்ட சாரணர் கிளையின் ஏற்பாட்டில், மாவட்ட சாரணர் ஆணையாளர், அரசாங்க அதிபருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இந்த விழா இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ். கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. மாலதி முகுந்தன் கலந்து சிறப்பித்தார். முன்னாள் உதவி மாவட்ட ஆணையாளரும் சர்வதேச இணைப்பாளருமான திரு. இ. ராஜ்குமார் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட சாரணர் ஆணையாளர், அரசாங்க அதிபருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட சாரணர் கழகம் தனது 110ஆவது ஆண்டை அனுஷ்டித்து வரும் நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் தொடர்ச்சியாக 66 ஆவது ஆண்டாக சாரணர் சேவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இம்முறை எட்டு பாடசாலைகளில் இருந்து சுமார் 234 ஆண் மற்றும் பெண் சாரணர்கள் சேவையாற்றினர். குறிப்பாக நெடுந்தீவு பிரதேச சாரணர்களும் கலந்து தங்கியிருந்து சேவையாற்றியமை பாராட்டத்தக்கது. புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் விமான சாரணர் படையினர் வரவேற்பு நடனம் வழங்கினர்; அப்பாடசாலையில் சுமார் 50 விமான சாரணர்கள் இணைந்திருப்பதும் சிறப்பம்சமாக குறிப்பிடப்பட்டது. அரசாங்க அதிபர் உரையாற்றுகையில், சாரணிய செயற்பாடுகளின் ஊடாக மாணவர்களிடம் தலைமைத்துவம், ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு மற்றும் சேவை மனப்பான்மை போன்ற பண்புகளை வளர்க்க முடியும் என்றார். 2027 ஆம் ஆண்டு இலங்கை சாரணர் சங்க ஜம்போரி கோமாகம பிரதேசத்தில் ஜனவரி 17 முதல் 23 வரை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக300 சாரணர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் நல்லூர் உற்சவ சாரணர் சேவையில் அதிக மணித்தியாலங்கள் கடமையாற்றிய முதல் 50 சாரணர்கள், ஜம்போரிக்கான தெரிவில் விசேட அடிப்படையில் உள்வாங்கப்படவுள்ளனர். சாரணர் சங்க செயற்பாடுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படுவதாகவும், நிதிக் கொடுப்பனவுகள் அனைத்தும் காசோலை மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சாரணர் செயற்பாடுகளுக்குத் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கி வரும் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் சாரணர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் அதிபர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 9 10 12 13 14 1516 17 18 19 20 21
 
 
யாழ்ப்பாணம், சாவற்கட்டு இறங்குதுறைமுகத்தின் அபிவிருத்திக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் கடற்றொழில் அமைச்சின் நிதிப் பங்களிப்பின் கீழ் 10.09.2026 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துவைத்தார்கள். சாவற்கட்டு இறங்குதுறைமுகம் நீண்டகாலமாக உரிய முறையில் அபிவிருத்தி செய்யப்படாத நிலையில், அப்பகுதி மீனவர்கள் தமது அன்றாட கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், குறிப்பாக, இறங்குதுறைமுகத்தை அண்மித்த கடற்கரைப் பகுதி பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டதுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் போதியளவில் காணப்படவில்லை.
இந்நிலையில், அப்பகுதி மீனவர்களின் நீண்டகாலத் தேவையை கருத்திற்கொண்டு, சாவற்கட்டு இறங்குதுறைமுகத்தை புனரமைத்து கடற்றொழில் நடவடிக்கைகளை பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையில் அபிவிருத்திப் பணிகள் கடற்றொழில் அமைச்சின் நிதிப் பங்களிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு. கு. பிரபாகரமூர்த்தி, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகள் மற்றும் பகுதி மீனவர் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 13