யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (12.06.2025) மு. ப. 11.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்படும் 2ஆம் காலாண்டுக்குரிய கூட்டமாக இது அமையும் எனவும் தெரிவித்ததுடன், இக் கூட்டத்தில் ஒலிபெருக்கி மூலமாக அதிக ஒலி எழுப்புதலை வரையறுத்தல், திண்மக் கழிவகற்றல் பிரச்சினைகள் மற்றும் தற்போது கரையொதுங்கிவரும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டப்பட்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. ஹாலிங்க ஜெயசிங்க அவர்களும் கலந்துகொண்டார்.
மேற்படி கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.வழிபாட்டுத்தலங்கள் மற்றும் விழாக்களின் போது ஒலிபெருக்கி மூலமான ஒலி வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், வழிபாட்டுத்தலங்களிலும் ஏனைய நிகழ்வுகளிலும் ஒலிபெருக்கிகள் குறித்த எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இதனை மீறும் பட்சத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இதே வேளை வழிபாட்டுத் தலங்களில் நிரந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகள் மூலம் இடையூறு ஏற்படும் பட்டத்தில் அவை தொடர்பாக வழிபாட்டுத் தல நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் போது பொதுமக்கள் அது தொடர்பாக
மாவட்டச் செயலக 0212225000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை முன்வைப்பதனூடாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக பொதுமக்கள் தங்களுடைய முறைப்பாடுகளை எந்நேரமும் 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
3.திண்மக் கழிவு சேகரிப்பின் போது தரம் பிரிக்கப்படாத கழிவுகள் உள்ளூராட்சி அமைப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை மிக இறுக்கமாக பின்பற்றுமாறும் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கமைவாக முதற்கட்டமாக அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டு இத் திட்டம் இறுக்கமாக பின்பற்றப்படும் என்று உள்ளூராட்சி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டது.
4.தற்போது புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் பெருமளவில் கரையொதுங்கி வருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டப்பட்டு சம்பந்தப்பட்ட திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மேலும், இக் கூட்டத்தில் ஆலயங்களினால் கோரப்பட்ட மண் தொடர்பாகவும், நகர்புறங்களில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைகள், வளி மாசு மற்றும் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பொலிஸ் அத்தியகட்சகர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள்,, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வைத்திய அதிகாரி, யாழ் மாநகர சபை பிரதி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் , யாழ்ப்பாணம் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8
வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீதி அபிவிருத்தி திட்டம், வீட்டுத் திட்டம், குடிநீர், போன்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், 02.06.2025 இல் அதிமேதகு சனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை க் கூட்டத்தில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 9 இலட்சம் ரூபாவாகவும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 15 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, அந்தவகையில் 9இலட்சம் பெறுமதியான 53 வீடுகளுக்கும், 15இலட்சம் பெறுமதியான 563 வீடுகளுக்குமான நிதியுமாக மொத்தமாக மாவட்டத்திற்கு 891.30 மில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 235 மில்லியன் நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வீட்டுத் திட்ட வேலைகளை துரிதப்படுத்துமாறும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6
தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பழைய பூங்காவை பசுமைக்காடாக்கல் செயற்றிட்டம் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.06.2025) காலை 09.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது அரசாங்க அதிபர் அமரர் சேர் பேர்சிவல் அக்லான்ட் டைக் அவர்களினால் 27 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டு ஆரோக்கியமாகவாழ மரங்களை நாட்டினார். தற்போது அதனை மேலும் பேணுவதற்காக முதற்கட்டமாக 500 மரங்கள் நடுகை செய்யும் திட்டத்தில் இன்றைய தினம் 250 மரங்களை நாட்டி சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக பேணுவோம் எனவும், நாம் வாழும் காலத்தில் சமூகத்திற்கு நல்ல விடயங்களைச் செய்வோம் எனவும் குறிப்பிட்டு, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆளுக்கொரு மரத்தினை நாட்டி குறிப்பிட்ட காலத்திற்கு சீராக நீர் ஊற்றி பேணுவோம் எனவும் குறிப்பிட்டு, அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறு கேட்டுக் கொண்டார்.
இவ் பசுமைக்காடாக்கல் செயற்றிட்டத்தில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆளுக்கொரு மரத்தினை நாட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 6
"வலுவூட்டலால் நாட்டை வெல்லுங்கள் - போதையிலிருந்து மீண்டெழுங்கள்" - 2025 தொனிப் பொருளுக்கமைய, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பு வேலைத்திட்டத்தில் கூடிய நிதியினை சேகரித்த கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு சமுர்த்திப் பணிப்பாளர் திரு எவ்.சி. சத்தியசோதி தலைமையில் இன்றைய தினம் (05.06.2025 ) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், கொடி தின நிதி சேகரிப்பில் 2023 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினையும், 2024 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமையானது சிறப்பான விடயம் எனவும்,கொடி தினத்தில் சேகரிக்கப்பட்ட நிதியினை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், சிறுவர்களுக்கான கல்வி உதவி போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், மக்களுக்கான சேவைகளை உயர்ந்தளவில் வழங்க வேண்டும் எனவும், எமது முன்னாள் அரசாங்க அதிபர் அமரர் திரு. க. கணேஷ் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது "அரச சேவையாற்றுவதற்கான இவ் அரிய சந்தர்ப்பம் கடவுளால் தரப்பட்டுள்ளது - அதனைச் சரியாக பயன்படுத்த வேண்டும்" எனக் கூறுவதை அரசாங்க அதிபர் ஞாபகப்படுத்தி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையினை வினைத்திறனாகவும் அர்ப்பணிப்புடனும் வழங்கி வந்தால் கடவுளின் ஆசீர்வாதம் உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், கிராம மட்டத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்தில் நேரடியாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுவருதனால் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு வலுவூட்டல் செயற்பாடுகளில் சிறப்பாக ஈடுபட வேண்டும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், கொடி தினத்தில் அதிக நிதி சேகரித்த உத்தியோகத்தர்களுக்கான கெளரவிப்பானது ஏனைய உத்தியோகத்தர்களையும் உற்சாகப்படுத்த தூண்டும் என்பதால் குறுகிய நாட்களில் ஒழுங்கு செய்யப்படுத்தப்பட்டதாகவும் எனத் தெரிவித்து, சமுர்த்தி வேலைத் திட்டங்கள் ஊடாக வறுமையினை ஒழிக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு கொடி தினத்தில் அதிக நிதியினை மாவட்ட ரீதியில் சமுதாய அடிப்படை அமைப்பினைச் சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் - முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட கோப்பாய் பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. செ. சிவகுமார் அவர்களுக்கும், இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திரு. அ. யூட்சன் அவர்களுக்கும், மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்ட ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திரு. கோ. கருணாகரன் அவர்களுக்கும், நான்காவது இடத்தினை பெற்றுக்கொண்ட நல்லூர் பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திருமதி சி. றஞ்சினி அவர்களுக்கும், ஐந்தாவது இடத்தினை பெற்றுக்கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திருமதி இ. அன்ரனற் ஜொலிற்றா அவர்களுக்கும் கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் அரசாங்க அதிபரால் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.மேலும், 15 பிரதேச செயலக ரீதியாக அதிக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட 128 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தித் திணைக்கள கணக்காளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
தேசிய சுற்றாடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினத்தினைமுன்னிட்டு - "பிளாஸ்ரிக் மூலம் ஏற்படும் மாசுபாட்டிற்கு இறுதி தீர்வு பெற்றுக்கொள்ளல்" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு கருத்தரங்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.06.2025) மு. ப 10.15 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பது அனைவரின் தார்மீகப் பொறுப்பு எனவும், சரியான முறையில் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்புக் கூட்டத்தில் சகல திணைக்களங்களும் யூலை மாதம் 1 ஆம் திகதி முதல் திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டதற்கமைய, அதற்கு முன்மாதிரியாக மாவட்டச் செயலகம் யூன் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து சரியான பொறிமுறை ஊடாக செயற்படுவது என தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய தற்போது மாவட்டச் செயலகத்தால் திண்மக்கழிவுகள் சரியாக தரம் பிரிக்கப்பட்டு வருகின்றமைக்காக ஒத்துழைப்பு நல்கிவரும் உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும் சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நாளை தினம் பழைய பூங்காவில் முதற்கட்டமாக 500 மரங்கள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், மரங்களுக்கான நீரை ஊற்றிப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆர்வம் உள்ள உத்தியோகத்தர்கள் எம்முடன் இணைந்து பொதுச் சேவையில் ஈடுபட லாம் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இவ் விழிப்புணர்வில் பிளாஸ்டிக் பாவனைகள், அதனை எரிவூட்டுவதனால் எழும் மாசினால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை யின் உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். பி. தவகிருபா அவர்களால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக்களை யாராவது எரியூட்டினால் 1981 தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7