யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், கடற்றொழி்ல் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (25.06.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்பு ரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் வாழ்வாதாரத்தில் விவசாய மற்றும் மீன்பிடி பிரதானமானது எனவும், அந்த வகையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து பொருத்தமான இயலளவான தீர்வுகளை காண்பதற்காக இவ்வாறான கூட்டத்தினை ஒழுங்கு செய்த கெளரவ அமைச்சர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார்.
கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், கடற்றொழி்ல் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து,
அவற்றுக்கு விரைவான முடியுமான உயர்ந்த பட்ச தீர்வுகளை வழங்குவதே இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும், நாடுதழுவிய ரீதியாக குறிப்பாக பிரதானமான கடல்வளங்களை அண்டிய 15 மாவட்டங்களில் கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை நடாத்தி பிரச்சினைகளை ஆராய்ந்து வருவதாகவும் அந்தவகையில் இதுவே யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது கூட்டம் எனவும் தெரிவித்தார். மேலும், இக் கூட்டத்தினை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நடாத்தவுள்ளதாகவும், மூன்று வார முன்னறிவித்தலின் அடிப்படையில் கூட்டம் நடாத்தப்படும் எனவும், கூட்டத்திற்கு முன்னர் தங்களின் ஆலோசனைகள் பரிந்துரைகள் பிரச்சினைகளை எழுத்து மூலம் அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும் பட்சத்தில் எம்மால் சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளை அழைத்து ஒருங்கிணைத்து விரைவான தீர்வுகளை காணமுடியும் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்கள் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை அமைச்சில் எடுத்தாலும், பிரதேச மட்டத்தில் உள்ளூர் அமைப்புக்களை ஒன்றிணைத்து தீர்வுகளை காண வேண்டும் என்ற நோக்கத்துடன் இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழி்ல் சார்ந்த குடும்பங்கள் மாவட்ட சனத்தொகையில் அண்ணளவாக 38% ஆகவுள்ளதாகவும், அதனால் விசேடமாக கவனிக்கப்பட வேண்டிய மாவட்டமாகவுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் அதிமேதகு சனாதிபதி அவர்கள் கடற்றொழி்ல் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், குறுகிய காலத்தில் தீர்க்க வேண்டிய கடற்றொழி்லாளர்களின்பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார் எனவும், எமது அரசாங்கம் வறுமை ஒழிப்பு, டியிற்றல் முறைமை மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவித்து, கடற்றொழி்லாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து தீர்க்க காண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, உள்ளூர் மீனவர்களின்சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகள், மயிலிட்டி துறைமுக மூன்றாம் கட்ட அபிவிருத்தி போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர், வடமாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாாிகள் மற்றும் கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் தலைமையில் 17.06.2025 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்று பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத் தீர்மானங்களுக்கமைவாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஆராய்வதற்காகஅரசாங்க அதிபர் 22.06.2025 ஆம் திகதி அன்று நயினாதீவுக்கு விஜயம் செய்தார்.
இதன்போது வீதி திருத்துவதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், கோவிலுக்கு முன்னாள் உள்ள தற்காலிக கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை 24.06.2025 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்குமாறு அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், கோவில் புனிதத்தன்மையினை பேணும்முகமாக திண்மக்கழிவகற்றல் முறைமை, குடிநீர் வழங்கல், போக்குவரத்து ஒழுங்குகள், பாதுகாப்பு போன்றவை தொடர்பாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொண்டார்.
இதன் போது வேலணை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர், வேலணை பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முதற்கட்ட புனரமைப்பு வேலைகள் இன்றைய தினம் (21.06.2025) தெல்லிப்பளை காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு மற்றும் பருத்தித்துறை மூன்றாம் வீதியின் புனரமைப்பு வேலைகளுடன் ஆரம்பமாகியது.
அந்த வகையில் காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு ஜீவநாதன் அவர்கள், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் திரு. குரூஸ் அவர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்ட திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (24.06.2025) காலை 10.40 மணிக்கு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்களின் பாரியார் திருமதி ரஜனி பிரதீபன் மற்றும் பிள்ளைகள் அழைப்பின் பேரில் பங்குபற்றியிருந்தார்கள்.
சர்வ மதகுருமார்களின் ஆசியுடன் வரவேற்பு நிகழ்வானது ஆரம்பமாகியது.
இவ் வரவேற்பு நிகழ்விற்கு தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த திரு பிரதீபன் அவர்கள் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், தாமும் அவரும் ஒரே சமயத்தில் இலங்கை நிர்வாக சேவைக்கு இணைந்ததாகவும், அவர் உதவித் திட்டப்பணிப்பாளராகவும், திட்டப்பணிப்பாளராகவும், பிரதேச செயலாளராகவும், மேலதிக அரசாங்க அதிபராகவும் பின்னர் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபராக ஒரு வருடத்திற்கு மேலாக கடமையாற்றியவர் எனவும் தெரிவித்தார். மேலும் அரசாங்க அதிபர் தமக்கான பதவியேற்பு நிகழ்வினை மிகவும் எளிமையாக மேற்கொள்ளுமாறு கூறினாலும் எமது பாரம்பரிய முறையில் வரவேற்புச் செய்வது எமது கடமை என்றும் அந்த வகையில் இந் நிகழ்விற்கு தலைமை தாங்குவதில் தாம் மகிழ்வடைவதாக தெரிவித்து, அவர் மக்களுக்கான சிறப்பான சேவையாற்றுவதுடன் மேன்மேலும் பதவி உயர்வுகள் பெற்று உயர்வடைய தமது வாழ்த்துக்களை மேலதஅரசாங்க அதிபர் தெரிவித்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் வரவேற்புரை பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. மேலும், வாழ்த்துரைகள் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், பிரதம உள்ளகக் கணக்காளர் திரு எஸ். ரமேஷ்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. ம. வித்தியானந்தநேசன், பிரதி பதிவாளர் நாயகம் திரு ப. பிரபாகர், கணக்காளர் திரு. அ. நிர்மல், நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஷினி மதியழகன், உத்தியோகத்தர்களான திருமதி ரேவதி பாலேந்திரன் மற்றும் திருமதி சிவராணி ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமது ஏற்புரையில், தெரிவித்தாவது, யாழ்ப்பாணமாவட்டச் செயலகத்தில் ஏழு அரசாங்க அதிபர்களுடனும், முல்லைத்தீவு உள்ளடங்கலாக 08 அரசாங்க அதிபர்களுடன் பணியாற்றும் பாக்கியம் கிடைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், அருட்தந்தை அவர்களின் ஆசியுரையில், கடந்த 13 மாதங்களாக அரசாங்க அதிபர் என்ற வெற்றிடமே காணப்படாத வகையில் பதில் அரசாங்க அதிபர் கடமையாற்றி இருந்ததாக குறிப்பிட்டதை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு அதற்கு எனது பணிக்கு மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பான சேவையினை வழங்கியமையே காரணம் எனக் குறிப்பிட்டார். மேலும், முன்னாள் அரசாங்க அதிபர் அமரர் க. கணேஷ் அவர்கள் "அரசாங்க சேவை என்பது கடவுளால் தரப்பட்ட வரம் - அதனை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் " எனக் கூறுவதனை ஞாபகப்படுத்தி நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட அபிவிருத்திக்கு வினைத்திறனாக செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வின் இறுதியில் பழைய பூங்கா வளாகத்தில் அரசாங்க அதிபரினால் மரக்கன்று நாட்டிவைக்கப்பட்டது.





இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் திரு. W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
திரு. ம.பிரதீபன் அவர்கள் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






