யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வரவில் சிறந்த உத்தியோகத்தர்கள் மற்றும் வரைவை ஒழுங்காக கடைப்பிடிக்கும் கிளைகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் இன்றைய தினம் (04.05.2025) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வாண்டு தை, மாசி மற்றும் பங்குனி மாதம் வரவில் சிறந்த உத்தியோகத்தர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்படி காலப்பகுதியில் காலை 08.30 மணிக்கு முன்னர் 100% உத்தியோகத்தர்களின் வரவை ஒழுங்காக கடைப்பிடித்த கிளைகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (30.05.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்பு ரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், மாவட்டச் செயலகத்தினால் - பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 56 மில்லியன் ரூபா, மின்சார இணைப்பு செயற்றிட்டத்திற்கு 43 மில்லியன் ரூபா, கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபா உள்ளடங்களாக 1113.78 மில்லியன் ரூபா வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவாக ஆராயாப்படவுள்ளதாகவும் தெரிவித்துடன், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் சரியான முறையில் பயன்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனத் தெரிவித்தார். மேலும், அதிமேதகு சனாதிபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிமேதகு சனாதிபதி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கடவுச் சீட்டு அலுவலகத்தினை ஆரம்பிப்பதற்கான வேலைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியதற்கமைய விரைவில் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும், உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி, வலையமைப்பு வசதி மற்றும் பொது மக்கள் காத்திருக்கும் கொட்டகை போன்ற வேலைத் திட்டங்களே உள்ளன எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் தமது தொடக்கவுரையில், அதிமேதகு சனாதிபதி அவர்கள் 09 மாகாண ஆளுநர்களுடான கலந்துரையாடலில் இவ்வாண்டு சென்ற ஆண்டைவிட மாகாணங்களுக்கு 03 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சரியான முறையில் பயன்படுத்த ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், சனாதிபதி அவர்கள் இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதிலும் பார்க்க கூடுதலான நிதி ஒதுக்கீட்டினை அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்து, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு சவால்கள் பிரச்சனைகளை பொறுப்புவாய்ந்த திணைக்கள ங்கள் வினைத்திறனாக கையாண்டு, அபிவிருத்தித் திட்டங்களைவிரைவாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளதாகவும், அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கெளரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், மணல் அகழ்வு, தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திசாலை, தாளையடி குடிநீர் திட்டம், காங்கேசன்துறையில் அமைந்துள்ள சனாதிபதி மாளிகை உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி எம். தனுஜா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9  10 11
 
யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (29.05.2025) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனவும், சென்ற கூட்டத்தில் இளம் விவசாயிகளை அடுத்து கூட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என எமது வேண்டுகோளுக்கு அமைய, இன்றைய கூட்டத்தில் இளம் விவசாயிகள் வருகை தந்துள்ளமையானது வரவேற்க்கதக்கது விடயம் எனவும் தெரிவித்தார். மேலும்,
தற்போது அதிகரித்து வரும் தென்னை மரத்தை பாதிக்கும் வெண் ஈ தாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்கள் குறித்தும் சிறந்த பொறிமுறைகளை கண்டறிய வேண்டும் எனவும், விவசாயத்துறையினை வளர்ப்பதற்கு
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், இன்றைய கூட்டத்தில் முதலில் விவசாயிகளின் கருத்துக்களை முன்வைக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். விவசாயிகளின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைக்கு அமைய, அரசாங்க அதிபரால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1.வேலணயில் வீதி புனரமைப்பு செய்யப்பட்ட போது உரிய வடிகாலமைப்பு மேற்கொள்ளாத காரணத்தினால் வெள்ளத்தினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய - வாய்க்கால்கள் அமைப்பது தொடர்பான பூர்வாங்க அறிக்கையினை பிரதேச செயலாளர் விரைவில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
2.தீவகப்பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் தொடர்பாக பிரதேச சபையினரும், கமநல சேவைகள் திணைக்களமும் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
3.வேலணையில் மிளகாய் இலைகளின் மீதான நோய் தாக்கத்தினால் (பூச்சி மற்றும் வைரஸ் தாக்கம்) இலைகள் சுறுளடைவதாகவும், இதற்கான தீர்வு தேவை எனவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, வெப்ப நிலை அதிகரிப்பும் திடீர் மழையும் காரணம் எனவும், Green colour lable கிருமிநாசினி களை பயன்படுத்தலாம் எனவும் எல்லைப் பயிர் மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தும் மிளகாய் உற்பத்தியினை பாதுகாக்கலாம் எனவும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உடுவில் பிரதேச விவசாயி ஒருவர் மிளகாய் உற்பத்தியில் வெற்றியடைந்துள்ளதால் அவரின் விவசாய இடத்தினை பிரதி விவசாயப் பணிப்பாளர் அவர்கள், வேலணை பிரதேச விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டு அனுபவப் பகிர்வை பகிர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
4.உசன், கரம்பகம் எழுதுமட்டுவாழ் விவசாய நிலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதால் வாய்க்கால் அமைத்து நீரோட்டத்தினை பாய்ச்சுவதற்கான மதிப்பீட்டினை மாவட்டச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பி வைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
5.மேட்டுக் காணிப் பயிர்களுக்கான உர மானியம் வழங்குமாறு விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, அண்ணளவாக 2000 ஹெக்டேயர் மேட்டுக்காணிக்கு ஒரு ஹெக்டேயருக்கு 15000.00 வீதம் வழங்க வேண்டிய விவசாயிகள் கோரிக்கையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைப்பது எனத் தெரிவிக்கப்பட்டது.
6.குடத்தனை வலி கண்டியில் குப்பைகளை எதிர்காலத்தில் இடுவதனை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டதுடன், இதனை பருத்தித்துறை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச, நகர சபை செயலாளர்கள் உறுதிப்படுத்துமாறும் தீர்மானிக்கப்பட்டது.
7.இந்திய அரசினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள உழவு இயந்திரங்கள் மற்றும் பழுதடைந்துள்ள உழவு இயந்திரங்களின் முழுமையான விவரங்களுடன் யூன் மாதம் 30 ஆம் திகதி கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
8.விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தில்உள்வாங்கப்பட்ட பயனாளிகளின் முழுமையான விவரங்களை பெற்று அதனை பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிவைப்பது எனவும், இதன் மூலம் இத் திட்டத்தில் வெற்றியடைந்த மற்றும் தோல்வி அடைந்தவர்களை இனங்கான முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
9.தென்னை மரங்களை பாதிப்புக்குள்ளாக்கும் வெண் ஈ தொடர்பாக, தென்னை மரங்களுக்கு தென்னை அபிவிருத்திச் சபையின் 15 தெளிகருவிகள் மூலம் வேப்பெண்ணெய் தெளித்து கட்டுப்படுத்த - முதற்கட்டமாக சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுகளில் யூன் மாதம் 09 ஆம் திகதி யிலிருந்து 14 ஆம் திகதி வரையும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 23 ஆம் திகதியும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஒருங்கினைப்பில் தென்னை அபிவிருத்திச் சபையின் மேற்பார்வையில் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
10.பாதீனித்தியத்தை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் ஒருங்கினைந்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டது.
11.அடுத்த கூட்டத்தினை யூலை மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவது எனவும், அக் கூட்டத்தில் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்களை ஆராய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வங்கி மற்றும் காப்புறுதி சேவை பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6
 
பாதுகாப்பும் சமூகங்களின் நலன் மேம்படுத்தும் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (29.05.2025) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கும் சேவை வழங்குநர்களுக்கும் இடையே எல்லோரையும் உள்ளடக்கும் ஆட்சி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகங்களிலிருந்து 20 கிராம அலுவலர் பிரிவுகளில் இத் செயற்றிட்டம் SOND (அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு ) நிறுவனத்தின் அனுசரனையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம் எனவும், அவ் மக்களை சரியான முறையில் ஆற்றுப்படுத்தும் பொறிமுறையை எவ்வாறு முன்னெடுக்கலாம் எனவும் தெரிவித்துடன், இக் கலந்துரையாடலில் ஆராயப்படும் விடயங்கள் நலிவுற்ற சமுதாயத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிவகைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சமூக மட்ட அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் இவ் விடயங்களில் ஈடுபடுத்துமாறும் தெரிவித்தார்.
மேலும், இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலை யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச செயலகங்களில் யூன் 16ம் திகதி 2.00 மணிக்கு சமூக மட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களையும் இணைத்து கூட்டத்தை நடாத்துமாறு கேட்டுக்கொண்டாா்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான விடயங்களை SOND நிறுவன மாவட்ட இணைப்பாளர் திரு.செந்தூர்ராஜா அவர்கள் தெளிவுபடுத்தினார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ,மாவட்ட சமுர்த்திப் ணிப்பாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர்,யாழ்ப்பாண உதவி பிரதேச செயலாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர்,பிரதேச செயலக பெண்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள், SOND நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டமானது அரசாங்க அதிபரும் பண்பாட்டு பேரவையின் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.05.2025)காலை 09.45 மணிக்கு கேட்போர் கூடத்தில் மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கலைஞர் கெளரவிக்கப்பட வேண்டும் எனவும், மாதாந்தம் ஒரு கலை நிகழ்ச்சி யாவது நடைபெறுவதற்கு ஒழுங்கமைப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், பண்பாடுட்டுப் பேரவைக் பொதுக் கூட்டத்தினை எதிர்வரும் யூன் மாதம் 28 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் அப் பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகளவான கலைஞர்கள் பங்குபற்றுவதனை கலாசார உத்தியோகத்தர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், யாழ்ப்பாண பண்பாட்டு விழாவினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4