புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.05.2025) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றதற்கமைய, இச் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட தேவைப்பாடுடைய பயனாளிகளுக்கும் புதிய இலவச நீரிணைப்புக்கள் வழங்குவதற்காக பிரதேச செயலாளர்களுடன் இத் தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில், முதற்கட்டமாக தெல்லிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவில் காணப்படும் நீரிணைப்பிலிருந்து புதிதாக புதிய இணைப்புக்களை விஸ்தரிப்பதற்கும், தாழையடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் கரவெட்டி, கோப்பாய் , சாவகச்சேரி, நல்லூா், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இலவச நீர் விநியோகம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக இவ் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 500 பயனாளிகள் தெரிவு செய்யவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள் (கரவெட்டி , கோப்பாய் , சாவகச்சேரி, நல்லூா், தெல்லிப்பழை, யாழ்பபாணம் பருத்தித்துறை மற்றும் வேலணை), தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் மற்றும் மீள்குடியேற்றப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4
உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.05.2025) பி. ப 03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் அவர்களால் பிரதானமாக பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
1.விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் போன்ற துறைகளின் தற்போதைய நிலவரங்களும், வாழ்வாதாரத் துறைகளுக்கா தேவைப்பாடுகளும் உள்ளூர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்புக்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
2.யாழ்ப்பாண மாவட்டத்திற்கான சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பில் விசேடமாக யாழ்ப்பாண கோட்டை மற்றும் பழைய கச்சேரியினை புனரமைத்து மரபுரிமை சுற்றுலா அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கான அவசியத்தினையும் எடுத்துக்கூறினார்.
3.பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிலையான வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைகளும் அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டது.
4.தெல்லிப்பளை காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயமாக பிரேரிக்கப்பட்ட பகுதியில் எதிர்கால முதலீடு மற்றும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகவும், அதற்கான தொழில் வாய்ப்புக்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் விளக்கப்பட்டன.
5.தனியார் துறைகளின் அபிவிருத்தி மூலம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியும் எனவும், அதற்கான தனியார் துறைகளின் முதலீடுகளுக்கான தேவைப்பாடுகள் மற்றும் வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
6.பலாலி சர்வதேச விமான நிலையத்தினை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியின் அவசியம் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலினைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக பழைய கச்சேரியினை குழுவினர் பார்வையிட்டனர்.
இக் கலந்துரையாடலில் உலக வங்கி குழுவின் வதிவிடப் பிரதிநிதி திரு. விக்டர் அந்தோணிப்பிள்ளை, மாலைதீவு மற்றும் இலங்கைக்கான வதிவிட முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட செயற்பாட்டு அலுவலர் திரு. ஸ்றீபன் மசீங், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு அலுவலர் திருமதி ருக்சினா குணரட்ன மற்றும் இணைந்த செயற்பாட்டு அலுவலர் திரு. மொகமட் கவீஸ் சைநூடீன் ஆகியோா்
பங்குபற்றினார்கள்.
 
 
1 2 3 4 5
 
பழைய பூங்கா வளாகத்தினை மேம்படுத்துதல்தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.05.2025) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், பழைய பூங்கா வளாகமானது முதலாவது அரசாங்க அதிபர் அவர்களினால் தனியாரிடம் கொள்வனவு செய்யப்பட்டு அரசாங்க அதிபர் பெயரில் எழுதப்பட்ட வளாகம் எனவும், அவ் வளாகத்திலுள்ள சில காணிகள் ஏற்கனவே அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டு அலுவலகங்கள் செயற்பட்டு வருவதாகவும், வளாகத்தினை சரியான பொறிமுறைகள் ஊடாக பராமரிக்க வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக முறையாக பேண வேண்டிய அவசியத்தினையும் அரசாங்க அதிபர் எடுத்துக்கூறினார்.
இக் கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.பழைய பூங்கா வளாகத்தில் இனிவருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது
3.வளாகத்தில் உள்ள திணைக்களங்களிலிருந்து காணிக்கான விலைமதிப்பீட்டிற்கு அமைய, வாடகை அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது
4.பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரியின் பாதுகாப்பு கருதி வேலி அமைப்பது தொடர்பாகவும், புனரமைப்பது தொடர்பாகவும் தொல்லியல் திணைக்களத்திற்கு அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது
5.வளாகத்தில் மரக்கன்றுகளை நடுவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது
மேலும், பழைய பூங்கா வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புத் தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. கே. திருக்குமார், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திரு. எஸ். ரமேஷ்குமார், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு. எஸ். சுதர்சன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதிப்பணிப்பாளர் நகர அபிவிருத்தி அதிகாரசபை, பொறியியலாளர் இலங்கை மின்சார சபை, நீர்ப்பாசன திணைக்களம், தேர்தல் திணைக்களம் மற்றும் நில அளவைத் திணைக்கள ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8  9
 
 
விரைவில் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.05.2025) மு. ப 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றிமுடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை வலியுறுத்தினார். மேலும், ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளின் முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர் கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளை நேரடியாக ஆய்வு செய்ததுடன், வேலைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் பணிப்புரைகள் வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலிலும், நேரடியான களதரிசிப்பிலும், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. கே. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8
சாதனை படைத்த மாற்றுத்திறன் நபர்களுக்கான கெளரவிப்பும் சாதனைக்கு ஊக்குவித்த உத்தியோகத்தர் களுக்கான மெச்சுரை வழங்கல் நிகழ்வும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.05.2025) மு.ப 10.00 மணிக்கு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .
இந்தக் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமது உரையில், தற்போது மாற்றுத் திறனாளிகளின் இயலுமைத் திறன் மேன்மைப்பட்டு, சமூகத்தில் மற்றவர்களுடன் போட்டி போடும் அளவிற்கு இருக்கிறார்கள். உள்ளூர் உற்பத்திளை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், மாற்றுத்திறன் நபர்களே வேலை வாய்ப்புக்களையும் வழங்கிவருவது பாராட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டியானது
அண்மையில் கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது எனவும், எமது மாவட்டத்திலிருந்து 16 போட்டியாளர்கள் பங்குபற்றி 02 தங்கப் பதக்கங்களையும் 03 வெற்றி சான்றிதழ்களையும் யாழ்ப்பாண மாவட்டம் பெற்று சாதனைபடைத்துள்ளது எனவும், அந்தவகையில் குண்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற திரு.தர்மலிங்கம் சிறிகாந் அவர்களும் தட்டெறிதலில் தங்கப் பதக்கம் பெற்ற செல்வி பாலசந்திரன் கிருசிகா அவர்களும் தலா 20 ஆயிரம் ரூபா காசோலை வழங்கப்படுவதாகவும், தேசிய போட்டியில் வெற்றிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் வீரர்களை மாவட்ட மட்டத்திலிருந்து தேசிய போட்டி வரை ஊக்குவித்து வழிப்படுத்திய சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சுவாபிமானி மாவட்ட மட்டப் போட்டியில் - சிறந்த பிரதேச சுவசக்தி அமைப்பாக யாழ்ப்பாண பிரதேச செயலக பிரதேச சுய உதவிக்குழுவும், சிறந்த சுவசக்தி அங்கத்தவராக யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த திரு. ஆசைப்பிள்ளை மகேந்திரன் அவர்களும், சிறந்த காட்சிப்படுத்தும் படைப்பினை மேற்கொண்ட கோப்பாய் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த திரு. தம்பிராசா சுரேஷ்குமார் அவர்களும், வீட்டு மட்டத்தில் வெற்றிகரமாக சமூகமயப்படுத்தப்பட்ட மாற்றுத்திறன் நபராக காரைநகர் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த திரு. தம்பிராசா இராதாகிருஷ்ணன் அவர்களும், சிறந்த பிரதேச மட்ட வழிநடாத்தல் குழுவாக நல்லூர் பிரதேச செயலக பிரிவின் குழுவும் மாற்றுத்திறன் நபர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு பங்களிப்புச் செய்த ஊழியர் எண்ணிக்கை 50 இற்கு குறைவான சிறந்த சேவை வழங்குனராக மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வுச்சங்கமும், சிறந்த பிரதேச உத்தியோகத்தராக வேலணை பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திருமதி றெக்சன் சுவர்ணா டலிமா அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க விடயம் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டு, தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சாதனையாளர்கள் அரசாங்க அதிபர் அவர்களினால் கெளரவிக்கப்பட்டார்கள்.
இறுதியாக நன்றியுரையினை மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. தி. உமாசங்கர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில் சாதனை படைத்த மாற்றுத்திறன் நபர்கள், பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
 
 
 
1 2 3 4 5 6 7 8