உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுடனான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.05.2025) மு. ப 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து 05.05.2025 ந் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுடன் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து ஒழுங்குகள், முறைப்பாடுகளுக்கான உடனடி நடவடிக்கைகள், வட்டாரங்களில் இடம் பெறும் வாக்கெண்ணலின் போதான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாவட்டச் செயலகத்தில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற ஆசனங்களை அறிவிக்கும் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளடங்கலாக பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் சுதந்தரமாகவும், சுமூகமாக நடைபெற்றதாகவும் இதற்கு வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய ஒத்துழைப்பு காத்திரமானது எனவும், அதற்காக தமது நன்றியினை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, பிரதி தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன், முறைப்பாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் திரு. ப. பிரபாகர், யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.05.2025 ) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்குமாக 243 வட்டாரங்களுக்காக 3519 போட்டியாளர்கள் போட்டியிடுவதாகவும், வேட்பாளர்கள் சட்டங்கள் மற்றும் சுற்றுநிருபத்திற்கு அமைய சனநாயக ரீதியில் பிரச்சார நடவடிக்கைகளை எதுவிதமான முரண்பாடுகளுமின்றி ஆரோக்கியமாக மேற்கொள்வதனை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 517 வாக்களிப்பு நிலையங்களுக்கும், வட்டாரங்களில் நடைபெறும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் மற்றும் மாவட்டச் செயலகத்தில் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட இறுதி ஆசனங்களின் எண்ணிக்கை யினை வெளியிடும் நிலையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்களை சரியான பொறிமுறையூடாக சட்டத்தின் மூலம் நியமித்து நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட சிறப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டதுடன், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்கள் தெளிவூட்டல்களை முன்வைத்தார்.
இக் கலந்துரையாடலில் தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன், முறைப்பாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் திரு. ப. பிரபாகர், அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் சுயேச்சைக்குழுத் தலைவர்கள் பங்குபற்றினார்கள்.
 
 
1 2 3 4
தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத் அவர்களினால் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்றைய தினம் (01.05.2025) மு. ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சி. சுதீஸ்னர் மற்றும் பருத்தித்துறை பிரதேதச செயலாளர் திரு. சி. சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விடுவிக்கப்பட் காணிகளின் விபரங்கள் :
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் : காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மாங்கொல்லை எனும் கிராம் (15.13 ஏக்கர் காணி) இதன்மூலம் காங்கேசன்துறை மேற்கில் தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டகப்புலம் கிராம் (20 ஏக்கர் காணி)
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் :
கற்கோவளம் கிராமம் (5.57 ஏக்கர் காணி)
நாளைய தினம் அப் பிரதேசத்தில் உள்ள கண்ணிவெடி தொடர்பான பரிசீலனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குரிய உரிமையாளர்கள் தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
 
 
1 2 3 4 5 6 7
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, இணைப்பு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (02.05.2025) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் இம் முறை 517 வாக்களிப்பு நிலையங்களில் 243 வட்டாரங்கள் உள்ளடக்கியவகையில் - 1 மாநகரசபையிலும், 3 நகர சபைகளிலும், 13 பிரதேச சபைகளிலும் மொத்ததமாக 17 உள்ளூர் அதிகார சபைகளிலும், 498,140 வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபடவுள்ளதாகவும், 6320 அரச உத்தியோகத்தர்களும், 1048 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தாா்.
மேலும், தேர்தல் நடைமுறைகள் ஒன்றாக காணப்பட்டாலும், வாக்கெண்ணல் செயற்பாடு வட்டார நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களே வட்டாரத்தின் பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களாகவும், நியமிக்கப்பட்டுள்ள்ளதாகவும், தேர்தலை நடாத்தும் பொறுப்பு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரைச் சார்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டு, வட்டாரங்களுக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் இணைத் தொடர்பை ஏற்படுத்தும் பொறுப்பும் இணைப்பு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குரிய செயற்பாடாகவும் உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களுக்குரிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெரிவித்து, நடைபெறவுள்ள தேர்தலில் தங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பாக, பொறுப்பாக நியமிக்கப்பட்ட இணைப்பு தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. பொ. தயானந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.04.2025) பி.ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 131.20 மில்லியன் ரூபா நிதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை உரிய காலத்திற்குள் நிறைவேற்றி முடிக்குமாறும், திட்டங்கள் நிலைத்திருக்கக்கூடிய வகை அமைந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், திட்டங்களை அமுல்படுத்திய பின்னர் அதனை சரியான முறையில் பாராமரிக்கும் பொறிமுறையினையும் பேண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், காரைநகர், தெல்லிப்பளை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான அரசாங்க அதிபரால் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டது.
1.தெல்லிப்பளை - கீரிமலை கடற்கரை பகுதியில், பிதிர்க்கடன் நிறைவேற்றும் செயற்பாட்டிற்கு இடையூறாக உள்ள கற்களை அகற்றி பாதுகாப்பான முறையில் பிதிர்க்கடன் மேற்கொள்வதற்கான பொருத்தமான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் குறிப்பாக கடற்கரையில் காணப்படும் கற்களை அகற்றி கடற்கரையினை சீர் செய்வதற்காக அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா. 35.00 மில்லியன் நிதி ஒதுக்கீடு அமைச்சால் விடுவிக்கப்பட்டுள்ளதால் - அத் திட்டத்தினை சிறப்பாகவும் விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உரிய அறிவுத்தல்கள் வழங்கப்பட்டது. மேலும், காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா வின் பகுதி கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சிறுவர் பூங்கா விற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் அவ் விடத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதனாலும் அதனை புனரமைப்புச் செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
2.காரைநகர் கசூரீனா கடற்கரையினை சிறந்த வசதிகள் கொண்ட கடற்கரையாக மாற்றுவதற்கு ஒதுக்கிடப்பட்ட நிதிக்கு அமைய, நேரடியாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து களவிஜயம் செய்து அபிவிருத்தி திட்டங்களை ஆராய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
3.தீவக சுற்றுலாவினை மேம்படுத்தும் வகையில், ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாக குறிப்பாக அனலைதீவிலுள்ள புளியன்தீவு படகுத்துறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் படகுத்துறை புனரமைப்பு செய்வது தொடர்பாகவும், ஊர்காவற்றுறை படகுத் துறைப் பகுதியில் மரம் நாட்டி சுற்றுலாப் பயணிகள் இருக்கதக்க வகையில் இருக்கைகள் அமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் நேரடியாக களவிஜயம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், தெல்லிப்பளை, காரைநகர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6