எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்கு பொறுப்பான உதவித் தெரிவாட்சி அலுவலர்களுடனான முன்னேற்றக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (29.04.2025) பி.ப 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களுக்கு குழுக்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கடமைகள் தொடர்பாகவும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் அவர்களால் ஆராயப்பட்டது. பின்வரும் விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு மேலதிக அறிவுறுத்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டது.
1.இதுவரை முறைப்பாடுப் பிரிவிற்கு கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கான நடவடிக்கைகளை கேட்டறிந்ததுடன், பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேலதிக ஆளணிகளையும் பெற்று இணைந்த வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
2.தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பணியாட்களின் விபரங்கள் தொடர்பாகவும், களஞ்சிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து உரிய அறிவுத்தல்கள் வழங்கப்பட்டது.
3.போக்குவரத்து வசதிகள் தொடர்பாக ஆராய்ந்து, தேர்தல் கடமைக்காக தேவைப்படும் வாகனங்களை உரிய காலப்பகுதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
4.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமையவுள்ள மண்டப ஒழுங்குகள் தொடர்பாக ஆராயப்பட்டு, மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
5.உத்தியோகத்தர்களுக்கான நலனோம்பல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
6.பொது வசதிகள் குறிப்பாக குடிநீர், மலசல கூட வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
7.தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் ஒருங்கிணைப்பு செயற்பாடு தொடர்பாகவும் ஆராய்ந்து உரிய அறிவுத்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரால் வழங்கப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக பிரதித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் "உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்" எனும் தொனிப் பொருளிலான இரத்ததான நிகழ்வானது நலன்புரிச் சங்க தலைவரும் உதவி மாவட்டச் செயலாளருமான செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் பங்குபற்றுதலுடனும் இன்றைய தினம் (29.04.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் இரத்ததான ஆரம்ப நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய கலாநிதி P. கண்ணன், பொதுச் சுகாதார பரிசோதகர் திரு. த.ரவீனதாஸ், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
மேலும், இரத்ததான நிகழ்வில் 25 மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் குருதிக் கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக , வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் 18 கூடுகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்றைய தினம் (28.04.2025) மு. ப 09.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் வைத்து Save a Life நிறுனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. இராகுலன் அவர்களால் கையளிக்கப்பட்டது.
மாவட்டச் செயலகம் அதனை அண்டிய பகுதியில் வைப்பதற்காக 03 கூடுகளும், மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தலா ஒன்று வீதம் வைப்பதற்காக 15 கூடுகளுமாக 18 கூடுகள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், வெற்றுப் போத்தல்களால் கூடு நிரம்பியவுடன் அதனை குறித்த நிறுவனம் மீள சுழற்சிக்காக எடுத்துச் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் கையளிப்பு நிகழ்வில் பிரதம பொறியியலாளர் திரு. க. திருக்குமார் , உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, Save a Life நிறுவன தொழில் நுட்ப முகாமையாளர் திரு. ம. கீதானந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஆவணங்கள் விநியோகித்தல் மற்றும் பாரமெடுத்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.04.2025) மு. ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்படவுள்ள 35 நிலையங்களிலிருந்து 517 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள்,வாக்குச் சீட்டுக்கள் அதற்குரிய ஆவணங்களையும் விநியோகிக்கும் மற்றும் பராமெடுக்கும் நிலையமாக செயற்படவுள்ளது எனவும், அவ் நிலையங்களுக்கு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமிக்கப்படும் அலுவலகர்களின் பங்களிப்பானது மிகவும் முக்கியத்துவமானது எனத் தெரிவித்தார். மேலும், 05.04.2025 ஆம் திகதி அன்று காலை 07.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு சமூகமளித்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்குஉரிய வகையில் வாக்குப் பெட்டிகளையும் ஆவணங்களையும் கையளிக்கும் அதேவேளை 06.05.2025 ந் திகதி பி.ப 05.00 மணியிலிருந்து வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களால் கையளிக்கப்படவுள்ள வாக்குப் பெட்டிகளையும் ஆவணங்களையும் உரிய வகையில் பெற்றுக்கொள்வதில் மிக வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், இத் தேர்தல் சிறப்பாக அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற சிறப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இச் செயலமர்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் பாரமெடுத்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் களஞ்சியத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரான பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் அவர்களும் கலந்து கொண்டார்.

அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளைமுறையிடுவதற்கு "உள்ளக அலுவல்கள் அலகு" எனும் பிரிவானது இன்றைய தினம் (28.04.2025)காலை 09.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது.
இவ் அலகினை திறந்துவைத்து உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில்உள்ளக அலுவல்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் செயற்பாடுகளை தடுப்பதாகவும் அதேவேளை அலுவலக செயற்பாடுகள் வெளிப்படுத்தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமையவும், அதேவேளை பொதுமக்கள் மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான விபரங்களை அறிந்து கொள்வதற்கும், குறிப்பாக அலுவலக நடைமுறைகள் தொடர்பாகவும் அல்லது ஏதாவது விடயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்ற போது இப் பிரிவை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதற்கு ஸ்தாபிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதன் அடிப்படையில் நம்பகத்தன்மையான அலுவலகமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பின் இந்த அலுவலகத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் வெளிப்படுத்தன்மை மற்றும் ஊழலற்ற இலஞ்சமற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிர்வாகத்தின் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன், பொதுமக்கள் அவர்களின் பிரச்சினைகளை அணுகக்கூடியதாகவும் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்களுக்கான தகவல்களை வெளிக்கொணர வேண்டிய கடப்பாட்டு ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முன்பு அரச அலுவலகங்களில் வெளிப்படுத்தன்மை குறைவாக காணப்பட்டதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டம் வந்ததன் பின்னர் அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் வெளிக்கொணர வேண்டிய தேவை உள்ளதாகவும் 12 ஆண்டுகளுக்கு ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரச உத்தியோதர்களாகிய நாம் இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதற்கு மேலதிகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் சரத்துக்களை ஆராயும் ஆணை குழுவிற்கு அதன் விடயங்கள் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துடன், நிர்வாக நடைமுறைகளை மேலும் வலு சேர்ப்பதற்கு வினைத்திறனாக செயல்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவின் இணைப்பாளராக திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ் அலுவலகத்தில் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பாக கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்து மேலதிக நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்படும்.
உள்ளக அலுவல்கள் பிரிவின் நோக்கங்கள் தொடர்பாக திட்டமிடல் பணிப்பாளர் அவர்களால் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.
1.நிறுவனத்தில் ஊழலைத் தடுத்தலும் ஒருமைப்பாட்டு கலாச்சாரத்தை வளர்த்தலும்
2.நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை உறுதி செய்தல், மற்றும் நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அணுகுவதை உறுதி செய்தல்.
3.நிறுவனத்திற்குள் நெறிமுறை ஆளுகையை மேம்படுத்துதல்.
4.தவறான நடத்தைகளை புகாரளிப்பதற்கும் விசாரணையாளர்களை பாதுகாப்பதற்கும் மற்றும் இரகசியத் தன்மையை பேணுவதற்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் அணுகக் கூடிய அமைப்பை உருவாக்குதல்
5 சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆதரவளித்தல்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






