வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (25.04.2025) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தொடர்பாக தேர்தல் நடைமுறைகள் ஒன்றாக காணப்பட்டாலும், வாக்கெண்ணல் செயற்பாடு வேறுபட்டதாக அமையும் எனவும், குறிப்பாக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வட்டார நிலையங்களில் வாக்கெண்ணல் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களே வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாகவும், வட்டாரத்தின் பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களாகவும், பெறுபேறுகளை வெளியிடும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்குரிய கடமைகளை சரியான அறிவுறுத்தல்களை பின்பற்றி வினைத்திறனாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், தேர்தலை நடாத்தும் பொறுப்பு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரைச் சார்ந்திருப்பதால் சரியான முறையில் அறிவுறுத்தல்களை தெளிவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டதுடன், தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களுக்குரிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெரிவித்து, நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பாக வட்டாரத்துக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் பிரதம வாக்கெண்ணும் அலுவலராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான கடமைகள் தொடர்பாகவும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணல் நிலையங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளரும் போக்குவரத்து ஒழுங்குகளுக்கு பொறுப் பாகவுள்ள உதவித்தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. F.C . சத்தியசோதி அவர்களால தெளிவுபடுத்தப்பட்டதுடன் தேர்தல் கட்டுபாட்டுப்பிரிவின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளரும் கட்டுபாட்டுப் பிரிவின் உதவித்தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. எஸ். ரமேஷ்குமார் அவர்களாலும் விளக்கமளிக்ப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வட்டாரத்துக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் கெளரவ ரி. பி. சரத் ஆகியோா் இன்றைய தினம் (25.04.2025)ஆம் திகதி காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களைச் சந்தித்து மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ஆரியரட்ண, மேலதிகச் செயலாளர் திரு. எம். எம். நயமுதீன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் ஆகியோரும் உடனிருந்தார்கள்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கெளரவ அமைச்சர் மற்றும் கெளரவ பிரதி அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை வரவேற்று, யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக இவ்வாண்டு 1258 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு அதற்கான தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதுடன், மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முன்னேற்றங்களை விபரித்தார். மேலும்
வீட்டுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரூபா 1 மில்லியன் நிதி போதாமையாகவுள்ளதாகவும் அதனை ரூபா 1.5 மில்லியனாக அதிகரிக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை முன்வைத்ததுடன், இதுவரை விடுவிக்கப்பட்ட காணி மற்றும் விடுவிக்க வேண்டிய காணியின் விபரங்கள்,தெல்லிப்பளை பிரதேச உள்ளக வீதி அபிவிருத்தி, குடிநீர் வசதிகள், மின்சார இணைப்பு வசதிகள் தொடர்பாகவும் விளக்கமளித்து அது தொடர்பான கோரிக்கைகளும் அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ அநுர கருணாதிலக அவர்கள் தமது அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றிலொரு பங்கு மீள்குடியேற்றம் உட்பட ஏனைய திட்டங்களுக்காக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தேவைப்பாடுகளை சாதகமாக பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடிய நிதி ஒதுக்கீடு செய்ய திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டதுடன், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் உரிய திட்டங்களுக்கு செலவு செய்து முன்னேற்ற அறிக்கைகளை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடல் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபை யின் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (24.04.2025)மாலை 4.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள் நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு காத்திரமான பங்களிப்பு வழங்கியமைக்கு நன்றியினைத் தெரிவித்ததுடன், இம் முறையும் பிரதேச செயலாளர்களின் பங்கு அதிகளவில் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தங்கள் பிரிவில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தெரிவித்ததுடன் தேர்தல் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்களான பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் 2024 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் பண சேகரிப்பு அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பருத்தித்தறை, நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்கள் பெற்றிருந்ததுடன், அங்கத்தவர்கள் இணைப்பு அடிப்படையில் தேசிய விருதிற்கு நல்லூர், பருத்தித்துறை, கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
மேலும் இம் முறை ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலை சிறப்பாக மேற்கொண்ட உத்தியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள்
மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (24.04.2025) பி.ப 5.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து பிரதேச செயலாளர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர் திரு. த.சங்கர் கலந்து கொண்டார்.

தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES ) ஏற்பாட்டில் , இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர்ஸ்தானியராலயத்தின் நிதி அனுசரணையுடன் பங்குபற்றல், பரிந்துரைத்தல், குரல் கொடுத்தல், வலுவூட்டல் (PAVE) எனும் தொனிப்பொருளில் , யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான அணுகல் வசதி தொடர்பான ஆய்வு அறிக்கை வெளியீடு 23.04.2025 ஆம் திகதி அன்று யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றது.
இச் செயற்பாடு PAVE செயற்திட்ட இளைஞர் குழுவின் ஒர் சமூக பரிந்துரை முன்னெடுப்பு முயற்சியாகும்.
ஆய்வறிக்கையின் முதற்பிரதியினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பெற்றுக்கொண்டு உரையாற்றுகையில், யாழ் மாவட்டத்தில் தேர்தல்களின் போது இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான விசேட ஆயத்தங்கள் துறை சார் திணைக்களங்கினால் மேற்கொள்ளப்பட்டு வருவதனையும், மேலும் எவ்வாறு மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதார உள்ளடக்கம் பற்றியும் கருத்துக்களை வழங்கியிருந்தார்.
இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான உள்ளடங்கலான தேர்தல் வசதிப்பாடுகளின் முன்னேற்றம் குறித்து பங்குதாரர்களால் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஆய்வின் முக்கிய பரிந்துரைகள் துறை சார் அதிகாரிகளிடம் இளைஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராயப்பட்டன.
இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியின் வட பிராந்திய அலுவலகத்தின் கள ஒருங்கிணைப்பு அலுவலர், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர், யாழ் மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர் , இயலாமைகளை கொண்ட நபர்களுக்காக பணிபுரியும் அமைப்புக்கள் , IFES நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அலுவலர் துறைசார் அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





