2015 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப்படுத்தப்பட்ட நிதிச் செயலாற்றுகையின் மதிப்பீட்டின் கீழ் இலங்கையில் உள்ள 844 நிறுவனங்களின் நிதிச் செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் 2018 ஆம் ஆண்டு பாராளுமன்ற கணக்கீடு தொடர்பான நிதிச் செயலாற்றுகையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக நாடாளுமன்ற பொதுக்கணக்குகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளில் 110 நிறுவனங்களுக்கு அதி உயர் நிதிச் செயலாற்றுகையை வெளிப்படுத்தியமைக்காக விருதுகளும்இ சான்றிதழ்களும் பாராளுமன்றத்தில் வைத்து 28.02.2020 வழங்கப்பட்டது. இவ் விருது வழங்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபர் உயர் திரு. க.மகேசன் அவர்கள் கலந்து கொண்டு 97 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்ற யாழ்.மாவட்ட செயலகத்திற்கான தங்கவிருதினைப் பெற்றுக்கொண்டார் .
PEACE ( எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாப்போம்) அமைப்பினால் " சிறுவர் நேரலை ( online) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு" செயலமர்வு 25.02.2020 அன்று காலை 9 மணிமுதல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிறுவர்கள் இணையதளங்களில் எதிர்நோக்கும் பாலியல் ரீதியான சுரண்டல் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக 22, 23, 24, 25ஆம் திகதிவரை செயலமர்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் PEACE நிறுவன செயற்திட்ட உத்தியோகத்தர்கள் சட்டத்தரணி திரு. ரெயான் நடேசராஜா, செல்வி. ஆன் பிகிறாடோ, செல்வி. ரமா மற்றும் மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு இணைப்பாளர் திரு. க.மனோகரன் ஆகியோர் வளவாளராக கலந்துகொண்டதோடு சிறுவர்களின் பெற்றோர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
நவீன திறன் விருத்தி வகுப்பறைகள் அமைக்கப்பட்ட பாடசாலைகளிற்கு மடிக்கணணி வழங்கும் நிகழ்வு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கௌரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பங்குபற்றுதலுடனும், யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களது தலைமையிலும் யாழ்மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.02.2020 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் உயர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) திரு.சு.முரளீதரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கல்வியெனும் அபிவிருத்தி இலக்கு நோக்கி தொலைதூரம் பயணித்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மலையகத்தினைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கௌரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பங்குபற்றுதலுடனும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களது தலைமையிலும் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 21.02.2020 அன்று மதியம் 12.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்(அபிவிருத்தி) திரு.கே. விமலநாதன், மேலதிக செயலாளர்(அபிவிருத்தி) திரு.பா.செந்தில்நந்தனன், பணிப்பாளர்(அபிவிருத்தி) திரு.வே.பிறேமச்சந்திரன், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) திரு.முரளீதரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபராக உயர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இன்று 17.02.2020 (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் மதகுருமார்களின் ஆசிச் செய்தியுடன் வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானதோடு இந்நிகழ்வில் அரசாங்க அதிபரின் பாரியார் திருமதி. வனிதா மகேசன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,உத்தியோகத்தர்கள்,நலன்விரும்பிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டிருந்தார்கள். யாழ்.மாவட்ட செயலக புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் 1985- 1989 ஆண்டு யாழ். பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாக தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு பின்னர் சர்வதேச உறவுகளுக்கான பட்டப்படிப்பின் டிப்ளோமா மற்றும் ஜனாதிபதி புலமைப்பரிசில் தாய்லாந்து ஆசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தையும் (MBA) பெற்றார். 1991 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் திறந்த போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டார்.






