யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மாவட்ட சிரேஸ்ட பேரவையும் இணைந்து நடாத்திய சர்வதேச முதியோர், சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (12.10.2022) மாலை 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக “குடும்பங்களின் இன்றைய நிலை” தொடர்பான வீதி நாடகம் செம்முகம் ஆற்றுகை குழுவினால் வழங்கப்பட்டதுடன், “முதியோர், சிறுவர்களிடையே ஆளிடைத்தொடர்பைக் கட்டியெழுப்புதல்” தொடர்பாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி முதல்வர் திரு.லலீசன் அவர்களினால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது.
அத்துடன், சிறுவர் கழகமும் முதியோர் சங்கமும் இணைந்து நடாத்தும் ஆற்றுகை நாடகம், சிறுவர் பள்ளியின் குழு நடனம், தனிநடனம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்துடன் முதன்மை விருந்தினராக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் முதியோர்களையும் சிறுவர்களையும் இணைத்து இந்நிகழ்வை நடாத்தியமை சிறப்பாக இருந்ததாகவும் போதை பொருள் பாவனையிலிருந்து இச்சமூகத்தைத் மீட்க பெற்றோர்கள் தம் பிள்ளைகளை சிறுவயதிலிருந்து ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என்றும் அதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

பால்நிலைக்கு எதிரான வன்முறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று (12.10.2022) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரோக்கியமான பால்நிலை, வன்முறையற்ற வேலைத்தளங்களை உருவாக்குதல் மற்றும் பால்நிலை தொடர்பான விழிப்புணர்வை அனைத்து ஊழியர்கள் மட்டத்திலும் ஏற்படுத்தல் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.ஆரோக்கியமான வேலைச்சூழலும் உளநல மேம்பாடும் தொடர்பாக உளவளத்துறை உத்தியோகத்தர் என்.உதயகுமார் கருத்துரை வழங்கினார்.
அத்துடன் வேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையற்ற ஆராக்கியமான வேலைச்சூழலை உருவாக்குதல் தொடர்பாகவும், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.தயாபரியினால் விளக்கமளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக நலன்புரிச்சங்க தலைவரும் கணக்காளருமான திரு. அ. நிர்மல் தலைமையில் இன்று (04) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொண்டதோடு, நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இயந்திரமயமான இந்த வாழ்க்கைக்கு இவ்வாறான ஆன்மிக செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதாகும் என்றும்,
நவராத்திரி பூஜையின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகனினால் வாழ்க்கையின் தத்துவங்கள், பெண்களின் சிறப்பு குறித்து சொற்பொழிவு ஆற்றப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் (10.10.2022) பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இதில், பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா அவர்கள் இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவினை மேற்கொண்டார். இவ் விஷேட நிகழ்வில் 25 பேரிற்கு பிறப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டது.

நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களை கண்டறியும் செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் 30.09.2022 பி.ப 12.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பான சுயமான விண்ணப்பங்களை ஒப்படைக்காத பொதுமக்கள் விரைவாக பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களை கண்டறியும் செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான விழிப்புணர்வூட்டல், பிரதேச மட்டங்களில் விண்ணப்பங்களை தரவுத்தளங்களில் பதிவு செய்தல், மக்களுக்கு நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பான செய்தி சென்றடைந்தமையை உறுதிப்படுத்துதல், தகுதியான நபர்களை கண்டறியும் செயற்திட்டம் தொடர்பில் வினைத்திறனான தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் என்பன தொடர்பாக ஆராயப்பட்டன.