அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், நிர்வாக அலுவலர் திருமதி A.A.F. நதிமியா, திட்ட அலுவலர் திருமதி Gnananie Wickramasinghe உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முன்னுரிமைகளில் டிஜிட்டல் பமயமாக்கலும் ஒன்றாகும். அரச சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு விரைவானதும் இலகுவானதுமான சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்தார். மேலும், தற்போது பல அரச நிறுவனங்களில் டிஜிட்டல் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவற்றுடன் பழைய கையேடு நடைமுறைகளும் தொடர்கின்றன. டிஜிட்டல் மயமாக்கலை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை கொண்டு, தேவையற்ற பழைய நடைமுறைகளை படிப்படியாகக் கைவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு சேவை, காணி சேவைகள், வாகன வரி செலுத்துதல் மற்றும் வங்கிச் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் டிஜிட்டல் மயமாக்கல் ஏற்கனவே மக்களுக்கு பயனளித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அரச நிறுவனங்களின் இலத்திரனியல் உபகரணங்கள், பணியாளர்களின் டிஜிட்டல் அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் காலத்திற்கேற்ப மேம்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரச உத்தியோகத்தர்கள் புரிந்துகொண்டு, அவற்றை அரச சேவையின் வினைத்திறனை அதிகரிக்கப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவை தமது அலுவலகங்களிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுடனும் பகிர்ந்து, அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையை நிறுவன மட்டத்தில் வலுப்படுத்த வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
பயிற்சி பட்டறை :
யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டனர். அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, சுமார் 80% அரச சேவைகளை மக்கள் கைபேசி ஊடாக வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இதற்கமைவாக, அரச சேவையின் நவீனமயமாக்கல், டிஜிட்டல் மாற்றம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் அரச சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது. பயிற்சிப் பட்டறையில் “நல்லாட்சிக்கான செயற்கை நுண்ணறிவு (AI)” உள்ளிட்ட மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களின் பயன்பாடு தொடர்பில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், டிஜிட்டல் ஊடகம் தொடர்பான பொதுக் கணினி விழிப்புணர்வு, மும்மொழி Google Forms உருவாக்குதல், மொழிபெயர்ப்பு கருவிகளின் பயன்பாடு, Mail Merge உள்ளிட்ட நடைமுறைப் பயன்பாடுகள் தொடர்பிலும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப் பயிற்சிகளை திரு. சமிச அபேசிங்க, நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO), Idasara Digital (Pvt) Ltd மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் AI தொழில்நுட்பத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர், அத்துடன் திரு. தங்கராஜ் தவரூபன், பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO), Speed IT Net (Pvt) Ltd மற்றும் Govtech Sri Lanka வளவாளர் ஆகியோர் வழங்கினர். இறுதியில் கேள்வி–பதில் மற்றும் கருத்துப் பரிமாற்ற அமர்வு இடம்பெற்றதுடன், அரச நிறுவனங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வலுப்படுத்துவதற்கான நடைமுறை அணுகுமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
1 2 3 4
5 6 7 8 9 10 12 13
 
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் ஆகிய அரச அலுவலகங்களில் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இன்று முதல் (17.09.2026) அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் பொதுமக்கள் அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை
076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் பி. ப. 5.30 மணி முதல் பி. ப. 6.30 மணி வரை நேரடி அழைப்பு ஊடாகவும் WhatsApp அழைப்பு ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
1
அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான 2026 ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட போட்டி தொடர் இன்றைய தினம் (17.09.2026) காலை 8:30 மணிக்கு சாவகச்சேரி வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த போட்டித் தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றபட்டு தேசியக்கொடி, அரச உத்தியோகத்தர் சங்க கொடி, யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க கொடி ஆகியன ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்வுடன் குறித்த போட்டி தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரச உத்தியோகத்தர்களிடையே நல்லிணக்கம், குழு உணர்வு, உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. F. C. சத்தியசோதி, யூகே பாடசாலைகள் சங்க உறுப்பினர் திருமதி மளிக் அமரசேகர, அரச உத்தியோகத்தர் வலைப்பந்தாட்ட சங்கத் தலைவர் திரு. றிக்ஷ் நாணயக்கார, யாழ் வலைப்பந்தாட்ட சங்கத் தலைவர், வளர்மதி விளையாட்டுக் கழக தலைவர், வலைப்பந்தாட்ட பயிற்றுனர்கள், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், நடுவர்கள், வளர்மதி விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள், மற்றும் வீரர்கள் பார்வையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
1 2 3 4 5 7 9 10 13 17 18 19
வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், புடவைக் கைத்தொழில் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்தும் கைவினைஞர்களுக்கான போட்டியும் கண்காட்சியும் இன்றைய தினம் (16.09.2026) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ச. கிருஷ்னேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கை. சிவகரன், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி திரு. என். எஸ். ஆர். சிவரூபன், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி செ. வனஜா, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சோபிகா றோய் றொபின்சன் உள்ளிட்ட தலைமைப் பீட மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பாரம்பரியமும் படைப்பாற்றலும் சங்கமிக்கும் கண்காட்சி வடமாகாணத்தைச் சேர்ந்த கைப்பணியாளர்கள் மற்றும் நெசவாளர்களினால் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான கைத்தறி நெசவு உற்பத்திகள், களிமண் உற்பத்திகள், தும்பு, ஓலை மற்றும் புல் சார்ந்த உற்பத்திகள், பிரம்பு மற்றும் மூங்கில் சார்ந்த உற்பத்திகள், உலோகக் கைப்பணிப் பொருட்கள், ஆபரணங்கள், சங்கீத உபகரணங்கள், துணிகளினாலான கைப்பணிப் பொருட்கள், சிரட்டை மற்றும் சிப்பியிலான கைப்பணிப் பொருட்கள், பற்றிக்ரேந்தை உற்பத்திகள், மர உற்பத்திப் பொருட்கள், தோல் பொருட்கள், கல்லாலான கைப்பணிப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், தென்னை மற்றும் பனை சார்ந்த உற்பத்திகள், நானாவித கைப்பணிப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் எனப் பல்வேறு சிறந்த படைப்புகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு கைவினைப் பொருட்களை பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிட்டு கொள்வனவு செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி நாளைய தினமும் (17.09.2026) தொடர்ந்து நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கண்காட்சிக்கு வருகை தந்து, எமது வடமாகாண கைவினைஞர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் பார்வையிட்டு அவர்களை ஊக்குவிப்பதுடன், தங்களுக்குத் தேவையான பாரம்பரிய மற்றும் கைவினைப் பொருட்களையும் கொள்வனவு செய்து பயன்பெறுமாறு வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
1 2 3 5 6 7 8 9 10 13 14 17 16 20 21

28 ஆண்டுகால அரச சேவையிலிருந்து இன்றுடன் (14.09.2026) இளைப்பாறும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாகாணப் பணிப்பாளர் திரு. சிவசோதி சிவகெங்காதரன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் பி. ப. 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வட மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெறும் திரு. சிவசோதி சிவகெங்காதரன் அவர்கள், 1998 ஆம் ஆண்டு கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் சேவையில் இணைந்தார். அவர் 1998 முதல் 2005 ஆம் ஆண்டு வரை கைத்தொழில் விரிவாக்க உத்தியோகத்தராகவும், 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதில் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். தொடர்ந்து 2007 முதல் 2017 ஆம் ஆண்டு வரை உதவிப் பணிப்பாளராகவும், 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். 2022 ஆம் ஆண்டு முதல் 14.09.2026 வரை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாகாணப் பணிப்பாளராக பொறுப்புடன் கடமையாற்றி, தனது 28 ஆண்டுகால அரசுப் பணியை நிறைவுசெய்து ஓய்வுபெறுகிறார். இந் நிகழ்வில் வரவேற்புரை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தொழில் முயற்சி ஊக்குவிப்பு முகாமையாளர் திருமதி சிவதாரணி ரமேஷ்குமார் அவர்களால் ஆற்றப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், திரு. சிவகங்காதரன் அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்புமிக்க அரச சேவையைப் பாராட்டினார். திரு. சிவகங்காதரன் அவர்கள் ஒரு திறமையான அரச உத்தியோகத்தர் என்பதற்கு அப்பால், எளிமை, பணிவு, நேர்மை, நட்புணர்வு மற்றும் மனிதநேயம் கொண்ட சிறந்த பண்பாளர் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். பதவி, வயது அல்லது அதிகார நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாது அனைவருடனும் அன்புடனும் மரியாதையுடனும் பழகும் சிறந்த பண்பு அவரிடம் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னுடன் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குவதிலும், மேலதிகாரிகளுடன் சிறந்த புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுவதிலும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எனப் பாராட்டினார்.
கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆழமான அறிவையும் நீண்டகால அனுபவத்தையும் கொண்டிருந்த அவர், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை உள்ளிட்ட பல்வேறு கைத்தொழில் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும், மாவட்டத்தின் கைத்தொழில் முயற்சியாளர்களின் வளர்ச்சியிலும் அர்ப்பணிப்புடன் பங்களித்துள்ளார் எனக் குறிப்பிட்டார். ஓய்வுபெறும் நாள் நெருங்கியபோதும், இறுதி நாள் வரை அதே அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் பணியாற்றியமை அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் ஒரு சிறந்த உதாரணம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். திரு. சிவகங்காதரன் அவர்கள் ஓய்வுக்குப் பின்னரும் தனது அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி கைத்தொழில் மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகளில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என வாழ்த்திய அரசாங்க அதிபர், அவருக்கும் அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கும் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் சிறப்பான ஓய்வுக்காலம் அமைய இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி கணக்காளர், உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் திரு. சிவகெங்காதரன் அவர்தம் பாரியார் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள். நிகழ்வில் ஏற்புரையாற்றிய திரு. சிவகங்காதரன், தமக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பான கௌரவிப்பை தாம் எதிர்பார்க்கவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததுடன், நிகழ்வை ஏற்பாடு செய்த மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.தமது நீண்டகால அரச சேவைப் பயணத்தில் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன், தம்முடன் இணைந்து பணியாற்றி ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 8 10 9 12 13 14 15 16 17 18 19 20