சிறுவர் பாதுகாப்பு என்பது அனைவரினதும் பொறுப்பு – சமூக மட்ட அமைப்புகள் இணைந்து செயற்பட வேண்டும் – அரசாங்க அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (29.09.2026) முற்பகல் 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 70 சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையுரை :
இன்றைய சமூகத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை, போதைப்பொருள் பாவனை, பாடசாலை இடைவிலகல் மற்றும் சிறுவர்களிடையேயான வன்முறை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தற்போது காணப்படுகின்றன. சிறுவர்கள் ஒரு சமூகத்தின் எதிர்காலமாக இருப்பதால், அவர்களைப் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். சிறுவருக்கான முதலாவது பாதுகாப்பான சூழல் குடும்பத்திலேயே உருவாக வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குடும்பச் சூழலுக்குள்ளேயே இடம்பெறுகின்றன. எனவே, ஆரோக்கியமான குடும்பச் சூழலை உருவாக்குவதில் பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் முக்கியப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதேபோன்று, சமூக மட்டத்திலும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நீங்கள், சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் நெருக்கமாக அறிந்தவர்களாக இருக்கின்றீர்கள். ஒரு சிறுவர் தவறான பாதையில் செல்கின்றாரா, பாடசாலைக்கு முறையாகச் செல்கின்றாரா, போதைப்பொருள் பாவனை அல்லது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றாரா என்பதை ஆரம்பத்திலேயே அடையாளம் காண முடியும். சிறுவருக்கு எதிராக ஏதேனும் அநீதி, துஷ்பிரயோகம் அல்லது அசம்பாவிதம் இடம்பெறுவது தெரியவரும் போது, அதனை உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதும் உங்கள் முக்கியப் பொறுப்பாகும். நீங்கள் நேரடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. ஆனால் பிரச்சினையை அடையாளம் கண்டு, உரிய இடத்திற்கு கொண்டு செல்வது அவசியம்.
சில சந்தர்ப்பங்களில் குடும்பக் கௌரவம், சமூக அந்தஸ்து அல்லது அச்சம் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப வன்முறை சம்பவங்கள் வெளியில் தெரிவிக்கப்படாமல் இருக்கின்றன. எனவே, பதிவாகியுள்ள சம்பவங்களின் எண்ணிக்கை மட்டுமே சமூகத்தில் இடம்பெறும் உண்மையான நிலைமையை முழுமையாக பிரதிபலிக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளை, முறைப்பாடுகளை வழங்குபவர்களின் நம்பிக்கையையும் இரகசியத்தன்மையையும் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீண்டும் மனரீதியாக பாதிக்காத வகையில் அதிகாரிகளும் சமூக அமைப்புகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இங்கு கலந்துகொண்டுள்ள சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது பகுதிகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாக உள்ளீர்கள். அந்த நம்பிக்கையை சமூக நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். சமூகப் பணியில் ஈடுபடும் போது சில சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் சமூக மட்ட பிரதிநிதிகள் செயற்படுவது தனிப்பட்ட நலனுக்காக அல்ல உங்கள் கிராமம், குடும்பங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிறுவர்களிடையே பாடசாலை இடைவிலகல், போதைப்பொருள் பாவனை, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகள் உருவாகும் போது, அவற்றை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு ஆற்றுப்படுத்துவது மிகவும் அவசியம். ஒரு சிறுவரை சரியான பாதைக்கு கொண்டு வருவது அந்த சிறுவரின் எதிர்காலத்தையும், அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும்.
எனவே, மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் சமூக மட்ட அமைப்புகள் நெருக்கமாக இணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு தனி நிறுவனத்தின் பொறுப்பு அல்ல; குடும்பம், சமூகம், பாடசாலை மற்றும் அரச நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து ஏற்க வேண்டிய பொறுப்பாகும். சிறுவர்களைப் பாதுகாப்பது அவர்களின் இன்றைய வாழ்க்கையை மட்டுமல்ல, எமது சமூகத்தின் எதிர்காலத்தையே பாதுகாப்பதாகும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து சிறுவர்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
வளவாளர்கள்:
கிராம மட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தை அடையாளம் காணுதல் மற்றும் உரிய தரப்பினரிடம் பாரப்படுத்துதல் தொடர்பில் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி மு. வாசுதேவா அவர்களும், சிறுவர் சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திரு. வ. கனகராஜ் அவர்களும் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர். இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. இ. செந்தூரன், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கியமைக்காக சிறப்பாகச் செயற்பட்ட பிரதேச செயலகங்களை மதிப்பீடு செய்து, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிரதேச செயலகங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தை நல்லூர் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை தென்மராட்சி பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை கோப்பாய் பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. இதன்போது குறித்த பிரதேச செயலாளர்கள் மற்றும் சனாதிபதி நிதியத்தின் பிரதேச விடய உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் சனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரொஷான் கமகே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. விமல் சாமிநாதன், வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினமான செப்ரெம்பர் 28 பிரகடனப்படுத்தப்பட்டதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் தலைமையில் 25.09.2026 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வானது அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான மாணவர்கள், அரசியல் விஞ்ஞான உயர்தர மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராமிய சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அறியும் உரிமைச் சட்டம், அதனைப் பயன்படுத்தும் நடைமுறை மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் தகவல் அலுவலர்களின் பொறுப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இச் செயலமர்வு நடைபெற்றது.
அரசாங்க அதிபர் அவர்களின் கருத்துரை:
இதன்போது கருத்துரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2016ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நடைமுறையில் இருந்தபோதிலும், அதன் மூலம் பொதுமக்கள் தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை தொடர்பில் மேலும் பரந்தளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். பொதுமக்கள் அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டபூர்வ உரிமையைக் கொண்டுள்ளதுடன், அவ்வுரிமையை பொறுப்புடனும் சரியான நோக்கத்துடனும் பயன்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமான கருவியாக விளங்குவதாகவும், அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், நிர்வாகத் தீர்மானங்கள், நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தவறுகள் மற்றும் குறைபாடுகளை வெளிக்கொணரவும் சரிபார்க்கவும் முடியும் எனவும் தெரிவித்தார்.மேலும், தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு அரச உத்தியோகத்தர்களிடமும் பொதுமக்களிடமும் அதிகரிக்க வேண்டும் எனவும், தமது கடமைகளை முறையாகவும் வெளிப்படையாகவும் நிறைவேற்றுவதற்கும் இச்சட்டம் உத்தியோகத்தர்களுக்கு வழிகாட்டியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஆய்வுப் பணிகளுக்காகவும், சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தமது சமூக மற்றும் பொது நலத் தேவைகளுக்காகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், குறித்தளிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் தகவல் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இச் செயலமர்வின் வளவாளராகக் கலந்துகொண்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நடைமுறைப் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பான மேலதிக தகவல்களும் தெளிவுபடுத்தப்பட்டன. தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் பங்கேற்பாளர்களினால் வினாக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றுக்கு வளவாளரினால் உரிய விளக்கங்களும் பதில்களும் வழங்கப்பட்டன. இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் திருமதி. ம. சுகன்யா மற்றும் திருமதி. பி. பரணிகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை2025 இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடக்கு மாகாண மாணவர்களுக்கான சனாதிபதி நிதியத்தின் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் கூட்டுறவு பிரதியமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன் கெளரவ கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பாடத்துறையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முதல் 20 இடங்களுக்குள் வந்த மாணவர்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.100,000 வீதம் உதவித்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
சனாதிபதி நிதியத்தின் இத்திட்டத்தின் கீழ், இவ்வாண்டு ஒவ்வொரு பாடத்துறையிலும் மாவட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 115 மாணவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 91 மாணவர்கள், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 102 மாணவர்கள், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 86 மாணவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 83 மாணவர்கள் என மொத்தம் 477 மாணவர்களுக்கு ரூ.100,000 வீதம் மொத்தமாக ரூ.47.70 மில்லியன் பெறுமதியான உதவித்தொகை வழங்கப்பட்டது. விருந்தினர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. சனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரொஷான் கமகே அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. விமல் சாமிநாதன் சிறப்புரையாற்றினார். மேலும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டச் செயலாளர்கள், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வட மாகாண கல்விப் பணிப்பாளர், வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.