யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக 07.10.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் WMPWNDB வீரக்கோன் (Major General WMPWNDB Weerakoon RSP Usp ndu) அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (09.10.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, Brigadier L. P. Athukorala RSP USP psc உள்ளிட்ட படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

புவிசார் வளங்களான கருங்கல், சரளைக் கல், மண், மணல் மற்றும் களிமண் ஆகியவற்றை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த யாழ்ப்பாண மாவட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (09.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைமையுரை :
புவிசார் வளங்கள் அகழ்வைக் கண்காணிக்க மாவட்ட மட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த அணுகுமுறை - அரசாங்க அதிபர் புவிசார் வளங்களை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் வர்த்தகம் செய்தல் தொடர்பான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையை வினைத்திறனுடனும் துரிதமாகவும் முன்னெடுப்பதற்காக, மாவட்ட மட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது னத் தெரிவித்தார். அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. எம். திலகரத்ன அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, புவிசார் வளங்கள் அகழ்வு தொடர்பான மாவட்டக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. அதற்கமைய, இக்குழுவின் செயற்பாடுகளைச் சீராகவும் திறம்படவும் முன்னெடுப்பது அவசியமாகும். கருங்கல், சரளைக்கல், மண், மணல் மற்றும் களிமண் போன்ற புவிசார் வளங்களை அகழ்தல், அவற்றைக் கொண்டுசெல்லுதல் மற்றும் வர்த்தகம் செய்தல் ஆகியவற்றுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, உரிய நடைமுறைகளுக்கு அமைவாக விரைவான தீர்மானங்களை மேற்கொள்வதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்தார். இதற்காக, காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, பிரதேச செயலகங்கள், யாழ்ப்பாண மாநகர சபை, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், புவிசார் வளங்கள் அகழ்வுப் பொறியியல் பிரிவு, வீதி அபிவிருத்தித் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். சுற்றறிக்கைக்கு அமைவாக, மாவட்ட அரசாங்க அதிபர் அல்லது மாவட்டச் செயலாளர் இக்குழுவின் தலைவராகவும், அகழ்வுப் பொறியியலாளர் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுவர். மத்திய சுற்றாடல் அதிகார சபை, தொல்லியல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் இக்குழுவின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றுகின்றன. தேவைக்கேற்ப ஏனைய அரச நிறுவனங்களின் அதிகாரிகளையும் கூட்டங்களுக்கு அழைத்து அவர்களின் கருத்துகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். இதுவரை காலமும், புவிசார் வளங்களை அகழ்வதற்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளரின் பரிந்துரைகளுடன் அகழ்வுப் பொறியியலாளருக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட ஏனைய திணைக்களங்கள் மற்றும் தலைமையகத்தின் அனுமதிகளைப் பெற்ற பின்னர் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போதைய சுற்றறிக்கையின் நோக்கத்திற்கமைவாக, இச் செயன்முறையில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் இணக்கப்பாடுகளைப் பெற்று, ஒருங்கிணைந்த முறையில் தீர்மானங்களை மேற்கொள்வது முக்கியமாகும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, சுற்றாடல் பாதுகாப்பு, காணிப் பயன்பாடு, வீதிகளின் நிலை, நீர்வளங்கள், விவசாய நடவடிக்கைகள், தொல்லியல் முக்கியத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற விடயங்கள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தனித்தனியாகத் திணைக்களங்களின் அனுமதிகளைப் பெறுவதால் ஏற்படும் காலதாமதங்களைக் குறைப்பதுடன், அனுமதி வழங்கும் செயன்முறையில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அதேவேளை, எந்தவொரு தனிப்பட்ட செல்வாக்குக்கும் இடமளிக்காமல், உரிய சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். மேலும், இக்குழுவின் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான வருடாந்த அட்டவணையை முன்கூட்டியே தயாரித்து உறுப்பினர்களுக்கு அறிவிக்கத் தீர்மானித்துள்ளோம். அதற்கமைய, 2026ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இரண்டாவது வியாழக்கிழமைகளில் கூட்டங்களை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்படும். 2027ஆம் ஆண்டிற்கான கூட்ட அட்டவணையும் முன்கூட்டியே தயாரித்து அறிவிக்கப்படும். அவசரத் தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதற்கேற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். எனவே, இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைத்துத் திணைக்களங்களின் பிரதிநிதிகளும் தங்களது நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கருத்துகளை முன்வைத்து, புவிசார் வளங்களை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார். அனைவரினதும் ஒத்துழைப்புடன் இக்குழுவின் நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன், அனைவருக்கும் தமது நன்றிகளை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டவை :
கட்டட நிர்மாணத்துறையில் பயன்படுத்தப்படும் கனிமங்களை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக 06.07.2026 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக் கோவைக்கு அமைவாக, மாவட்டத்தில் புவிசார் வளங்களின் அகழ்வு நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவற்றைச் சட்டரீதியாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பது தொடர்பில் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. கருங்கல், சரளைக் கல், மண், மணல் மற்றும் களிமண் ஆகியவற்றை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான அனுமதிகள், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களும் 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்கச் சுரங்கங்கள் மற்றும் கனியவளச் சட்டம் மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துதல் ஆகியன கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.
பங்குபற்றியவர்கள் விபரங்கள் :
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகப் பொறியியலாளர், மாவட்டப் பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் கிளை உதவிப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாநகர ஆணையாளர், பிரதேச சபைச் செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பொறியியலாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வடக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைப் பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர், கமநல சேவைகள் திணைக்களப் பிரதிஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

"எமது அபிவிருத்திப் பாதை என்பது, கிராமிய மக்களை நகர்ப்புறங்களுக்கு அழைத்து வருவதல்ல, மாறாக கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதும் வசதிகளை வழங்குவதும் ஆகும். அதற்காக கிராம உத்தியோகத்தர்களுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன – அதிமேதகு ஜனாதிபதி கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில், இன்று (08.10.2026) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. கிராம உத்தியோகத்தர் சேவைக்கு புதிய பிரமாணக் குறிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கிராம உத்தியோகத்தர் சேவை தரம் III இற்காகத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கு முதன்முறையாக இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டன. பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் நேர்முகத்தேர்வுகளின் திறமைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு தகுதியானவர்களை அரச சேவைக்கு உள்ளீர்க்கும் கொள்கைக்கு இணங்க, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கிராம உத்தியோகத்தர் பதவிக்கென அவர்களுக்கே உரித்தான தனித்துவமான சேவையின் கீழ், அவர்களுக்கெனத் தனித்துவமான சம்பளக் கட்டமைப்போடு கிராம உத்தியோகத்தர் சேவையை மீள ஸ்தாபிக்க தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது, அந்த நேரத்தில் பெற்றுக்கொண்டிருந்த சம்பளத்தை விட சம்பள உயர்வுகளுடன், பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை போதுமான அளவு அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற 28 பேருக்கு அதிமேதகு ஜனாதிபதியால் அடையாள ரீதியாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 58 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் உரை : தற்போதைய அரசாங்கம் அரச சேவையைப் பெரிதும் மதிக்கின்ற அதேவேளை, அரச சேவையைச் சிறந்த சம்பள மட்டத்திற்குக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு அரசாங்கம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனாலேயே மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட அடிப்படைச் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது என்றும் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, வசதிகளை வழங்குவதாகும் என்றும், இதன்போது கிராமத்திற்கும் நகருக்கும் இடையில் மிக மேம்பட்ட வீதித் கட்டமைப்பு, சிறந்த தொடர்பாடல் கட்டமைப்பு, செயற்திறனான மற்றும் வலுவான அரச சேவையை ஸ்தாபிப்பதே எமது நோக்கமாகும் என்றும் அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று நீங்கள் இலங்கையின் மிக முக்கியமான ஒரு தொழில் துறைக்குள் காலடி எடுத்து வைக்கிறீர்கள். நம் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றும் அரச அதிகாரி யார் என்று கேட்டால், அது நமது கிராம உத்தியோகத்தர் தான் இருப்பார்கள். ஒரு கிராமத்தில் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் அரசிற்கும் இடையிலான தொடர்பும், அரசினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் கிராம உத்தியோகத்தர்களை அடிப்படையாக கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன.
கிராமத்தைப் பொறுப்பேற்றுப் பணியாற்றும் ஒரு அதிகாரி என்ற வகையில் மாத்திரம் நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள் அல்ல. நாங்கள் தயாரித்துள்ள பொருளாதார மற்றும் சமூக நோக்கின் காரணமாகவே நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்களாகிறீர்கள். நகரங்களை மையமாகக் கொண்ட அதிகப்படியான மக்கள்தொகை காரணமாக உருவாகும் நெருக்கடியை உலகின் ஒவ்வொரு நாடும் இன்று எதிர்கொண்டு வருகிறது. இது இன்று உலகின் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் நாடுகளும், வளர்ச்சியடையாத நாடுகளும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும். கிராம மட்டத்தில் பொருளாதார வாய்ப்புகளையும் சேவைகளையும் வழங்குவதில் தோல்வியுடையும் போது, இலட்சக்கணக்கான மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களை நோக்கிச் சென்றனர். இது இன்று உலகின் பல நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். ஆனால், இந்தப் பிரச்சினையில் நாம் அதிர்ஷ்டம் செய்துள்ளோம். நம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இன்னும் கிராமப்புறங்களிலேயே வசிக்கிறார்கள். அப்படியானால் நமது பொருளாதார மற்றும் சமூகப் பயணம் என்னவாக இருக்க வேண்டும்? நமது பயணம் ஒருபோதும் கிராமப்புறங்களில் வாழும் மக்களை நகரங்களுக்கு அழைப்பதாக இருக்கக்கூடாது. அந்த வியூகம் தோல்வியடைந்துவிட்டது என்பது இப்போது தெளிவாகிறது. அப்படியானால் நமது வளர்ச்சியின் பாதை, கிராமத்து மக்களை நகரத்திற்கு அழைப்பது அல்ல, மாறாக கிராமத்தில் உள்ள மக்களுக்கே கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் வசதிகளை வழங்குவதுமாகும். இதற்கு கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் மிகவும் மேம்பட்ட வீதிக் கட்டமைப்பு அவசியமாகும். அதுபோல கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் சிறந்த தகவல் தொடர்பு கட்டமைப்பு அவசியமாகிறது. அதற்காக எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் தகவல் தொடர்பு கட்டமைப்பை நிறுவ டிஜிட்டல் அமைச்சுடன் கலந்துரையாடி தீர்மானித்துள்ளோம். மேலும் கிராம மக்களுக்கு வழங்கும் சேவைகள் மிகவும் விரைவாகவும் எளிதாகவும் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே கிராமத்து மக்களை கிராமத்திற்குள்ளேயே வைத்து அவர்களின் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதன் போது கிராம உத்தியோகத்தர்களுக்குப் பெரியதொரு பொறுப்பு வருகிறது. அந்தச் சேவைகளை வழங்குவதில் வீட்டுக்கு வீடு செல்வதுடன், குடிமக்கள் வந்து கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் அலைக்கழிக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், இந்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாட்டில், மனிதர்களுக்கிடையேயான மனிதநேய உறவுகளும் உணர்வுகளும் சிதைவடையாதவாறு ஒரு சமநிலையைப் பேணுவது மிக முக்கியமானதாகும். மேலும், அரச சேவையின் பணிகளை மூன்று வகைகளாகப் பிரித்து டிஜிட்டல் முறையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் மட்டத்திலேயே நிறைவு செய்யப்படும் பணிகள், கிராம உத்தியோகத்தர் வழங்கும் சான்றிதவலின் அடிப்படையில் பிரதேச செயலகத்தில் நிறைவு செய்யப்படும் பணிகள், கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் சான்றிதலின் அடிப்படையில் வேறு அரச நிறுவனத்தால் நிறைவேற்றப்படும் பணிகள் என, இதற்கான அவசியமான டிஜிட்டல் முறையை உருவாக்குவது தொடர்பாக டிஜிட்டல் அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் கலந்துரையாடியுள்ளன. அடுத்த ஆண்டு இரண்டு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு முன்னோடித் திட்டமாக இதனைத் ஆரம்பிப்பதற்கான நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கிறோம். மேலும் நமக்கு வலுவான அரச சேவை தேவைப்படுகிறது. உலகின் ஒவ்வொரு வளர்ந்த நாடும் வலுவான அரச சேவை மூலமாகவே முன்னேறியது. ஆனால் இன்று நமது அரச சேவையில் பணிபுரியும் அதிகாரிகளும் சேவைகளைப் பெறும் பிரஜைகளும் ஒரு திருப்திகரமான மனநிலையில் இல்லை. அரச சேவையில் பதவிகளுக்கும் நாற்காலிகளுக்கும் இடையிலான போட்டி உருவாகியுள்ளது. அத்துடன் பழைய கணினிகள், பழைய வாகனங்கள் மற்றும் சேதமடைந்த கட்டடங்கள் காரணமாக அரச சேவை ஒருவித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக அரசாங்கமென்ற வகையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அரச சேவைக்கு 1,750 கெப் வாகனங்கள் தேவை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தேவையான வாகனங்களை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான கணினிகள் மற்றும் உபகரணங்களை பொது நிர்வாக அமைச்சின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரச நிறுவனக் கட்டடங்கள் புனரமைக்கப்பட வேண்டும். மேலும் புதிய கட்டடங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கமைய செத்சிறிபாய 3 ஆம் கட்டத்தை நிறைவு செய்யவும், 4 ஆம் கட்டத்தைத் தொடங்கவும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாம் நிலத்தைக் முகாமைத்துவம் செய்ய வேண்டும். பாரிய கட்டடங்கள் மீது நமக்குள்ள விருப்பத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். எனவே அலுவலகங்களுக்கு எவ்வளவு இடவசதி தேவைப்படுகிறது, அந்தந்த குறிப்பிட்ட நில அளவுகள் குறித்த முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அலுவலக வசதிகளைத் தயாரிக்கும் பொறுப்பு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது அரச சேவையில் தற்போதுள்ள சம்பள அளவுகள் போதாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால் பொறியியலாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சட்ட அதிகாரிகள் போன்ற திறமையான நிபுணர்களை அரச சேவையில் சேர்ப்பதில் சிரமம் நிலவுகிறது. இருப்பினும், அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ரூபாவால் உயர்த்தினால் மாதமொன்றுக்கு 13 மில்லியன் ரூபா மேலதிக செலவுச் சுமையையும், 100 ரூபாவால் உயர்த்தினால் 1.3 பில்லியன் செலவுச் சுமையையும் ஏற்படுத்தும். எனவே அரச சேவையின் செயல்திறனை அதிகரித்து அதன் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இதன் போது நாங்கள் எந்த வகையிலும் அரச சேவையைக் கைவிடப்போவதில்லை. அரச சேவை அவசியமானது, அது மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கொள்கையாகும். எனினும் இந்தச் சேவையை வழங்குவதற்கான பொறிமுறை இன்னும் சிறியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கமைய பிரதமர் தலைமையிலான குழுவொன்றின் மூலம் அரச நிறுவனங்களை ஒன்றிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட 33 நிறுவனங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக நஷ்டஈட்டுத் தொகையை வழங்குவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும் இணைக்கப்பட வேண்டிய பல நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரச சேவை மக்களுக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடாது. ஆனால் மக்களுக்குச் சிறந்த அரச சேவையை வழங்க வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் திடஉறுதியுடன் உள்ளது.
ஆகவே, அரச சேவையை மிகச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டுமானால் அது மேலும் சுருக்கப்பட வேண்டும். நல்ல திறமை கொண்ட குழுக்களைக் கொண்டு வருவதற்கு நல்ல சம்பள அளவுகளை உருவாக்க வேண்டும்.எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே மூன்று கட்டங்களாக அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த் நாம் தீர்மானித்தோம். அதற்கமைய 2027 ஆம் ஆண்டளவில் சம்பளத்தை உயர்த்துவதற்காக மாத்திரம் 330 பில்லியன் ரூபா செலவுச் சுமையை ஏற்றுள்ளோம். ஏனைய சலுகைகள் குறித்து அதன் பின்னர்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதில் அனைவரும் நியாயமாக நடந்துகொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் சிறந்த அடிப்படைச் சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். அத்துடன் கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. அலுவலகப் கொடுப்பனவு 1,000 ரூபாவிலிருந்து 2,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. சீருடை கொடுப்பனவு 5,000 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. காதிதாதிகள் கொள்வனவு கொடுப்பனவு 1,500 ரூபாவிலிருந்து 3,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நாம் அடுத்த வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளோம். அந்த வரவு செலவுத் திட்டத்தில், 2027ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பள உயர்வுக்குத் தேவையான 330 பில்லியன் ரூபாவை சமநிலைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தே கவனம் செலுத்துவோம். அதற்குப் பிறகே கொடுப்பனவுகளுக்காக எவ்வளவு செலவை ஏற்க முடியும் என்பது குறித்து அவதானம் செலுத்தப்படும். அரச சேவைக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்தச் சம்பளம் மக்களின் வரிப் பணத்திலிருந்தே வழங்கப்படுகிறது. இந்த வரி விகிதங்களைக் குறைக்கும் இலக்குடனேயே நாங்கள் செயற்பட்டு வருகிறோம். எதிர்வரும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே எமது இலக்காகும். ஒரு பிள்ளை புத்தகத்தை வாங்கிப் படிக்கும் போது அதற்கும் வரி செலுத்த வேண்டுமா? அதை நாம் நீக்க வேண்டும். அந்த இலக்குகளுடனேயே செலவுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டும். நாங்கள் மிகச் சிறந்த அடிப்படைச் சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். தேவைகளை செவிமடுத்துக் கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளோம். எனவே, இது குறித்து புரிந்துணர்வுடன் செயற்படுவோம். நாங்கள் ஒருபோதும் அரச சேவையை அரசியல்மயமாக்க எதிர்பார்க்கவில்லை. இந்த நாடு குறித்து நமக்கு ஒரு நல்ல நம்பிக்கை உள்ளது. அதில் எமது அரச சேவைக்கு பெரும் பொறுப்பு உள்ளது. ஓர் அரசாங்கமாக நம்மால் கொள்கைகளை உருவாக்க முடியும்,பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை கிராமம் வரை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரச சேவைக்கே உள்ளது. அதற்கு பலமான அரச சேவை அவசியமாகும். இன்று நியமனம் பெறும் நீங்கள், மக்களின் மிக நெருங்கிய அரச அதிகாரிகள் ஆவீர்கள். ஒரு ஆதரவற்ற நிலையிலோ, அனர்த்தத்தின் போதோ, ஒரு குழந்தையின் பிறப்பின் போதோ அல்லது இறப்பின் போதோ பொதுமக்கள் முதலில் நாடிச் செல்வது கிராம உத்தியோகத்தரையே ஆகும். எனவே, அரசின் பெரும் பணியையும் மக்களுடனான தொடர்பையும் ஏற்படுத்துபவர்கள் கிராம உத்தியோகத்தர்களே. எனவே, நீங்கள் பெரும் மரியாதைக்குரிய, பொதுமக்களின் சுமையைச் சுமக்கும் ஒரு விருத்தி சார்ந்த தொழிலில் இணைகிறீர்கள். அதனால் கிராம மக்களுக்கும் கிராம உத்தியோகத்தருக்குமிடையே பாரம்பரிய, அன்பான மற்றும் மரியாதைக்குரிய உறவை மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்ப உங்களால் முடியும் என்று நம்பி, உங்களின் புதிய தொழில் வாழ்க்கைக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கெளரவ பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன அவர்களின் உரை :
கடந்த ஆண்டு கிராம உத்தியோகத்தர் சேவையில் புதிய பிரமாண குறிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, கிராம உத்தியோகத்தர் சேவையில் இணையும் முதல் குழுவினர் நீங்களாவீர்கள். அதேபோன்று தகுதிகள் மற்றும் திறமைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் மற்றொரு குழுவினரும் ஆவீர்கள். இந்த இரண்டு காரணங்களினாலும் இன்றைய நாள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக மாறுகிறது. நமது நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பெரும் முயற்சி மேற்கொண்டு வரும் அதேவேளையில், அரசியல் கலாசாரத்தையும் மிகவும் சாதகமான கலாசாரமாக மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சியின் மற்றொரு படியாக இந்நிகழ்வைக் குறிப்பிடலாம். இச்சேவையானது கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை செல்லும் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்படி அரச சேவையில் கிராம உத்தியோகத்தர் சேவை எவ்வளவு முக்கியமானது, மரியாதைக்குரியது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இந்த யுகம் நமக்கு ஒரு சிறப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாட்டின் மக்கள் ஒரு புதிய முறைமை குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டனர். 'சிஸ்டம் சேஞ்ச்' எனும் மாற்றத்திற்காக அவர்கள் குரல் கொடுத்தனர். அந்த மாற்றத்திற்காக மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு தருணத்திலேயே நீங்கள் இந்த நியமனங்களைப் பெறுகிறீர்கள். இந்நாட்டு மக்கள் பிரார்த்தித்த அந்த மாற்றத்திற்கு உங்களின் தீவிர பங்களிப்பு தேவைப்படும் தருணம் இதுவாகும். இந்நாட்டின் அனைத்து மக்களின் சார்பாக உங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று நீங்கள் மேற்கொள்ளும் சேவையே எதிர்காலத்தில் வரலாறாக மாறப்போகிறது. அதன்படி வரலாறு புதிதாக எழுதப்படும் ஒரு யுகமாகவும் இது மாறுகிறது. நமது நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். போருக்காக இரத்தமும் கண்ணீரும் சிந்தினர். பொருளாதார நெருக்கடியின் போது தங்களின் அடிப்படை தேவைகளைக் கூட தியாகம் செய்தனர். அத்தகைய மக்களுக்குக் கடமைக்கும் சேவைக்கும் அப்பாற்பட்ட ஒரு மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது. அத்தகையதொரு வாய்ப்பை அண்மையில் 'டித்வா' அனர்த்தத்தின் போது நாம் கண்டோம். அந்த அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவிக்கும் அதேவேளையில், அந்த முன்மாதிரியை நீங்களும் பெற வேண்டும் என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஒரு 'சிஸ்டம் சேஞ்ச்' வேண்டுமென்றால் முதலில் மாற வேண்டியது நாம்தான். தனித்தனியாக மாற வேண்டும். இன்று நியமனம் பெறும் நீங்களும், உங்களது பெற்றோர்கள் உள்ளிட்ட நலன்விரும்பிகளும் இன்று அடையும் மகிழ்ச்சியை, நீங்கள் ஓய்வுபெறும் நாளிலும் அதேபோல் அடைய முடிந்தால், கடமையை விட சமூகப் பொறுப்பை நிறைவேற்றியதாக நீங்கள் திருப்தியடையலாம். பலமான பொருளாதாரம் போன்றே பலமான சமூக அடிப்படையை கொண்ட ஒரு இலங்கையினருக்காக உங்களது சேவையை வழங்குமாறு இன்று நியமனம் பெறும் உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந் நிகழ்வில் மாகாண கெளரவ ஆளுநர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் கெளரவ ருவன் செனரத் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி திரு. பிரபாத் சந்திரகீர்த்தி, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோக பண்டார மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட இறப்பு பதிவாளர்களுக்கான புற்றுநோய் இறப்பு கண்காணிப்பு தொடர்பான பயிற்சிச் செயலமர்வு, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தலைமையில் இன்று (09.10.2026) காலை 09.00 மணிக்கு நடைபெற்றது.
தொடக்கவுரை :
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். புற்றுநோய் மரணங்கள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் - அரசாங்க அதிபர் அரசாங்க அதிபர் தமது தொடக்கவுரையில், பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகப் பதிவு செய்வது பதிவாளர்களின் முக்கிய பொறுப்பாகும். குறிப்பாக, இறப்புப் பதிவுகள் தொடர்பில் சில பின்தங்கிய பிரதேசங்களில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும் எனத் தெரிவித்தார். தினமும் சுமார் 100 பேர் புதிதாகப் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதுடன், நாளொன்றுக்கு சுமார் 45 பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் மிகவும் கவலைக்குரியதாகும் எனத் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்திலும் புற்றுநோயின் தாக்கம் காணப்படுகின்ற நிலையில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்களைச் சரியான முறையில் பதிவு செய்வது தொடர்பான இத்தகைய பயிற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மரணங்களைப் பதிவு செய்யும்போது பதிவாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இறப்புச் சான்றிதழில் தகவல்களைச் சரியாகப் பதிவு செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டரீதியான பொறுப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதே இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் முதலாவது பயிற்சிச் செயலமர்வு நடைபெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது செயலமர்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்காகக் கொழும்பிலிருந்து வருகைதந்த வைத்தியர்கள் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்களின் சேவையையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுவதாகவும், எமது மாவட்டத்திலிருந்து பல நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார். இந்நிலையில், மாவட்டத்திலேயே புற்றுநோய் சிகிச்சைச் சேவைகளை வழங்கிவரும் வைத்திய நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார். இன்றைய முழுநாள் பயிற்சியில் பங்கேற்கும் பதிவாளர்கள், தமது சந்தேகங்களைக் கேட்டு, இறப்புப் பதிவுகளைச் சரியாகவும் முறையாகவும் மேற்கொள்வதற்குத் தேவையான தெளிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இப்பயிற்சியில் பெறும் அறிவைத் தமது பணிகளில் நடைமுறைப்படுத்துவதுடன், பொதுமக்களிடையேயும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார். இச் செயலமர்வை ஏற்பாடு செய்த யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் கேதீஸ்வரன் உள்ளிட்ட அனைத்து வைத்திய அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார். இப் பயிற்சியானது பதிவாளர்களின் அறிவையும் திறனையும் மேம்படுத்துவதுடன், புற்றுநோயால் ஏற்படும் மரணங்களைச் சரியாகப் பதிவு செய்வதற்கும், இது தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
செயலமர்வின் விபரங்கள் :
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் செனக்க தலகல, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார். புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கவிதா இந்திரநாத், யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் பராமரிப்பு தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். புற்றுநோயின் சுமை, புற்றுநோய் பதிவேடு மற்றும் இறப்பு கண்காணிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக டாக்டர் சுராஜ் பெரேரா விளக்கமளித்தார். யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் இறப்பு கண்காணிப்பின் ஆரம்பகால அனுபவங்கள் குறித்து டாக்டர் ஜி. ராஜீவ் எடுத்துரைத்ததுடன், இக்கண்காணிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து, புற்றுநோய் இறப்பு கண்காணிப்பு தொடர்பாக டாக்டர் திருமகள் உரையாற்றினார். டாக்டர் ராஜீவ், டாக்டர் ஜெசிதரன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்ற குழுக் கலந்துரையாடலும் இடம்பெற்றது. பங்கேற்பாளர்களின் கருத்துப் பரிமாற்ற அமர்வை டாக்டர் கேதீஸ்வரன் வழிநடத்தினார். மார்பகப் புற்றுநோய் மற்றும் பொதுவான புற்றுநோய் வகைகள் தொடர்பாக டாக்டர் தனேந்திரன் த விளக்கமளித்ததுடன், பெண்களுக்கான புற்றுநோய்கள் குறித்து டாக்டர் தனுயா மகாதேவன் உரையாற்றினார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோய் இறப்பு கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிகழ்வின் இறுதியில் டாக்டர் ஜெசிதரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான கலந்தாய்வு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.10.2026) காலை 9.00 மணி தொடக்கம் 01.00 மணி வரை தனியார் விடுதியில் நடைபெற்றது. இக் கலந்தாய்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரை :
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் மாவட்ட அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் – அரசாங்க அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி என்பது கட்டுமானப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட முடியாது. மனித வள அபிவிருத்தி, சமூக நலன், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாகவே மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக்கு இவ்வாண்டு 4,500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதி :
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் ரூ.2,500 மில்லியன் அபிவிருத்தி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூ.4,500 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். அதேவேளை, மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்திப் பணிகளுக்காக கணிசமான நிதி மற்றும் வளங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றன. இதன்படி, ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான நிதி இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டு வருவதாகவும். எனவே, அரசாங்கத்தின் நிதி வளங்களுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி, தொழில்நுட்ப அறிவு மற்றும் மனிதவளப் பங்களிப்புகளையும் முறையாக ஒருங்கிணைத்து, மாவட்டத்தின் முன்னுரிமைத் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட்ட அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலம் அபிவிருத்திப் பணிகளின் பயனையும் தாக்கத்தையும் மேலும் அதிகரிக்க முடியும் எனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, அரச சார்பற்ற நிறுவனங்கள் மனித வள அபிவிருத்திக்கு வழங்கிவரும் முக்கியத்துவம் பாராட்டத்தக்கது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது :
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் நீண்டகாலமாக வழங்கிவரும் பங்களிப்புகளுக்கு அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்தார். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்நிறுவனங்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பெறுமதியான பங்களிப்பாக அமைவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
அரச சார்பற்ற நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு அவசியம் :
ஒரே பிரதேசத்தில் ஒரே வகையான திட்டங்கள் மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படுவதைத் தவிர்த்து, மக்களின் உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களிடையே வலுவான ஒருங்கிணைப்பு அவசியம் என அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். மாவட்ட நிர்வாகம், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டங்களை பரஸ்பரம் அறிந்து கொண்டு செயற்படுவதன் மூலம் வளங்களின் வீண்விரயத்தைத் தவிர்த்து, அதிக பயனாளிகளை சென்றடைய முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அபிவிருத்தியில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் :
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் உரிய தரப்பினருடன் தெளிவாகப் பகிரப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். திட்டங்களின் நோக்கம், பயனாளிகள், நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் தொடர்பான தகவல்களைப் பகிர்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் மேலும் வலுப்படுத்த முடியும் என அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
காலாண்டு கலந்துரையாடல்கள் தொடர வேண்டும் :
அரச சார்பற்ற நிறுவனங்களுடனான இத்தகைய கலந்துரையாடல்கள் காலாண்டுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் தமது அனுபவங்கள், தேவைகள், சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக சுதந்திரமாகக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் திறந்த கலந்துரையாடல்களுக்கான தளமாக இக்கலந்தாய்வுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். அரச சார்பற்ற நிறுவனங்கள் எதிர்காலத்திலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயற்பட்டு, மக்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்திய அபிவிருத்தியை முன்னெடுக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு :
இவ்வாண்டு அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு, 2026 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறை ப்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கை தொடர்பாகவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களில் காணப்பட்ட சமநிலையின்மை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. மேலும், இன்றைய கலந்தாய்வில் 9 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் 24 உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும் என மொத்தம் 33 அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களது திட்ட முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகளை முன்வைப்புக்கள் (Presentation) ஊடாக சமர்ப்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்தாய்வில் பங்குபற்றியவர் விபரங்கள் :
இக் கலந்தாய்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ தர்சினி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. ந. தயாபரன், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.







