ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின்(NAHTTF) ஏற்பாட்டில், மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலும், மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாரத் தடுப்பு செயலணி (Anti-Human Trafficking Forum) ஸ்தாபிக்கும் நிகழ்வும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று(12.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின்(NAHTTF) பணிக்குழுவின் செயலாளரும், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி திருமதி பிரியங்கனி ஹேவரத்ன மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் (UNODC) தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி அனோஜா முனசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது கருத்துரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், தேசிய ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாரத்துக்கு எதிரான செயலணியின் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இச் செயலணியின் தேசிய செயலாளராக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கடமையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், மனிதக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் அவசியமாகக் கருதப்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், அதன் தொடர்ச்சியாக மாவட்ட செயலணியை நிறுவுவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாக கிராம அலுவலர்கள் உள்ளிட்டோருக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக மாவட்ட செயலணியில் அங்கத்துவம் வகிக்கவுள்ள உத்தியோகத்தர்கள் இக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மனிதவள அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் பெண்கள் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் மனிதக் கடத்தல் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் உத்தியோகத்தர்களும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மாவட்ட ரீதியில் செயல்திறன் மிக்க ஒரு செயலணியினை நிறுவ வேண்டிய அவசியம் தற்போது காணப்படுவதாகவும், அதற்கான முக்கியமான ஆரம்ப கட்டமாக இன்றைய கலந்துரையாடல் அமைகின்றது என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். தேசிய மட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாரத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆதரவு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதும் செயலணியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் ஏற்படாத வகையில் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார். பிரதேச மட்ட அதிகாரிகள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயபட்டாலேயே மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாரத்தைத் தடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாக கிராம அலுவலர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மனிதவள அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி, பெண்கள் அபிவிருத்தி, சிறுவர் உரிமை மேம்பாடு, முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உள்ளிட்ட துறைசார்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் MDK. விஜேவர்த்தன அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (12.08.2026) பிற்பகல் 2.00 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதியை அரசாங்க அதிபர் அன்புடன் வரவேற்றதுடன், அவரது பதவிக்காலத்தில் மாவட்ட மக்களின் நலனுக்காகத் தேவையான ஒத்துழைப்பையும் சேவையையும் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, தீவகப் பகுதிகளுக்கான சீரான கடல் போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கல் குறிப்பாக நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான பயணிகள் கடல் போக்குவரத்தை மேம்படுத்துதல், தீவகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் கவனம் செலுத்தினார்.
மேலும், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் மயிலிட்டித் துறைமுகப் பகுதியில் காணப்படும் இந்திய மீன்பிடிப் படகுகளை அப்புறப்படுத்துதல் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் MDK. விஜேவர்த்தன அவர்கள், பொதுமக்களின் கடல் போக்குவரத்துத் தேவைகளுக்கு கடற்படையினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் சிறந்த முறையில் மேற்கொள்வதுடன், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார். மேலும், சந்திப்பின் நிறைவில், வட மாகாண கடற்படைத் தளபதி அவர்களால் அரசாங்க அதிபருக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது. இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி மற்றும் கடற்படையின் Flag Lieutenant PKA Maduranga ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின்(NAHTTF) ஏற்பாட்டில், மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கருத்தரங்கு இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின்(NAHTTF) பணிக்குழுவின் செயலாளரும், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி திருமதி பிரியங்கனி ஹேவரத்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின்(UNODC) தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி அனோஜா முனசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் இக்கருத்தரங்கு நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதுடன், மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை மாவட்ட மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் விழிப்புணர்வின் ஆரம்ப நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மனித வியாபாரம் மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்காக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களுக்கும் கொண்டு சென்று, பொதுமக்களுக்கு விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மனிதக் கடத்தல் (Human Smuggling) மற்றும் மனித வியாபாரம் (Human Trafficking) ஆகிய இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் தெரிவித்தார். ஒருவரை சட்டவிரோதமான முறையில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அழைத்துச் செல்வது மனிதக் கடத்தலாகக் கருதப்படலாம். அதேவேளை, ஒருவரை ஏமாற்றுதல், தவறான வாக்குறுதிகளை வழங்குதல் அல்லது பொருளாதாரத் தேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு அழைத்துச் சென்று சுரண்டுவது மனித வியாபாரத்தின் முக்கிய வடிவங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார். பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று தவறாக பயன்படுத்துதல், உரிய ஊதியம் வழங்காமல் சுரண்டுதல், குறைந்த ஊதியத்தில் பணியாற்றச் செய்தல், சிறுவர்களை வேலைவாய்ப்பில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் மனித வியாபாரத்தின் கீழ் இடம்பெறக்கூடியவையாகும் எனவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்கள் இவ்வாறான சுரண்டல்களுக்கு அதிகளவில் ஆளாகக்கூடிய நிலை காணப்படுவதாகவும், கல்வியறிவு பெற்றவர்களும் வெளிநாட்டு மோகத்தால் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு மோசடிகளுக்கும் சுரண்டல்களுக்கும் உள்ளாகி முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் மக்களுக்கு உரிய வழிகாட்டல்களையும் தேவையான விழிப்புணர்வையும் வழங்குவதில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், நிர்வாக கிராம அலுவலர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களின் ஊடாக பொதுமக்களுடன் நேரடியாகப் பணியாற்றும் உத்தியோகத்தர்களை பயன்படுத்தி, மனித வியாபாரம் தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தின் கீழ்மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உளவளத்துணை ஆலோசனை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஊடாக ஆபத்துக்குள்ளாகக்கூடிய குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களை முதலில் அடையாளம் கண்டு, அவர்களின் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ற திட்டங்களை பிரதேச செயலாளர் மட்டத்தில் முன்னெடுப்பதன் மூலம் மனித வியாபாரம் மற்றும் பல்வேறு சுரண்டல்களுக்கு அவர்கள் ஆளாகும் நிலையை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பிரியங்கினி மற்றும் திருமதி அனோஜா முனசிங்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தில் மனித வியாபாரத்தைத் தடுப்பதற்கான செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன்போது, மனிதக் கடத்தல் தொடர்பான அறிமுகம், சர்வதேச மற்றும் தேசிய சட்ட ஏற்பாடுகள், மனிதக் கடத்தலுக்கும் புலம்பெயர்வோர் கடத்தலுக்கும் இடையிலான வேறுபாடுகள், மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முறைகள், முறைப்பாடு மற்றும் அறிக்கையிடல் பொறிமுறைகள், மனிதக் கடத்தல் குற்றங்கள் தொடர்பான சட்ட நடைமுறைகள், ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணி(NAHTTF) பணிக்குழுவின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இப்பயிற்சிப் பட்டறையில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாக கிராம அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேலணை தெற்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டிற்கான வேலணை தெற்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா, வேலணை பிரதேச செயலாளர் திரு. தனபாலசிங்கம் அகிலன் தலைமையில் இன்று (11.08.2026) பிற்பகல் 1.00 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாவட்டச் செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி மாலினி கிருஷ்ணானந்தன் மற்றும் மூத்த நாட்டுக்கூத்துக் கலைஞரும் கலாபூஷணம் விருது பெற்றவருமான திரு. வில்லியம் கஸ்பார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அமரர் கலாபூஷணம் நல்லான் தங்கவேலு அவர்களின் கலைப் பணிகளை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்ற இவ்விழா, தமிழ் பண்பாடு, கலை மற்றும் இலக்கிய மரபுகளைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது.
வேலணை வங்களாவடி முருகன் ஆலய முன்றலிலிருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் விருந்தினர்கள் விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. இதன்போது தமிழ்த்தாய் வாழ்த்து, கலாசாரப் பேரவை கீதம், சர்வமத ஆசியுரைகள் மற்றும் துறையூர் ஐயனார் கலாமன்றக் குழுவினரின் மங்கல இசை ஆகியன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து திரு. சுப்பிரமணியம் கஜேந்திரகுமார் அவர்களின் அரங்கச் சிறப்புரை, துறையூர் ஐயனார் கலாமன்ற மாணவிகளின் வரவேற்பு நடனம், நடனக் கலைஞர் திருமதி மேகலா செல்வக்குமாரின் வரவேற்புரை மற்றும் பிரதேச செயலாளர் திரு. தனபாலசிங்கம் அகிலன் அவர்களின் தலைமையுரை ஆகியன இடம்பெற்றன.
விழாவில் உழவர் நடனம், தொழிற்பாடல், ஒயிலாட்டம், கவியரங்கம், கும்மி நடனம், நாட்டாரிசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு, வேலணை தெற்கு பிரதேசத்தின் கலை மற்றும் பண்பாட்டு மரபுகளின் செழுமையை வெளிப்படுத்தின. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், தீவகப் பிரதேசத்தின் கலை, பண்பாட்டு மரபுகளையும் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் காணப்படுவதாக தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கலாசார மற்றும் பண்பாட்டுப் பெருவிழாக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலணை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய பண்பாட்டுப் பெருவிழா சிறப்பாக முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் எனவும் குறிப்பிட்டார். எமது தமிழ் மக்களின் கலை மற்றும் பண்பாட்டு வடிவங்களை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற கலாசாரப் பவனி, இம்மண்ணின் கலை மரபுகளையும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக, பல சிறுவர்களும் இளம் கலைஞர்களும் மதிய வெயிலையும் பொருட்படுத்தாது தங்களது இசை மற்றும் கலைத் திறமைகளை வெளிப்படுத்தியமை பாராட்டுக்குரியது. அதேபோன்று, மேடை நிகழ்வுகளிலும் இம்மண்ணின் பாரம்பரியக் கலை வடிவங்களையும் கலைப் பொக்கிஷங்களையும் இளம் தலைமுறையினர் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
இதன்மூலம், எமது பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடும் அல்லது தமிழர்களின் பண்பாட்டுப் பொக்கிஷங்கள் கிராமப்புறங்களில் இருந்து வழக்கொழிந்து போய்விடும் என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை இன்றைய இளம் கலைஞர்கள் நிரூபித்துள்ளனர் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். அதேவேளை, மூத்த தலைமுறையினரும் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தியமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். வயது முதிர்ந்த நிலையிலும் கலை மீதான ஆர்வமும் இளமையான துடிப்பும் குறையாது என்பதை அவர்களின் பங்களிப்பு எடுத்துக்காட்டுகின்றது.
ஒவ்வொரு பிரதேசமும் தங்களது தனித்துவமான கலை வடிவங்களையும் பண்பாட்டு மரபுகளையும் வெளிப்படுத்துவதற்கான சிறந்த களமாக பிரதேச செயலகங்கள் திகழ்கின்றன. அதேபோன்று, பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கவியாற்றல் உள்ளிட்ட பல்வேறு திறமைகளையும் வெளிக்கொணரும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. தீவகப் பிரதேசம் ஏற்கனவே பல்வேறு கலைஞர்களையும் கவிஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய மண்ணாக விளங்குவதுடன், தனித்துவமான பண்பாட்டு மரபுகளையும் கொண்டுள்ளது. விருந்தோம்பும் பண்பாடு, கலைகளை வளர்க்கும் பண்பாடு, மூத்தோரை மதிக்கும் பண்பாடு, நல்லவற்றை உள்வாங்கி பெருந்தன்மையுடன் வாழும் பண்பாடு எனப் பல்வேறு சிறப்பான பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட மண்ணாக தீவகம் திகழ்கின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், வந்தாரை வரவேற்று, அவர்களுக்கு உணவளித்து, அவர்களை மகிழ்வித்து, இந்த மண்ணின் பெருமைகளை அறியச் செய்யும் உயரிய பண்பாடு தீவக மக்களிடம் நீண்டகாலமாக நிலவி வருகின்றது. எனவே, இத்தகைய சிறப்புமிக்க கலை மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்து, அவற்றை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்வது அனைவரினதும் பொறுப்பாகும். இன்றைய நிகழ்வில் இளம் கலைஞர்கள் வெளிப்படுத்தியுள்ள திறமைகள், தீவகத்தின் கலை மற்றும் பண்பாட்டு மரபுகள் எதிர்காலத்திலும் சிறப்பாகத் தொடரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், நிகழ்வில் கலைவாரிதி மற்றும் இளங்கலைஞர் விருதுகள் வழங்கப்பட்டதுடன், கலை மன்றங்களுக்கு இடையிலான போட்டிகளில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில்ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine Lanka) நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் இன்று (10.08.2026) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகக் கட்டடத்தின் முதலாம் மாடியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். வடக்கின் ஏற்றுமதி மற்றும் வர்த்தகத் துறைக்கு புதிய வாய்ப்பு வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் புதிய கிளை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் வடக்கு மாகாணத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த சேவைகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கப்பல் முகவர் சேவைகள், கடல் மற்றும் விமான வழி சரக்குப் போக்குவரத்து, பெருமளவிலான சரக்குகளைக் கையாளுதல், கொள்கலன் குத்தகை, சுங்கத் தரகு மற்றும் அனுமதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இக்கிளை ஊடாக வழங்கப்படவுள்ளன.
மேலும், இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நிறுவனத்துக்குள்ள வலையமைப்பின் ஊடாக வடக்கு மாகாணத்தின் சர்வதேச வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இக்கிளையின் செயற்பாடுகள் மூலம் வடக்கு மாகாணத்தின் வர்த்தக மற்றும் ஏற்றுமதித் துறைக்கு வலுசேர்ப்பதுடன், பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிகழ்வில் வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள், வர்த்தக மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






