யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிறைக் கைதிகளுக்கு சாரணர் பயிற்சியை வழங்கி, சாரணர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு 25.09.2026 அன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரணர் ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலைகள் ஆணையாளர் – வழங்கல் மற்றும் சேவைகள் திரு. B.D.M.G.B. திஸாநாயக்க, வட மாகாண சாரணர் ஆணையாளர் திரு. P. அஜித்குமார், யாழ்ப்பாண சிறைச்சாலை பொறுப்பதிகாரி திரு. S. இந்திரகுமார், சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் உறுப்பினர் பிரபல வர்த்தக பிரமுகர் திரு. ஈ. எஸ். பி. நாகரெட்ணம் உள்ளிட்ட அங்கத்தவர்கள், சாரண தலைமையக மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பமாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், தேசியக் கொடி, சிறைச்சாலைக் கொடி மற்றும் சாரணர் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் சிறைச்சாலை கீதமும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலை பொறுப்பதிகாரி திரு. S. இந்திரகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, சிறைக் கைதிகளுக்கு சாரணர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அரசாங்க அதிபரும், யாழ்ப்பாண மாவட்ட சாரணர் ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் உரை: சிறைச்சாலையில் உள்ளவர்களை உரிய முறையில் ஆற்றுப்படுத்தி, அவர்கள் சமூகத்திற்குத் திரும்பிச் செல்லும் போது நற்பிரஜைகளாக செயற்படுவதற்கு தேவையான நல்ல பண்புகள், தலைமைத்துவத் திறன்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பது இத்தகைய புனர்வாழ்வு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தார். சிலர் தங்களது கடந்தகால செயல்பாடுகளின் காரணமாக சிறைச்சாலைக்கு வரவேண்டிய துரதிர்ஷ்டமான சூழ்நிலையை எதிர்கொண்டிருந்தாலும், அதிலிருந்து மீண்டு தமது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் திரும்பிச் செல்லும் போது புதிய சிந்தனைகள் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களுடன் வாழ்க்கையை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், சாரணர் சின்னம் பெற்றவர்கள் தொடர்ச்சியாக சாரணர் பயிற்சிகளைப் பெற்று, நாட்டின் ஏனைய சாரணர் பயிற்சி நிலையங்களில் தமது பயிற்சிகளைப் பூர்த்தி செய்து, எதிர்காலத்திலும் சாரணர் இயக்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“ஒரு நாள் சாரணர்;
வாழ்நாள் முழுவதும் சாரணர்” என்ற சாரணியக் கொள்கையின் அடிப்படையில், சாரணர் பயிற்சியின் ஊடாகப் பெற்ற தலைமைத்துவம், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நல்ல பண்புகளை வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். கடந்த காலத்தை மறந்து புதிய வாழ்க்கையை நோக்கி முன்னேறி, நல்ல சிந்தனைகளையும் பழக்கவழக்கங்களையும் வளர்த்துக்கொண்டு சமூகத்தில் பொறுப்புள்ள நற்பிரஜைகளாக உருவாக வேண்டும் என்பதே அனைவரிடமும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து சிறைச்சாலைகள் ஆணையாளர் திரு. B.D.M.G.B. திஸாநாயக்க உரையாற்றியதுடன், விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் தலைமை புனர்வாழ்வு அதிகாரி திரு. B. சுசிதரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
 
1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14
யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச உதவியுடனான வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தேவையான கட்டுமணல் மற்றும் பூச்சு மணலை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் 04.09.2026 அன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவும், 17.09.2026 அன்று வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தலைமையில் மணல் விநியோகப் பொறிமுறை தொடர்பாக அரசாங்க அதிபர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (23.09.2026) கிளிநொச்சி மாவட்ட செயலாளருடன் தொலைபேசி மூலம் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 500 கியூப் மணலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணல் விலை அரச வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு ஒரு ரிப்பர் (3 கியூப்) மணல் ரூ.44,000 என்ற விலையில் வழங்கப்படவுள்ளது.( மேற்குறிப்பிட்ட தொகையில் போக்குவரத்துக் கட்டணம் உள்ளடக்கப்படவில்லை) மணல் தேவைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் :
ஏற்கனவே மணல் தேவைக்கான பெயர் பட்டியலைச் சமர்ப்பித்துள்ள பயனாளிகளுக்கு மேலதிகமாக, மணல் தேவைப்படும் ஏனைய அரச வீட்டுத்திட்டப் பயனாளிகளின் விபரங்களையும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தேவையான மணலின் அளவு மற்றும் தேவைகள் தொடர்பான விபரங்களையும் 25.09.2026 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், ஏற்கனவே மணல் தேவைக்கான பெயர் பட்டியலைச் சமர்ப்பித்திருந்தும் இதுவரை மணலைப் பெற்றுக்கொள்ளாத பயனாளிகள், கோண்டாவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்ட பாரவூர்தி சங்கத்தில் மணலின் மாதிரியைப் பார்வையிட்டு, அதனைத் தொடர்ந்து உரிய பணத்தைச் செலுத்துமாறும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
 
 
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், காரைநகர் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (22.09.2026) காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. காரைநகர் பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி செல்வி நவரத்தினம் ரஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபன் அவர்களும் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி கிருஸ்ணானந்தன் மாலினி, காரைநகர் கிராமியக் கலை இளங்கலைஞர் திரு. சற்குணநாதன் சத்தியராஜ் மற்றும் காரைநகர் நாடகத்துறை முதுகலைஞர் திரு. திருநாவுக்கரசு பிரபாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகள் :
கலை ஆற்றுகைகளுடன் ஆரம்பமான விழா விழாவின் ஆரம்ப நிகழ்வாக காரைநகர் பிரதேசத்தின் பல்வேறு கலை ஆற்றுகைகளுடன் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பிரதேச கலைஞர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. கலாசார பேரவைப் பொருளாளர் தி. பிரபாகரன் அவர்களால் “கதிரமலை அருமைநாயகம் அரங்கு” அரங்கத் திறப்புரை நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கிழவன்காடு கலாமன்ற மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் குழு இசை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து உதவிப் பிரதேச செயலாளர் திரு. பா. முகுந்தன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. ஒரே அரங்கில் பல்வேறு கலை வடிவங்கள் பண்பாட்டுப் பெருவிழாவில் காரைநகர் பிரதேசத்தின் பாரம்பரிய கலைகளையும், கலைஞர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தி நடனக் கலை மன்ற கலைஞர்களின் பக்திப் பாடல்கள், கலைஞர் சி. பிரசாந்தன் அவர்களின் நாட்டிய நிருத்தியம், கலாசார மத்திய நிலைய மாணவர்களின் கிராமியப் பாடல்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கிராமியக் கதம்பம் மற்றும் தெய்வீக கானங்கள் ஆகியன சிறப்பாக இடம்பெற்றன. மேலும், கலாசார மத்திய நிலைய மாணவர்களின் ஒயிலாட்டம் மற்றும் குழு இசை நிகழ்வுகளும் நடைபெற்றன. தொடர்ந்து “வாத்திய சங்கமம்” எனும் இசை நிகழ்வை திருநாவுக்கரசு நுண்கலை மன்ற மாணவர்கள் வழங்கினர். இறுதியாக இலவசக் கல்வி இளையோர் அமைப்பின் மாணவர்களால் நாடகம் அரங்கேற்றப்பட்டது. கலைஞர்களுக்கு “கலைஞானச்சுடர்” விருதும் “கலைமுகை” விருதும் விழாவின் முக்கிய நிகழ்வாக, காரைநகர் பிரதேசத்தின் கலைத்துறைக்கு நீண்டகாலமாக ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலைத்துறையில் தமது நீண்டகாலப் பணியினூடாக பிரதேசத்தின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களை அடையாளப்படுத்தி, 2026ஆம் ஆண்டுக்கான “கலைஞானச்சுடர்” விருதுகளும் “கலைமுகை” விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இக்கௌரவிப்பு நிகழ்வு கலைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதுடன், அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தது. வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் இதனுடன், பிரதேச மட்ட கலைமன்றப் போட்டிகள் மற்றும் தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் நிறைவாக காரைநகர் கலாசார உத்தியோகத்தரால் நன்றியுரை வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.
5 6 7 8 9 10 11 12 13 16 18 20 21 22 23 24 2627 28 29
30 31 33 35 36 37 38 39 40 41
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பகுதிகளுக்கான பிரதான போக்குவரத்து இணைப்பாக விளங்கும் குறிகட்டுவான் இறங்குதுறை மற்றும் அதற்கான அணுகுச் சாலை புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய (23.09.2026) நேரில் களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார். குறிகட்டுவான் இறங்குதுறைக்கான அணுகுச் சாலையின் தற்போதைய நிலைமைகளை நேரில் பார்வையிட்ட அரசாங்க அதிபர், முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்திப் பணிகள் ரூ.1,283.80 மில்லியன் செலவில் இரு கட்டங்களாக முன்னெடுப்பு! குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாம் கட்டப் பணிகள் 04.ஒக்டோபர் மாதம் 2025 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டப் பணிகள் 2026.04.22 அன்று ஆரம்பிக்கப்பட்டன. இவ்விரு கட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்குபற்றி அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ரூ.1,283.80 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் முதலாம் கட்டமாக ரூ.299.80 மில்லியன் செலவில் அணுகுச் சாலை மற்றும் நடைபாதையுடனான வீதிப் புனரமைப்புப் பணிகளும், இரண்டாம் கட்டமாக ரூ.984 மில்லியன் செலவில் குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் நிறைவு பெறுவதன் மூலம் நெடுந்தீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்குச் செல்லும் போக்குவரத்து மற்றும் அணுகல் வசதிகள் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயணங்கள் இலகுபடுத்தப்படும். இதனூடாக தீவுப் பகுதிகளின் பொருளாதாரச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். நெடுந்தீவு மகா வித்தியாலய விளையாட்டு அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி பணிகளை நேரில் ஆராய்வு: நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு அபிவிருத்திப் பணிகளுக்காக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால் ரூ.22.46 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கமைவாக, அப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்து வித்தியாலய அதிபருடனும் கலந்துரையாடினார் என்பதுடன், வீதி அபிவிருத்தி பணிகளையும் ஆய்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 6 7
நலன்புரி நன்மைகள் வகைப்படுத்தப்பட்ட கொடுப்பனவு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.09.2026) மு. ப. 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபரின் தலைமையுரை
அஸ்வெசும திட்டத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார். அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் யாழ்ப்பாண மாவட்டம் தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், அரச அதிகாரிகளுக்கான மாநாடுகள் மற்றும் இணையவழிக் கலந்துரையாடல்களிலும் மாவட்டத்தின் செயற்பாடுகள் பாராட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். தகுதியுடையவர்களுக்கு உரிய நன்மைகள் சென்றடைவதையும், தகுதியற்றவர்கள் நன்மைகளைப் பெறுவதைத் தடுப்பதையும் உறுதி செய்வதே அஸ்வெசும போன்ற நலன்புரித் திட்டங்களின் அடிப்படை நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, தகுதியுடைய ஒருவர் நலன்புரிக் கொடுப்பனவைப் பெற முடியாத நிலை ஏற்படாதவாறும் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களில் அவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, கணினி முறைமையில் காணப்படும் தகவல்களுடன் கள நிலவரங்களையும் பரிசீலித்து, சாத்தியமான தீர்வுகளை விரைவாக வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அஸ்வெசுமவை வெறுமனே கொடுப்பனவு வழங்கும் திட்டமாகக் கருதாமல், வறுமை ஒழிப்பு மற்றும் சமூக வலுவூட்டலின் பரந்த நோக்கத்துடன் அணுக வேண்டும் எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், ஒரு குடும்பத்தின் வறுமை நிலையை வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்தார். குடிநீர், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் உள்ளடக்கிய பல்பரிமாண வறுமையை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அஸ்வெசும போன்ற திட்டங்களின் இறுதி நோக்கம் மக்களை நிரந்தரமாக நலன்புரிக் கொடுப்பனவுகளில் தங்கியிருக்கச் செய்வது அல்ல, அவர்களை படிப்படியாக வறுமையிலிருந்து மீட்டு, பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், அரச சேவையில் நாம் வகிக்கும் பதவிகள் எமக்குக் கிடைத்துள்ள பொறுப்பும் வாய்ப்பும் ஆகும். அந்த வாய்ப்பை பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்துவதே எமது கடமை. எமது காலப்பகுதியில் மக்களுக்குச் செய்யக்கூடிய நல்ல பணிகளைச் செய்து முடிப்பதே அரச சேவையின் உண்மையான பெறுமதியாகும் எனவும் குறிப்பிட்டார். அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் இடர்பாடுகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் மாவட்டச் செயலக மட்டத்தில் தொடர்ச்சியான வழிகாட்டல்களும் ஒருங்கிணைப்பும் வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
அஸ்வெசும வகைப்படுத்தப்பட்ட கொடுப்பனவு – நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சவால்கள் குறித்து ஆராய்வு :
நலன்புரி நன்மைகள் ஊடாக வழங்கப்படும் வகைப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளான முதியோர் கொடுப்பனவு, மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு ஆகியவற்றுக்கான பயனாளர்களின் தரவுகளை சமூகப் பதிவேட்டு தரவுத்தளத்தில் உள்ளீடு செய்யும் பணியில் எதிர்நோக்கப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, தரவு உள்ளீட்டுச் செயற்பாடுகளில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், நலன்புரி நன்மைகள் தொடர்பான கணினிமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. மேலும், கொடுப்பனவு நடவடிக்கைகளை வினைத்திறனுடனும் துரிதமாகவும் முன்னெடுப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் எதிர்நோக்கப்படும் நடைமுறைச் சவால்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பங்குபற்றியவர்கள் விபரங்கள் :
யாழ்ப்பாண மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்சினி, நலன்புரி நன்மைகள் சபையின் வடமாகாண இணைப்பாளர் திருமதி. மோகனநாதன், நலன்புரி நன்மைகள் சபையின் மாவட்ட உத்தியோகத்தர், மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர், பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக நலன்புரி விடய உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13