நேர்மறை ஒழுக்கக் கட்டுப்பாடு தொடர்பாக 60 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தூ (22.09.2026) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபரின் தலைமையுரை
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்பள்ளி மட்டத்திலிருந்தே பிள்ளைகளிடையே நேர்மறையான சிந்தனை, ஒழுக்கம், பொறுப்புணர்வு, தலைமைத்துவப் பண்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பது அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பயிற்சிப் பட்டறையில் உரையாற்றிய அவர், ஒரு பிள்ளை தனது குடும்பச் சூழலிலிருந்து வெளியே வந்து சமூகத்துடன் முதன்முதலாக இணையும் முக்கியமான தளமாக முன்பள்ளிகள் விளங்குகின்றன எனக் குறிப்பிட்டார். ஒரு பிள்ளையின் சமூகமயமாக்கல் செயற்பாட்டில் குடும்பத்திற்கு அடுத்த முக்கியமான இடம் முன்பள்ளியாகும். எனவே, முன்பள்ளி ஆசிரியர்களின் சிந்தனைகள், அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகள் பிள்ளைகளின் எதிர்கால ஆளுமை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனத் தெரிவித்தார். மேலும், இன்றைய பெற்றோர் இருவரும் தொழிலில் ஈடுபடும் சூழ்நிலை அதிகரித்துள்ள நிலையில், பிள்ளைகளின் பராமரிப்பு மற்றும் வழிகாட்டலில் முன்பள்ளிகளின் பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பிள்ளைகளுக்கு ஒழுக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை கற்பிப்பது வெறுமனே அறிவுறுத்தல்களாக இல்லாமல், நடைமுறைச் செயற்பாடுகள் மூலம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
திண்மக் கழிவுகளை வகைப்படுத்துவது குறித்து பிள்ளைகளுக்கு கூறுவது மட்டும் போதாது. அவர்கள் அதை நடைமுறையில் செய்து கற்றுக்கொள்ளும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். சிறு வயதில் உருவாக்கப்படும் இத்தகைய பழக்கவழக்கங்களே எதிர்காலத்தில் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குகின்றனஎனவும் தெரிவித்தார். முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அவர், ஒருவர் எந்த உயர்ந்த பதவியை அடைந்தாலும், தனது சிறுவயதில் வழிகாட்டிய ஆசிரியர்களின் தாக்கத்தை மறக்க முடியாது எனக் குறிப்பிட்டார். இதேவேளை, சாரணர் இயக்கத்தின் ஊடாக முன்பள்ளி பிள்ளைகளிடையே தலைமைத்துவம், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கான புதிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். 2027ஆம் ஆண்டு முதல் முன்பள்ளி மட்டத்திலேயே சாரணியச் சிந்தனைகள் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், இத்தகைய செயற்பாடுகள் பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
முன்பள்ளி மட்டத்திலேயே மழலைகள் சாரணர்களை (சுப்பிப்பி) உருவாக்க நடவடிக்கை
அரசாங்க அதிபரின் ஒழுங்குபடுத்தலின் கீழ், யாழ்ப்பாண மாவட்ட சாரணர் சங்கத்தின் உதவி மாவட்ட ஆணையாளர் திரு. ஞானசம்பந்தன் அவர்கள், முன்பள்ளி மட்டத்திலிருந்தே மழலைகள் சாரணர்களை உருவாக்கி, அவர்களிடையே சாரணப் பண்புகள், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கமளித்தார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்வின் பிரதான நோக்கம்
பிள்ளைகளின் உடல், உள மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், வீட்டிலும் முன்பள்ளியிலும் நேர்மறையான ஒழுக்கத்தை உருவாக்குதல், சிறுவர் பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பில் ஆசிரியர்களை தெளிவூட்டுதல் மற்றும் தண்டனையற்ற நேர்மறை ஒழுக்க முறைகள் மூலம் பிள்ளைகளின் நல்ல பழக்கவழக்கங்களையும் பொறுப்புணர்வையும் வளர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அத்துடன், பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு மற்றும் பெற்றோருக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
வளவாளர்கள்:
“பிள்ளைகளிடம் ஏற்படும் சமூக பிறழ்வு நடத்தைகளை கட்டுப்படுத்துதல்” தொடர்பான வளவாளர் பகிர்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி S. ஜீவசுதன் வழங்கினார். மேலும், “நேர்மறை ஒழுக்கக் கட்டுப்பாட்டினை பிள்ளைகளிடையே வளர்த்தல்” என்ற தலைப்பில் மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. இ. அமலன் விளக்கமளித்தார். இவ் விழிப்புணர்வு ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட வர்கள் : யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. இ. செந்தூரன் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் கௌரவ திருமதி மதிவதனி விவேகானந்தராஜா அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (21.09.2026) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ க. ஜெகதீசன், யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர் கெளரவ இ. தயாளன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன், மாநகர சபை உறுப்பினர்களான கெளரவ என். எம். அப்துல்லாஹ், கெளரவ எஸ். சொரூபன், கெளரவ ரி. மயூரன் கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர் திரு. ப. கஜமுகன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் உதவி சிரேஷ்ட செயலாளர் உள்ளிட்ட அரசாங்க துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அரசாங்க அதிபரின் தலைமையுரை :
கூட்டத்திற்கு வருகை தந்த மாநகர கெளரவ முதல்வர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், கல்லுண்டாய் பகுதியில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, நடைமுறைச் சாத்தியமானதும் நிலையானதுமான தீர்வொன்றை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இவ் விசேட கூட்டம் கூட்டப்பட்டதாக என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவசரமாகவோ அல்லது ஒரு தரப்பின் கருத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டோ தீர்மானங்களை மேற்கொள்வது பொருத்தமானதல்ல எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். கல்லுண்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுப்பதற்கான தீர்வுகளை அடையாளம் காண்பதுடன், அவற்றை ஒருமுறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக மட்டுப்படுத்தாமல், தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தக்கூடிய நிலையான செயற்றிட்டமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, தற்போதைய நிலைமைகளுக்கு பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அடையாளம் கண்டு, அவற்றை நீண்டகால அடிப்படையில் நிலைபேறான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் :
கல்லுண்டாய் பகுதியில் திண்மக்கழிவு மேடு எரியூட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் புகைமூட்டத்தால் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாநகர சபை, பிரதேச சபை, பிரதேச செயலகங்கள் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு அனைத்துத் தரப்பினரும் இணைந்தவகையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
15 அடி உயர பாதுகாப்பு வேலி :
யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியைச் சுற்றி 15 அடி உயரமான பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பாதுகாப்பு வேலியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக அமைத்து முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வேலி முழுமையாக அமைக்கப்படும் வரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை இரவு நேரங்களில் பொலிஸாரின் கண்காணிப்பை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
20 கண்காணிப்பு கேமராக்கள் :
யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் கல்லுண்டாய் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மொத்தம் 20 CCTV பாதுகாப்புக் கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 04 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 16 கமராக்களையும் எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் பொருத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மின்னல் பாதுகாப்பு :
குப்பை எரியூட்டல் போன்ற சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் தேவையான 10 நீர்த்தாங்கிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முன்னர் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இடிதாங்கி (Lightning Protection) வசதியைப் பொருத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த அபாய முன்னெச்சரிக்கை அறிக்கை :
கல்லுண்டாய் பகுதியில் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயங்கள் தொடர்பில் Disaster Risk Assessment மேற்கொண்டு, அவசரநிலை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை யாழ்ப்பாண மாநகர சபைக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சேதனப் பசளை உற்பத்திக்கான காணி :
கல்லுண்டாய் பகுதியில் கிடைக்கப்பெறும் சேதனக்கழிவுகளைப் பயன்படுத்தி சேதனப் பசளை உற்பத்தித் தளம் ஒன்றை அமைப்பதற்கான அக் காணியில் ஒரு பகுதியினை நிரந்தரமாக வழங்குவதற்கான கோரிக்கை கடிதத்தினை யாழ்ப்பாண மாநகர சபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதிக்காத வகையில் திண்மக்கழிவு முகாமைத்துவம் :
கல்லுண்டாய் பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கழிவுகளை எரியூட்டுவதைத் தவிர்ப்பதுடன், முறையான பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உக்கக்கூடிய சேதனக்கழிவுகளை மாத்திரம் கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதிக்கு கொண்டு செல்வதற்கான நடைமுறையைப் பின்பற்றுவதுடன், உக்காத கழிவுகளை அங்கு கொண்டு செல்வதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், உரிய அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதிக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மேற்பார்வைக்கும் வாய்ப்பு :
கல்லுண்டாய் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக கல்லுண்டாய் பகுதி பொதுமக்களிடமிருந்து 10 பேரின் பெயர் பட்டியல் யாழ்ப்பாண மாநகர சபைக்கு வழங்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் வழங்கி, குறித்த பகுதியை மேற்பார்வையிடுவதற்கான அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை பாதுகாப்பானதும், முறையானதும், சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தீர்மானங்கள் அனைத்தையும் உரிய காலவரையறைக்குள் நிறைவேற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது
கல்லுண்டாய் பகுதிக்கு களவிஜயம் :
கல்லுண்டாய் பகுதியில் தற்போதுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலைமைகளை நேரில் பார்வையிட்டு ஆராய்வதற்கும், அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கும், அரசாங்க அதிபர், மாநகர சபை கௌரவ முதல்வர், வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், மாநகர சபை கெளரவ பிரதி முதல்வர், மாநகர சபை கெளரவ உறுப்பினர், மேலதிக அரசாங்க அதிபர், மாநகர சபை ஆணையாளர், பொறியியலாளர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் இன்று மாலை 5.00 மணியளவில் களவிஜயம் மேற்கொண்டனர்.
களவிஜயத்தின் போது எடுக்கப்பட்ட உடனடித் தீர்மானங்கள் :
களவிஜயத்தின் போது, கல்லுண்டாய் பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட காணியின் முன்பகுதியில் ஒரு பகுதியை இராணுவத்தினரின் இயந்திர உதவியுடன் சுத்தப்படுத்தி, அவ்விடத்தை உக்கும் கழிவுகளை மாத்திரம் சேகரித்து வைப்பதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட இடமாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. மேலும், இவ்விடத்தில் அப் பகுதி பொதுமக்களின் பங்கேற்புடன் கொண்டு வரப்படும் கழிவுகளைப் பரிசீலித்து, அவை உக்கும் கழிவுகளா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே குறித்த இடத்தில் சேகரிப்பதற்கான நடைமுறையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. உக்கும் கழிவுகளைத் தவிர்ந்த ஏனைய கழிவுகள் கொண்டு வரப்பட்டால், அவற்றை மாநகர சபையினால் மீள எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டது. அத்துடன், கல்லுண்டாய் பகுதியில் தற்போது எரிந்து கொண்டிருக்கும் கழிவுக் குவியல்களை இராணுவத்தினரின் உதவியுடன் அணைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் உக்கும் கழிவுகளை உரிய முறையில் சேகரித்து, அவற்றை இயற்கை உரமாக மாற்றும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல வலுப்படுத்தும் நோக்கில், Save a Life அமைப்பு, Ceylon Cold Stores மற்றும் Viridis Recyclers ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட “Jaffna Recycling Hub” இன்று (21.09.2026) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, யாழ்ப்பாணம் செம்மணி, அரியாலையில் அமைந்துள்ள மறுசுழற்சி மையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
அரசாங்க அதிபரின் உரை
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை முற்றாகத் தடுப்பது சவாலானதாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால், அவற்றின் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகச் சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவது நடைமுறைக்கு ஏற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான நடவடிக்கையாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். தாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் குளிர்பானங்கள் கண்ணாடிப் போத்தல்களில் வழங்கப்பட்டதுடன், அப்போத்தல்களை சேகரித்து மீண்டும் ஒப்படைத்து, அதற்குப் பதிலாக குளிர்பானங்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போதைய நிலையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மறுசுழற்சி மையத்தின் ஊடாக பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கும் பணியில் நேரடியாக சுமார் 10 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாகவும், சேகரிக்கப்பட்ட கழிவுகள் அடுத்தடுத்த கட்டங்களில் பதப்படுத்தப்பட்டு புதிய பொருட்களாக மாற்றப்படுவதன் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றாகத் தடுக்க முடியாத நிலையிலும், அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை கணிசமாகக் குறைக்க முடியும். மாவட்டத்திலும் நாட்டிலும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு இத்தகைய முயற்சிகள் சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் Save a Life நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிப்பாக, “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பல்வேறு சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு அந்நிறுவனம் வழங்கி வரும் ஆதரவு பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண மறுசுழற்சி மையத்தின் செயற்பாடுகள் வெற்றியடைவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்து, தூய்மையானதும் பசுமையானதுமான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு இந்த முயற்சி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் எனவும் அரசாங்க அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு கொண்டு செல்லும் மையம் “Jaffna Recycling Hub”
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்து, அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது. இதன் ஊடாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்தல், தரம் பிரித்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு கட்டுகளாக (Bales) அழுத்தப்பட்ட பின்னர் மறுசுழற்சிக்கு Colombo Viridis Recyclers நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முயற்சியானது தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் கையாள்வதற்கான சமூகப் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு விலை நிர்ணயம்
பொதுமக்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இந்த மையத்தில் ஒப்படைக்க முடியும். ஒப்படைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் வகை மற்றும் எடைக்கு ஏற்ப ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.
ஒப்படைக்கும் இடம்
பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைக்க விரும்புவோர் யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை, இலக்கம் 37, இளையதம்பி ஒழுங்கையில் அமைந்துள்ள மையத்தில் ஒப்படைக்க முடியும் என்பதுடன், 077 228 4939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் முடியும். இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, Save a Life அமைப்பின் பணிப்பாளர், திரு ராகுலன் கந்தசாமி, மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், Ceylon Cold Stores நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் தில்ஷானி எதிரிசிங்க, நுகர்வோர் மற்றும் வெளிப்புற ஈடுபாட்டு முகாமையாளர் பிரேமலால் பெரேரா, திட்டத் தலைவர் – வெளிப்புற சுற்றுச்சூழல் விவகாரங்கள் துமிந்து பெரேரா, Viridis Recyclers நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புத்திக முத்துகுமாரண உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான முயற்சியாண்மை அபிவிருத்தி வதிவிடப் பயிற்சி நெறியின் (EDP) இறுதி நாள் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (21.09.2026) அரியாலை சர்வோதய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 14.09.2026 அன்று ஆரம்பிக்கப்பட்ட இவ்வதிவிடப் பயிற்சி நெறி, தொடர்ச்சியாக 08 நாட்கள் இடம்பெற்றதுடன், இளம் முயற்சியாளர்களின் தொழில் முயற்சித் திறன்கள், வணிக முகாமைத்துவம் மற்றும் தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. இறுதி நாள் நிகழ்விற்கு சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். சசீபன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்ததுடன், பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த இளம் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
அரசாங்க அதிபர் உரை :
அரசாங்க அதிபர் உரையாற்றுகையில், இங்கு பயிற்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் தொழில் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றீர்கள். பல்வேறு சவால்களைத் தாண்டி இன்று தொழில் முயற்சியாளர்களாக வளர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. இளம் வயதிலேயே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு, தங்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், எதிர்காலத்தில் ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும், தொழில் முயற்சிகளின் வளர்ச்சிக்கு அறிவு, திறன், மனப்பான்மை ஆகிய மூன்றும் அவசியம் எனவும், தொழில் தொடர்பான அறிவை தொடர்ந்து மேம்படுத்துவதுடன், பயிற்சிகள் மூலம் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இன்றைய போட்டிமிக்க வணிகச் சூழலில் வாடிக்கையாளர்களை அணுகும் விதம், சேவை மனப்பான்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவை தொழில் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரே பொருளை அல்லது சேவையை பலர் வழங்கினாலும், வாடிக்கையாளரை அணுகும் விதமும் வழங்கும் சேவையின் தரமுமே எமது தொழிலை வேறுபடுத்திக் காட்டும். எனவே, கிடைக்கும் பயிற்சி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, புதிய அறிவையும் திறன்களையும் தொடர்ந்து பெற்றுக்கொண்டு, தமது தொழில் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், இளம் வயதிலேயே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் முயற்சிகளைப் பாராட்டிய அரசாங்க அதிபர், அவர்களின் தொழில் முயற்சிகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, எதிர்காலத்தில் பல்வேறு முன்னேற்றங்களைப் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
வதிவிட பயிற்சி நெறி :
இம்முறை ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டு அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் வளர்ந்து வரும் 25 இளம் முயற்சியாளர்கள் நேர்முகத் தேர்வு மூலம் மிகவும் துல்லியமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் 16 முயற்சியாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 9 முயற்சியாளர்களும் உள்ளடங்குவர். இம்முறை புதிய திட்டத்தின்கீழ் 8 நாட்கள் வதிவிடப் பயிற்சியாக வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பங்குபற்றிய முயற்சியாளர்களுக்கு மேலும் 4 நாட்களைக் கொண்ட வியாபாரத்திட்டம் (Business Plan) தயாரிக்கும் தங்குமிடப் பயிற்சி ஒன்றினை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் முழுமையான அனுமதியுடன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் நிதி ஒதுக்கீட்டில், வடக்கு மாகாணத்திலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே இந்த விசேட பயிற்சி நெறி பிரத்தியேகமாக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சியில் வவுனியா மாவட்டச் செயலக முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்கள் திரு. தர்மராஜா கிரிகரன் மற்றும் செல்வி. சி. கோகிலவாணி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் வளவாளர்களாக பங்குபற்றினர். இன்றைய சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

அரச உத்தியோகத்தர்களுக்கான 2026ஆம் ஆண்டின் தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நேற்று (19.09.2026) சனிக்கிழமை மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். செப்டெம்பர் 16ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டித் தொடரில் இலங்கை அரச சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு அரச திணைக்களங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றிருந்தன. இம்முறை முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் தேசிய மட்டத்தில் இப்போட்டித் தொடர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. போட்டிகளின் இறுதிநாளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கான விறுவிறுப்பான போட்டிகள் இடம்பெற்றதுடன், வெற்றி பெற்ற அணிகளுக்கு விருந்தினர்களால் கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டி முடிவுகள்:
பிரிவு போட்டிகள் (A Division) லீக் சுற்று (பெண்கள்) :
விறுவிறுப்பான லீக் சுற்றின் முடிவில் விமானப்படை (Airforce) அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
கடற்படை (Navy) அணி இரண்டாம் இடத்தைப் (Runner-up) பெற்றது.
நாக்-அவுட் சுற்று (பெண்கள்):
நாக்-அவுட் சுற்றில் அதிரடியாக விளையாடிய கடற்படை (Navy) அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
விமானப்படை (Airforce) அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.'
B' பிரிவு போட்டிகள் (B Division) லீக் சுற்று(பெண்கள்):
இச்சுற்றில் விமானப்படை (Airforce) அணி சாம்பியன் பட்டத்தையும்,யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி இரண்டாம் இடத்தையும், வட மாகாண கல்வித் திணைக்கள (Education) அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
நாக்-அவுட் சுற்று (பெண்கள்):
நாக்-அவுட் சுற்றில் வட மாகாண கல்வித் திணைக்கள அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
விமானப் படை (Airforce) அணி இரண்டாம் இடத்தையும், யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி மூன்றாம் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டன.
'C' பிரிவு மற்றும் இதர சிறப்புப் பிரிவுகள் 'C' பிரிவு (C Division (பெண்கள்) :
இப்பிரிவில் வட மாகாண கல்வித் திணைக்கள (Education) அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆண்கள் அணி:
ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக அணி சாம்பியன் பட்டம் வென்றது. ( 10 வருடத்திற்குப் பின்னர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது)
வட மாகாண கல்வித் திணைக்கள (Education) அணி இரண்டாம் இடம் பெற்றது.
40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு (Over 40) (பெண்கள்) :
யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சாம்பியன் பட்டத்தையும், வட மாகாண கல்வித் திணைக்கள (Education) அணி இரண்டாம் இடத்தையும் வென்றன.
கலப்பு பிரிவு (Mixed):
ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்ற கலப்புப் பிரிவிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியது. ( தொடர்ந்தும் இரண்டாம் தடவையாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது) வட மாகாண கல்வித் திணைக்கள (Education) அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், பிரதி பிரதம செயலாளர் (நிதி) திரு. என். எஸ். ஆர். சிவரூபன், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், அரச சேவை வலைப்பந்தாட்டப் போட்டியின் தலைவர் திருமதி ரிக்ஷி நனயக்கார உள்ளிட்ட அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







