“சிறுவர் உரிமைகள் மற்றும் தரமான கல்வியை சிறுவர்கள் பெறுவதை உறுதி செய்தல்” எனும் தொனிப்பொருளில், தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான திறன் மேம்பாட்டு செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்று (11.08.2026) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது. யாழ். சமூக செயற்பாட்டு மையம் (JSAC), தீவக வலயக் கல்விப் பணிமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்த இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதன்போது உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தில் வளங்கள் மற்றும் வசதிகள் குறைந்த கல்வி வலயங்களில் ஒன்றாக தீவக கல்வி வலயம் காணப்படுவதுடன், அங்குள்ள பல பாடசாலைகளின் கல்வி அடைவு மட்டமும் குறைந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்தார். எனவே, மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 446 பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வளப்பங்கீட்டு அடிப்படையில் குறைந்தளவு வளங்களைப் பெறும் வலயங்களில் தீவக கல்வி வலயமும் ஒன்றாக விளங்குவதாக தெரிவித்தார். குறிப்பாக, குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பல பாடசாலைகள் தீவகப் பிரதேசத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், தீவகப் பிரதேசத்தின் தனித்துவமான சமூகச் சூழல், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அதிபர்களும் ஆசிரியர்களும் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும், சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடல் கடந்து பாடசாலைகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டிய சூழ்நிலையும் இருப்பதாகவும் தெரிவித்தார். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் பாடசாலைகளை சிறந்த முறையில் நிர்வகித்து, ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஆளுமை வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திறன்களை மேம்படுத்துவது அதிபர்களின் முக்கிய பொறுப்பாகும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
இதேவேளை, புங்குடுதீவு சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாணவர்களை சாரணர் இயக்கத்தில் இணைத்து, அவர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அரசாங்க அதிபர் பாராட்டினார். தொடர்ந்து அனைத்து பாடசாலைகளிலும் சாரணர் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை என்பது மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் இடம் மட்டுமன்றி, அவர்களின் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் முக்கியமான நிறுவனமாகும் எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்புகளை ஏற்கக்கூடியவர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை பாடசாலைகளே ஏற்படுத்துகின்றன எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது தீவகப் பிரதேசத்தில் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும், இம்மாற்றங்களை மேலும் வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், தமக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பணிக்காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, பாடசாலை நிர்வாகத்திலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அதிபர்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். இச் செயலமர்வை ஏற்பாடு செய்த யாழ். சமூக செயற்பாட்டு மையத்திற்கும் (JSAC) நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர், தீவக கல்வி வலயத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. து. லெனின் அறிவழகன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் திரு. த. கனகராஜ், கல்வி அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் யாழ். தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பா. தனபாலன், யாழ். தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. கு. கமலநாதன், தீவக வலய உடற்கல்வி மற்றும் தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட 150 மணித்தியால இரண்டாம் மொழியான சிங்கள மொழிக் கற்கைநெறியின் இறுதிநாள் நிகழ்வு இன்று (08.08.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்சினி அவர்களும், கௌரவ விருந்தினர்களாக அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வடமாகாண இணைப்பாளர் திரு. N. உமாநாத் மற்றும் வளவாளர் திரு. அ. சிறிரஞ்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அதிதிகளின் வரவேற்பைத் தொடர்ந்து, 150 மணித்தியால கற்கைநெறியை நிறைவுசெய்த உத்தியோகத்தர்கள் தாம் கற்றுக்கொண்ட சிங்கள மொழித் திறனையும் பெற்றுக்கொண்ட அறிவையும் வெளிப்படுத்தும் வகையில் பாடல்கள், நாடகங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகளை சிங்கள மொழியில் சிறப்பாக வழங்கினர். இந்நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர், இக்கற்கைநெறியில் பங்குபற்றிய உத்தியோகத்தர்கள் தாம் பெற்றுக்கொண்ட மொழித் திறனை தொடர்ந்து நடைமுறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
பல அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக சுமார் மூன்று மாதங்களாக இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டதாகவும், 150 மணித்தியாலங்கள் என்பது ஒரு மொழியில் முழுமையான தேர்ச்சியைப் பெறுவதற்குப் போதுமான காலப்பகுதி அல்ல என்றபோதிலும், உத்தியோகத்தர்கள் தமது இயலுமைக்கு ஏற்ப சிறப்பாகப் பயிற்சியை நிறைவுசெய்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மொழியைக் கற்றுக்கொள்வதுடன் அதனை நிறுத்திவிடாமல், நடைமுறை வாழ்க்கையிலும் அலுவலகச் சூழலிலும் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமே மொழித் திறனை மேலும் மேம்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். மேலும், அரச அலுவலகங்களில் சிங்கள மொழியைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை உத்தியோகத்தர்கள் அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன், இதுவரை இப்பயிற்சியைப் பெறாத அரச உத்தியோகத்தர்களையும் இணைத்துக்கொண்டு புதிய பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் எனவும், ஏற்கனவே பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்கள் தமது அறிவையும் திறன்களையும் மீளாய்வு செய்து மேம்படுத்திக்கொள்ளும் வகையில் மீளாய்வு ஒன்றினை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இப் பயிற்சித் திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு பங்களிப்பு வழங்கிய அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வடமாகாண இணைப்பாளர், வளவாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அரசாங்க அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். தேசிய அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இக் கற்கைநெறியில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் 102 உத்தியோகத்தர்கள் தடைதாண்டலில் பூர்த்தி செய்து இவ் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான டிஜிட்டல் கொடுப்பனவுகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று (07.08.2026) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் (Payments and Settlements Department) சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர்களான ஜி. கே. மொஹொட்டி மற்றும் ஏ. எஸ். எம். பி. எம். பி. அகலவத்த ஆகியோருடன், பிராந்திய முகாமையாளர் எஸ். பகீரதி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இச் செயலமர்வில், தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர், இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், திறன்மிக்க சேவை வழங்கலுக்கும் முக்கிய பங்காற்றுவதாகக் தெரிவித்தார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமானவை, பாதுகாப்பானவை, வெளிப்படைத்தன்மை கொண்டவை என்பதுடன், பொதுமக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இலகுவான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வழிவகுப்பதாகவும் தெரிவித்தார்.
அரசின் கொள்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல், வறுமை ஒழிப்பு மற்றும் "கிளீன் ஸ்ரீலங்கா" ஆகியவை முக்கிய செயற்பாடுகளாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும், அனைத்து அரச திணைக்களங்களும் தங்களது கொடுப்பனவு மற்றும் வரவு செலவுத் தொடர்பான நடவடிக்கைகளை படிப்படியாக டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அரசிற்கு செலுத்தப்படும் பல்வேறு கட்டணங்களையும் டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்கான வசதிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன என்றும், பணத்தாள்கள் மற்றும் நாணயங்களின் பயன்பாட்டைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே காலத்தின் தேவையாகும் எனவும், இதற்காக அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார். இந் நிகழ்வில் மத்திய வங்கியின் உத்தியோகத்தரான மாலினி அச்சுதன் அவர்கள் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமைகள், அவற்றின் பாதுகாப்பு, பயன்பாட்டு முறைகள் மற்றும் பொதுமக்கள் பெறும் நன்மைகள் தொடர்பாக முன்வைப்பு மூலம் விரிவாக எடுத்துரைத்தார். அத்துடன், மாவட்டச் செயலக வளாகத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அமைத்திருந்த தகவல் நிலையங்கள் ஊடாக டிஜிட்டல் கொடுப்பனவு சேவைகள் தொடர்பான விளக்கங்களும், நடைமுறை வழிகாட்டல்களும் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டன.

தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது. “அழகான நாடு – புன்னகைக்கும் மக்கள்” என்ற இலக்குடன், அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டுப் பங்களிப்பில் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (08.08.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தின் இன்றைய நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாணக் கோட்டை வெளிப்புறப் பகுதியில் ஆரம்பமாகியது. “கிளீன் ஸ்ரீலங்கா” செயற்றிட்டத்தின் மாகாண இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், மாவட்ட இணைப்பாளர் திரு. P. கஜமுகன் ஆகியோரும் பங்குபற்றினார்கள். இதன்போது, யாழ்ப்பாண கோட்டையினைச் சுற்றிய தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்றைய தூய்மைப் பணியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாநகர சபையினர், பொலிஸ், இராணுவம், விமான படை, கடற்படை , யாழ்ப்பாண மாவட்ட சாரணர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலக J/81 கிராம அலுவலர் பிரிவு பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியதுடன், Save a Life, Sevalanka Foundation, World Vision என்பன அனுசரணை வழங்கினார்கள். மேலும், இதே சம நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலக ரீதியாகவும் ஒரு நிகழ்வும் மற்றும் மாவட்டத்தின் அனைத்து கிராம சேவக பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் "PayDigital Jaffna" விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு இன்று (07.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவித்தல், டிஜிட்டல் நிதி அறிவை மேம்படுத்தல் மற்றும் வட மாகாண மக்களை பாதுகாப்பானதும் இலகுவானதுமான டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளைப் பயன்படுத்த ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அத்துடன், தனது முதல் உத்தியோகபூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தொடுகை பணப்பரிவர்த்தனையையும் மேற்கொண்டார். நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள் திணைக்கள இயக்குநர் வசந்த அளுவிஸ், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சிவகரன், இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சிப் பிராந்திய முகாமையாளர் திருமதி பகீரதி செந்தில்மாறன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் G.H. மாறப்பன மற்றும் Cargills Ceylon PLC நிறுவனத்தின் பிரதித் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரஞ்சித் பேஜ் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நிகழ்வில் பங்கேற்றிருந்த அரச மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களின் Lanka QR குறியீடுகள் வர்த்தகர்களிடம் அதிதிகளால் வழங்கப்பட்டன. இக் QR குறியீடுகள் மூலம் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது. இந் நிகழ்வு இன்று மற்றும் நாளை (08.08.2026) யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பொதுமக்கள், டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் நாளாந்த பரிவர்த்தனைகளை எவ்வாறு எளிதாக்குகின்றன என்பது தொடர்பாக அரச மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, நடைமுறை வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இந் நிகழ்வில் Cargills Ceylon PLC நிறுவனத்தின் அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரிகள், அரச மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.







