யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) மு. ப 11.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியம் எனவும், விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி, யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு விவசாயத்துறை சார்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். மாவட்டத்தின் விவசாயத்துறை சார்ந்த உத்தியோகத்தர்களுடனான கூட்டத்தில் தலைமையுரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாயிகளின் உற்பத்திச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியாக, விவசாயக் காப்புறுதி தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் குறித்து நேற்றைய தினம் கொழும்பிலிருந்து வருகை தந்த விவசாயக் காப்புறுதிச் சபையின் உயர் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் விவசாயக் காப்புறுதி தொடர்பான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டன. தற்போதைய காலநிலை மாற்றங்கள் விவசாயத்துறையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சூழல் காணப்படுவதால், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்திற்கொண்டு உரிய வழிகாட்டல்களையும் ஆதரவையும் வழங்குவது அவசியமாகும். விவசாய உற்பத்தி தொடர்பான புள்ளிவிபரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுகின்றன.
குறிப்பாக, நீர்ப்பாசன வசதிகள் குறைவாகக் காணப்படும் பகுதிகளிலும் விவசாயிகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து செயற்படுவதன் மூலம் இத்தகைய சவால்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார். மேலும், விவசாயக் கூட்டங்களில் அடையாளம் காணப்படும் பிரச்சினைகள், குறிப்பாகப் பயிர்களைத் தாக்கும் கால்நடை கட்டுப்படுத்துதல் தொடர்பான சவால்கள், உரிய முறையில் ஆராயப்பட்டுத் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். மாவட்டத்தின் விவசாயத்துறை அபிவிருத்தியை நிலையான முறையில் முன்னெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இன்றியமையாதவை எனவும் தெரிவித்தார். கடந்த காலங்களில், குறிப்பாக இவ்வாண்டில், விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றியைத் தெரிவித்த அரசாங்க அதிபர், எதிர்காலத்திலும் அனைவரினதும் அர்ப்பணிப்பான பங்களிப்புடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாயத்துறையை மேலும் முன்னேற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
ஆராயப்பட்டன விடயங்கள் :
யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன. தொடர்ந்து விவசாய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக வங்கிகளினால் மேற்கொள்ளப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்து கொண்டிருந்த வங்கி முகாமையாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டன. மேலும், இலங்கை வங்கியினால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோருக்காக விசேட கடன் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. விவசாயக் கடனுக்கு வருடாந்தம் 10% வட்டியிலும், கால்நடை வளர்ப்புக் கடனுக்கு 9% வட்டியிலும் அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. கடன் பெறுவதற்கான தகைமைகள், பிணை நிபந்தனைகள் மற்றும் ஏனைய விபரங்களைச் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இளம் விவசாயத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க இலகு கடன் திட்டம் :
இளம் விவசாயத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கமத்தொழில் அமைச்சினால் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கடன் திட்டத்தின் வட்டி 4% சதவீதமாகும்.
இக்கடனைப் பெற்றுக்கொள்ள விரும்பும் இளம் விவசாயத் தொழில் முயற்சியாளர்கள் தமது பிரதேச செயலாளர் ஊடாக மாவட்டச் செயலாளருக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பயிர்க் காப்புறுதிக் காலம் :
மஹா நெற்பயிர் செய்கைப் பருவத்திற்கான பயிர்க் காப்புறுதிக் காலம் 2026.10.15 முதல் 2027.02.28 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், மாகாண விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், வங்கிகளின் முகாமையாளர்கள், துறைசார் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
யாழ்ப்பாண மாவட்டத்தின் கடலோர சமூகங்களை சுனாமி அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் தயார்படுத்துவதற்கான 'UNESCO-IOC சுனாமி தயார்நிலை அங்கீகாரத் திட்டம் (TRRP) தொடர்பான விசேட மாவட்டப் பங்குதாரர்கள் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.10.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தின் அறிமுகவுரையினை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.ஏ.எம்.ஆர்.என். கே.அழககோன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
அரசாங்க அதிபர் அவர்களின் தலமையுரை :
சுனாமி உள்ளிட்ட அனர்த்தங்களை எதிர்கொள்ள முன்னாயத்தமும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் அவசியம் – அரசாங்க அதிபர் 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரனர்த்தத்தின் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் சுனாமி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வலியுறுத்தினார். 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற சுனாமிப் பேரனர்த்தம் பல உயிர்களையும் உடைமைகளையும் காவுகொண்டதுடன், பல குடும்பங்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. யாழ்ப்பாண மாவட்டத்திலும் வடமராட்சி, தெல்லிப்பழை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன், பல துயரச் சம்பவங்கள் இடம்பெற்றதாக அவர் நினைவுகூர்ந்தார். அனர்த்தங்களுக்கு முன்னர் மக்களைத் தயார்படுத்துதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நம்பகமான முன்னெச்சரிக்கைத் தகவல்களை உரிய நேரத்தில் வழங்குதல் மற்றும் பாதுகாப்பான வெளியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் ஐந்து சுனாமி எச்சரிக்கை நிலையங்களின் செயற்பாட்டுத் தயார்நிலையை உறுதிப்படுத்துவதுடன், அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களை எதிர்கொள்ள மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள், முப்படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் சமூகமட்ட அமைப்புகள் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். அனைத்துத் தரப்பினரினதும் ஒருங்கிணைந்த பங்களிப்பின் மூலம் உயிரிழப்புகளையும் சொத்து இழப்புகளையும் குறைத்து, அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பையும் வாழ்வாதார மீட்சியையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்த அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
கலந்துரையாடல் :
இக் கலந்துரையாடலில், நெறிப்படுத்தல் அதிகாரிகளாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (யுனெஸ்கோ) திட்ட முகாமையாளர் திரு. சுனில் ஜெயவீர மற்றும் உதவிப் பணிப்பாளர் திரு. சமில ஆகியோர் கலந்துகொண்டு, கலந்துரையாடலை நெறிப்படுத்தினர். கடலோர சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பின்வரும் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன : திட்ட அறிமுகம்: யுனெஸ்கோ அமைப்பின் சுனாமி தயார்நிலை அங்கீகார திட்டத்தை (Tsunami Ready Recognition Programme) மாவட்ட மட்டத்தில் அறிமுகப்படுத்துதல்.
செயற்பாட்டு திட்டங்கள்:
திட்டத்தை கடலோரப் பகுதிகளில் நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல். கள நிலவரம்: தற்போதைய அவசரகால எச்சரிக்கை வழிமுறைகள், மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் அனர்த்த மேலாண்மையில் உள்ள பலங்கள் மற்றும் குறைபாடுகளைக் கண்டறிதல். கூட்டு நடவடிக்கை: யாழ்ப்பாண மாவட்டத்தின் கடலோரக் கிராமங்கள் இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கூட்டுச் செயல்முறைகளை முன்னெடுத்தல். இக்கூட்டத்தில் அரச அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் பங்குதாரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர். இக் கலந்துரையாடலில் , பிரதேச செயலாளர்கள், முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
 
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழா கழகத்தின் தலைவரும் கணக்காளருமான வ. ரதீஸ் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.10.2026) மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூஜையினைத் தொடர்ந்து, வரவேற்பு நடனம், உத்தியோகத்தரின் மழழையின் தனிப் பாடல் மற்றும் உத்தியோகத்தர்களின் குழுப்பாட்டு, பல்லியம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அரசாங்க அதிபர் உரை :
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வில், நவராத்திரி விழாக்கள் உத்தியோகத்தர்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதுடன், தமிழர் பண்பாட்டு மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். கடந்த ஒன்பது நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நவராத்திரி பூஜை நிகழ்வுகளையும், வாணி விழாவை முன்னிட்டு உத்தியோகத்தர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பல்வேறு கலை மற்றும் கலாசாரப் போட்டிகளையும் பாராட்டினார். இத்தகைய நிகழ்வுகள் வெறுமனே விழாக்களாக அமையாமல், அலுவலகங்களுக்கிடையிலான நட்புறவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் தளங்களாகவும், தமிழர் பண்பாட்டு கலைப் களையும் மறக்காமல் வலுப்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றமை மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் சாதனை எனத் தெரிவித்த அவர், இந்த வெற்றியானது அனைத்து உத்தியோகத்தர்களினதும் கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் வெளிப்பாடாகும் எனக் குறிப்பிட்டார். அத்துடன், மேலும், சுற்றாடல் விருதில் நல்லூர் பிரதேச செயலகம் தங்க விருதையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வெள்ளி விருதையும் பெற்றமைக்கும் பாராட்டுத் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்கள் தமது அன்றாடக் கடமைகளைப் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அரசாங்க அதிபர், நீண்டகாலமாக ஒரே பணியில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய சலிப்பைத் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் புதிய பொறுப்புணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்றார். அதன் மூலமே பொதுமக்களுக்குத் தரமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள அரச சேவைகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு உத்தியோகத்தரும் தமக்குரிய பொறுப்புகளை உணர்ந்து, மக்களின் நலனையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் முன்னிறுத்திச் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இறுதியாக, வாணி விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த நலன்புரிச் சங்கத்தின் தலைவர், நிர்வாகக் குழுவினர், அங்கத்தவர்கள் மற்றும் பங்கேற்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
சிறப்பு சொற்பொழிவு :
சைவப் புலவர் திரு கமலநாதன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றது. மேலும், நவராத்திரி நாட்களில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் தோரணம் பின்னுதல், மாலை கட்டுதல், சைவ வினாவிடைப் போட்டி, கோலமிடுதல், கவிதை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. வாணி விழாவின் இறுதியில் நலன்புரிக் கழகம் செயலாளர் கே. கருணாகரன் அவர்களால் நன்றியுரையாற்றப்பட்டது.
 
 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 17 21 23 24 25 25 26 28 29 27 30 31 29 32 33 34
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (21.10.2026) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைமையுரை :
யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அவர்களின் தேவைகள் மற்றும் முன்மொழிவுகளை உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கும் இக்கலந்துரையாடல் சிறந்த வாய்ப்பாக அமைகின்றது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறும் விவசாயக் குழுக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கலந்துரையாடல்களில் விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பான தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இவ்விடயங்கள் தொடர்பில் விவசாயம் சார்ந்த அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதன் அடிப்படையில், அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைவாகக் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிர்க்காப்புறுதியைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளைப் பூர்த்தி செய்வது அவசியமாகும். கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை சட்டரீதியான ஏற்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாகச் செயற்படுவதால், காப்புறுதிக் கொடுப்பனவுகளை வழங்கும்போதும் அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் முன்வைத்துள்ள காப்புறுதிப் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரப்பட்டிருந்த போதிலும், எதிர்பார்க்கப்பட்ட அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இதனால், விவசாயிகளின் கோரிக்கைகளை உரிய முறையில் ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே, விவசாயிகள் தமது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் முன்மொழிவுகளை இக்கலந்துரையாடலில் தெளிவாக முன்வைக்க வேண்டும். இதன்மூலம் பயிர்க்காப்புறுதித் திட்டம் தொடர்பான தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்வதுடன், மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அடைவதற்கும் வழியேற்படும் என மேலும் தெரிவித்தார். இறுதியாக, இக் கலந்துரையாடலில் பங்கேற்ற கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் அதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
விரிவாக ஆராய்வு :
யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிர்க்காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், காப்புறுதிப் பயன்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. மேலும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் தலைவர் திரு. பிறேமசிறி ஜயசிங்காராச்சி, பணிப்பாளர் நாயகம் திரு. கெழும் களுஆராச்சி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு. ரணில் விமலரத்ன, அபிவிருத்திப் பணிப்பாளர் திரு. சந்தன கொடிப்பிலி, நிதிப் பணிப்பாளர் திரு. சமன் சுபசிங்க, காப்புறுதிப் பணிப்பாளர் திரு. கித்மின், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி ரஞ்சனாதேவி, விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. டி. கிரிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து அதற்கான ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 7 8 10 11 12 14 15
விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் (2026) தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதுவரை நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த இச்சுற்றுத் தொடர், இவ்வாண்டு விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போட்டித் தொடரை இவ்வாண்டுக்குள் நடத்தி முடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் துரிதமாக முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வடமராட்சி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வலிகாமம், மருதங்கேணி மற்றும் தீவகம் ஆகிய ஆறு உதைபந்தாட்டச் சங்கங்களின் ஊடாக, நொக்-அவுட் முறையிலான போட்டிகளின் மூலம் தலா எட்டு கழகங்கள் தெரிவுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இச் சுற்றுத் தொடரைச் சிறப்பாகவும் ஒழுங்குமுறையுடனும் நடத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள், மைதான ஒழுங்குபடுத்தல்கள், போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் தெரிவு, போட்டி முறைமைகள், நடுவர் மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. மேலும், போட்டித் தொடரின் ஏற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக விளையாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ப. ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் உதைபந்தாட்டச் சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 1 2 3 5 6 7 8