2நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட பதிவு தொடர்பாக நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.08.2925) சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன் போது நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அரசாங்க அதிபரிடம் தெரிவிக்கையில், கடல்பிரயாணம் மூலம் நெடுந்தீவு சென்று கடமையாற்றும் அனைத்துத் தர உத்தியோகத்தர்களையும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கடமையாற்றுவதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுவது மிகுந்த மன வேதனைக்குரிய வியடமாகும் எனவும், தாம் விரக்தி நிலையில் இருப்பதாகவும், அச்செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தார்கள்.
மேலும், பிரதேச செயலாளர் ஒரு பெண்ணாக இருக்கின்ற பொழுதிலும் கடமைக்கு ஒழுங்காக சமூகமளிப்பதுடன் அவசர நிலமைகளின் போது நெடுந்தீவிலேயே தங்கி நின்று பணியாற்றுபவர் எனவும்
மேலும், பொதுவாக தண்டனையின் பேரிலேயே நெடுந்தீவிற்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக பரவலான கருத்து உள்ளமையும் மிகவும் வேதனைக்குரிய விடயம் எனவும் உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டு உண்மைக்குப் புறம்பான செய்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரை நேரடியாக கோரியதுடன், கோரிக்கை மனுவினையும் கையளித்தார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், சமூக வலைத்தளங்களில் வரும் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை பெரிது படுத்ததேவையில்லை எனவும், குறித்த பதிவு தொடர்பில் உத்தியோகத்தர்கள் மன உளைச்சலடைய வேண்டிய அவசியமில்லை என்றும் உத்தியோகத்தர்கள் எவ்வளவு சிரமப்பட்டு நெடுந்தீவிற்கு சென்று கடமையாற்றுகின்றாா்கள் என்பது எமக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் நன்கு தெரிந்த விடயம் என தெரிவித்தாா்.
மேலும், தற்போது கடமையாற்றும் பிரதேச செயலாளர் பதவியுயர்வு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் எனது கோரிக்கையின் அடிப்படையிலேயே புதிய பிரதேச செயலாளர் கடமையை பொறுப்பேற்கும் வரையில் தொடர்ந்து கடமையாற்றி வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் அற்ற நிலையில்அனைத்து கடமைகளையும் பிரதேச செயலாளரும் ஏனைய உத்தியோகத்தர்களும் இணைந்து எவ்வித முறைப்பாடுகளும் அற்ற நிலையில் கடமையாற்றுவதற்கு தனது பாராட்டுக்களை அரசாங்க அதிபர் தெரிவித்தாா்.
மேலும், நெடுந்தீவு வாழ் மக்களின் நிலைமையினை கருத்திற்கொண்டு உத்தியோகத்தர்களை அங்கு நியமிக்கும் போது வேறு பிரதேச செயலகங்களிலிருந்து கடமைக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களிற்கு உள்ளாவது அனைவரும் அறிந்த விடயம் என்றும், வழமையாக காலை 8.00 மணிக்குப் புறப்பட்ட படகு சேவை அவ் உத்தயோகத்தர்கள் உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்வதற்கு ஏதுவாக கடந்த 2025.08.11ம் திகதி முதல் காலை 7:30 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்படுவதாகவும், யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் தான் நன்கு அறிந்துள்ளதாகவும் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், நெடுந்தீவு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஏனைய சிரேஷ்ட தர உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படாத சந்தர்ப்பத்திலும் பிரதேச செயலாளருடன் இணைந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்களது சேவை அளப்பரியது எனவும் சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதனை விடுத்து ஆக்கபூர்வமான ஆரோக்கியமான கருத்துக்களையும் தகவல்களையும் வெளியிடுவதே ஆரோக்கியமான சமுகத்தினை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் ஆகியோரும் பங்குபற்றினார்கள்.
 
1 2 3 4 5 6 7 8
 
 
 
தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் மாவட்ட நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் திரு. ஏ. எஸ். நிசாந்தன் தலைமையில் இன்றைய தினம் (20.08.2025) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில், விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அதுவும் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு மெருகூட்டுவதாக இந் நிகழ்வு அமைந்துள்ளதாகவும், இலங்கை துடுப்பாட்டச் சங்கம் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கி வருவதாகவும், சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுவருவதாகவும், கெளரவ விளையாட்டுத்துறை அமைச்சர் இரண்டு தடவைகள் மண்டைதீவிற்கு விஜயம் செய்து ஆராய்ந்ததாகவும், மைதானத்திற்கான காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய வசதிகளுக்கான மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார். மேலும், இவ் சர்வதேச மைதானம் வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் குறிப்பிட்டதுடன், எமது மாணவர்கள் சர்வதேசம் மற்றும் தேசிய போட்டிகளில் பங்குபற்றிவருவதாகவும், அந்த வகையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், இலங்கை 19 வயது அணியில் பரியோவான் கல்லூரி மாணவன் மாதுளன் மற்றும் ஹாட்லி கல்லூரி மாணவன் ஆகாஷ் இடம் பெற்றுவருவதும் பாராட்டத்தக்க விடயம் எனவும் குறிப்பிட்டார். மேலும், உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எமது மாணவர்கள் அதன் மூலமும் தமது திறமைகளை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள முடியும் எனவும், மாவட்டச் செயலகத்தினால் விளையாட்டு மற்றும் கல்விக்கான நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான நிதியீட்டம் மேற்கொள்ளப்படும் எனவும், அதன் மூலம் எமது மாணவர்களுக்கான தேவைப்பாடுகளை நிதியத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களை உள்ளடக்கிய உறுப்பினர்களின் சிபார்சின் அடிப்படையில் அரசாங்க அதிபரால் தேவைக்கேற்ற நிதி அனுமதிக்கப்படும் எனவும், இதன் மூலம் உடனடித் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்ய வழி ஏற்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் எமது மாணவர்கள் முன்னேற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை துடுப்பாட்டச் சங்கம் மற்றும் விளையாட்டு த்துறை அமைச்சின் அனுசரணையுடன் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றமையுடன், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ சுனில் குமார கமகே அவர்கள் கலந்து சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 17 பாடசாலைகளுக்கு துடுப்பாட்ட உபகரணங்களும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணிகளும் அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலைகளுக்கான பொறுப்பாளர், பாடசாலை அதிபர்கள், துடுப்பாட்ட பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் எனப் பல பேர் கலந்து கொண்டார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 9 10 11 13 14 15 
நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள விசேட நடமாடும் சேவை தொடர்பாக
அரசாங்க அதிபருடன் கிளீன் ஸ்ரீலங்கா ஏற்பாட்டுக் குழுவினர் இன்றைய தினம் (12.08.2025) ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் சனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மனோகரன் சாரதா அஞ்சலி கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான திரு. தசூன் உதார, திரு. துலீப் சேமரத்தன, ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. தெ. கபிலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது விசேட நாடும் சேவைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
 
 
1 2 3 4 5 6
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்துகொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (20.08.2025) புதன்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு. சாம்பசிவம் சுதர்சன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், கெளரவ விருந்தினராக திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோசெப் யோன்சன் ராஜ்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
கலாபூஷணம் நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம் (திருமறை கலாமன்றம்), மங்கல இசை, கிராமியப் பாடல், இஸ்லாமிய நடனம், இசைச்சங்கமம், நாட்டிய அர்ப்பணம் நடனம் (கிழவன்காடு கலாமன்றம், யாழ்ப்பாணம்), வாத்திய பிருந்தா (கீதவாகினி இசைக் கல்லூரி, கொழும்புத்துறை), வட மோடி நாட்டுக்கூத்து (யாழ்ப்பாண பிரதேச மழலைக் கலைஞர்கள்) என்பன சிறப்பாக நடைபெற்றது.
மூத்த கலைஞர்களுக்கான " யாழ் ரத்தினா விருது" மற்றும் இளங்கலைஞர்களுக்கான "கலைத்திறன் விருது" என்பன அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டதுடன், "யாழ் பாடி" கலாசார மலர் வெளியீடும் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
 
1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15 17 19 20 21 
 
 
இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு எனும் கருப்பொருளிலான செயற்றிட்டம் நாளையிலிருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான ஐனாதிபதி செயலக ஏற்பாட்டுக் குழுவினர் புகையிரதம் மூலம் இன்றைய தினம் (12.08.2025) புதன்கிழமை மதியம் 02.30. மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
புகையிரதம் மூலம் வருகைதந்த சனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ர உதவிச் செயலாளர் மனோகரன் சாரதா ஞ்சலி கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான திரு. தசூன் உதார மற்றும் திரு. துலீப் சேமரத்தன உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர்களுக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்வில் கடற்தொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகையிரதத்தில் வந்தோரை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து புகையிரதத்தில் வந்த குழுவினரால் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கான இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளையும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
 
 
 
1 2 3 4 5