செவிப்புல வலுவற்றோர்கள் தொடர்பாடலில் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தமிழ் சைகை மொழியின் முக்கியத்துவம் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கான வழிப்புணர்வு பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.10.2025) மாலை 2.30 மணிக்கு யாழப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், செவிப்புல வலுவற்றோர்கள் தொடர்பாடலின் போது சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கில் இக்கலந்துரையாடல் எற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சமூகத்தில் எந்தவித பாதிப்பிற்கும் உள்ளாகாமல் அவர்கள் செயற்பட வேண்டும், அந்தவகையில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் முழுமையான ஒத்துழைப்பை அவர்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் பலர் இந்த சைகை மொழி தொடர்பான பயற்சியை கடந்த காலங்களில் பெற்றுள்ளதாகவும் அதேபோல் ஏனைய உத்தியோகத்தர்களும் இந்த பயிற்சியினை பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் செவிப்புல வலுவற்றோர்களின் கருத்துக்களை புரிந்து வினைத்திறனான சேவைகளை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.மேலும், எந்த வகையிலும் இதனைக் குறைபாடாக கருதி அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் நாம் எல்லோரும் மனிதர்கள், தேவைகளின் அடிப்படையிலே கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், எந்தவித வேறுபாடும் அற்ற வகையில் உங்களோடு கடமையாற்றவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே. சிவகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி. உ. தர்ஷினி, இலங்கை தமிழ் செவிப்புல வலுவற்றோர் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் திரு.ப.கேதீஸ்வரன், தமிழ் செவிப்புல வலுவற்றோர் அமைப்பின் பணிப்பாளர் திரு.சே.செல்வக்குமார், பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செவிப்புல வலுவற்றோர் சங்கத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

"பேரழிவுகள் மற்றும் அவசர நிலைகளில் மனநல சேவைக்கான அணுகல்" எனும் தொனிப் பொருளில் உலக உளநல நாள் மற்றும் தேசிய உளவளத்துணை நிகழ்ச்சியானது மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.10.2025) பி. ப 2.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் குறித்த இன்றைய நாளான ஒக்டோடபர் 10 ஆம் திகதியே உலக உளநல நாள் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டமை பாராட்டத்தக்க விடயமெனவும் எனவும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த மாவட்ட செயலக உளவளத்துணை பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் யுத்தத்தின் பின்னர் எமது மாவட்ட மக்களின் உளநல நிலைமைகளில் மேம்பாட்டு நிலை ஏற்பட தன்னலம் கருதாது தன்னாலான காத்திரமான பங்களிப்பை சிறப்பாக வழங்குகின்ற
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மனநல வைத்திய நிபுணர் திரு எஸ். சிவதாஸ் அவர்களுக்கு மாவட்ட செயலகம் சார்பாக நன்றிகளை தெரிவித்தார். மேலும் உளநலத்திற்கான ஆலோசனையை வழங்கக்கூடிய இந்நிகழ்விற்கு பிரதேச செயலாளர்கள் உட்பட அனைவரும் அழைக்கப்ட்டுள்ளமை சிறப்பானது எனவும் அரச திணைக்களங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் உளநலம் பாதிக்கப்பட்டுள்ள பலர் கடமையாற்றுவதால் அவர்களை சரியான முறையில் ஆற்றுப்படுத்தும் தலையாய பொறுப்பு உள்ளமையால் இவ் "பேரழிவுகள் மற்றும் அவசர நிலைகளில் மனநல சேவைக்கான அணுகல் " எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உளவளத்துணை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சிவதாஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எஸ். ஜீவசுதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் உள நலன் சார்ந்த போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன் ,பிரதேச செயலாளர்கள் ,உதவி மாவட்ட செயலாளர்,பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலகஉத்தியோகத்தர்கள் ,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இம்மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள காப்புறுதி தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு கருத்தரங்கு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.10.2025) முற்பகல் 12 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

“தேசவழமைச் சட்டத்தில் ஆதனங்கள் “எனும் விடயப்பரப்பிலான கருத்தமர்வு யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்றைய தினம் (10.10.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், தேச வழமைச் சட்டம் தொடர்பாக எல்லோரும் அறிந்திருந்தாலும் இது தொடர்பான முழுமையான அறிவை பெற்றிருத்தல் அவசியமானதொன்றாக காணப்படுவதாகவும் உத்தியோகத்தர்கள் என்ற ரீதியில் மட்டுமில்லாமல் வடக்கு மாகாணத்தின் சாதாரண பொது மக்கள் என்ற ரீதியில் எமது சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த சட்டம் தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாக நாம் காணப்படுவதாகவும், இந்தச் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தமை ஒர் அரிய வாய்ப்பு என்று குறிப்பிட்டத்துடன் இதனை ஏற்பாடு செய்த சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்தார். மேலும் எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் பொதுச் சட்டங்களுக்கு மேலதிகமாக தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், இஸ்லாமியச் சட்டம் என்ற 3 சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன இவற்றுள் வட மாகாண தமிழ் மக்களுக்கென தேச வழமைச் சட்ட நடைமுறைப்படுத்தப்படுகின்றது, இந்தச் சட்டம் உரிமை மற்றும் பெண்களின் சொத்து தொடர்பான விடயங்கள் பற்றி குறிப்பிடுவதாகவும், இவ்வாறான சட்டம் தொடர்பான பல்பரிமான சட்ட ஏற்பாடுகளை எமது அலுவலகங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற நோக்கில் இச் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இக் கருத்தமர்வில் கொழும்பு சட்ட வரைஞர்
திணைக்களத்தினைச் சேர்ந்த மேலதிக சட்ட வரைஞர் திரு. எஸ். செல்வகுணபாலன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு தேசவழமைச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.
இக் கருத்தமர்வில் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் திரு.ஜெ.ஜெயரூபன், மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், வடக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் திரு.பிரபாகரன், பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை காணி மற்றும் மாவட்ட பதிவாளர், மேலதிக மாவட்டப் பதிவாளர், பதிவாளர் நாயக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இச் செயலமர்வில் கலந்துகொண்டனர்.

அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (09.10.2025) மு.ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் கல்விபயிலும் கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் அங்கீகாரம் பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் Northern Uni, ICBT, E- SOFT, Cinec campas, ICASL , Aquiens college, ஆகிய நிறுவனங்களில் கல்வியை தொடர்வதற்கு கடன் திட்டத்தின் ஊடாக மாணவர்களை உள்வாங்குதல் தொடர்பாகவும் நல்லூர் பிரதேசத்தினைச் சேர்ந்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் Aquiens college, Northern Uni, ICBT, CINEC, E- SOFTஅங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட திறன்அபிவிருத்தி இணைப்பாளர், மற்றும் யாழ்ப்பாணம், நல்லூா், கோப்பாய் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.






