கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.ம. பிரதீபன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.10.2025) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைகளின் உடைய முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 1000 மில்லியன் ரூபா நிதியில் 24 வீதிகளுக்கு 26.5 கிலோமீட்டர் அளவில் புனரமைக்கப்படவுள்ளது.இவ் வீதிகளினுடைய முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்ட போது வீதிகளுக்குரிய மதிப்பீடுகள் தயாரிக்கின்ற பணிகளும் அதற்கான கேள்விப்பத்திரங்களும் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டதுடன் இம்மாதத்தினுடைய இறுதி வாரத்தில் வீதியின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் திரு.யொ.குறுஸ் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை வேலணை,ஊர்காவற்துறை , காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு. நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்க்கொள்ளப்படுகின்ற 184 மில்லியன் ரூபா வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கௌரவ பிரதேச சபை தவிசாளர்கள் ,வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திரு .எஸ்.சத்தியசீலன் , பிரதேச செயலாளர்கள்,யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர், பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்களது பிரத்தியோக இணைப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

18.09.2025 அன்று நடைபெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினது பங்கேற்புடனும் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்களது தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் தீவக பகுதிகளுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். அதற்கிணங்க பிரதேச செயலாளர்களிடமிருந்து திருத்தப்பட வேண்டிய வீதிகளின் பட்டியல்கள் திரட்டப்பட்டு அரசாங்க அதிபரினால் அமைச்சிற்கு அனுப்பப்பட்டு அமைச்சினால் அதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அமசமாகும்.
இக்கலந்துரையாடலில் வேலணை,ஊர்காவற்துறை , காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இவ் வருடத்திற்கான கிராமிய வீதிகளின் அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு குறிப்பாக வீதி அபிவிருத்திகள் உரிய காலத்தில் வினைத்திறனாக நிறைவேற்றி முடிக்க அரசாங்க அதிபரால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கௌரவ பிரதேச சபை தவிசாளர்கள் ,மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், வேலணை காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக கணக்காளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்தின்(Berendina Micro Investments Company Limited) அனுசரனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றையதினம் (2025.10.13 ) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி வழங்கி வைத்த பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் இவ் உதவித்திட்டத்தை சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துடன், இதன்நோக்கம் கர்ப்பிணிகளும் அவர்களின் கருவிலுள்ள குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு அரசாங்கத்தாலும் கர்ப்பிணிகளுக்கு உணவுமுத்திரைகள் வழங்கப்படுவதன் நோக்கம் கர்ப்பிணிப் பெண்களும் அவர்களின் கருவில் வளரும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருப்பதனூடாக இவ் சமுதாயத்தை உடல்,உளஆரோக்கியமான சமுதாயமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும் எனவும் தெரிவித்து எல்லோரும் ஒன்றிணைந்து நோக்கத்தை உணர்ந்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.
யாழ்ப்பாணம், நல்லூா், கோப்பாய் , சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 கர்ப்பிணிப் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான பிரசவ காலப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்தின் வடமாகாண பிரதேச முகாமையாளர் மற்றும் சுன்னாகம் கிளை முகாமையாளர் மாவட்ட பெண்கள் அபிவிருத்திப்பிரிவின் இணைப்பாளர், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (13.10.2025) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.விசேட தேவையுடையோருக்கான தேசிய விழாவானது இம் முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதோடு இந் நிகழ்வில் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்து விசேட தேவையுடையோர் சுமார் 650 பேரின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ராதா நாணயக்கார, மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.மு.நந்தகோபாலன் ,அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் ஜெயமாலி விக்கிரமராட்சி ,மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்ஷினி, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி.தனுஜா லுக்ஷாந்தன் ,கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் உதவி ஆணையாளர், கிறிஸ்தவ மதகுரு, மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு .தி.உமாசங்கர், அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சொந்த வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தும் இடமாற்றமானது கிடைக்கப்பெறாத அதேவேளை 13 வருடங்கள் கடந்தும் சில அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எவ்வித இடமாற்றமும் இ்ன்றி சொந்த மாவட்டத்தில் தொடர்ந்தும் கடமையாற்றி வருவதாக தெரிவித்ததோடு தமக்கான முறையான நியாயமான இடமாற்றக் கோரிக்கை மகஜர் ஒன்றினை வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் (13.10.2025) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளித்தனர்.






