உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு (World Habitat Day) இன்றைய தினம் (03.10.2025) காலை 09.30 மணிக்கு பிரதம விருந்தினராக கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ கருணாநாதன் இளங்குமரன் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் திருமதி டி. எல். டீபானி பிரியங்கா மற்றும் பிரதி திட்டப்பணிப்பாளர் திருமதி பிரியங்கா செனிவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றியாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய நிகழ்விற்கு வருகைதந்த கெளரவ அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரையும் வரவேற்றதுடன், ஒக்டோபர் 06 ஆம் தினம் உலக குடியிருப்பு தினத்தினை நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து மாவட்டச் செயலகம் இந் நிகழ்வினை நடாத்திவருவதாகவும், அரசாங்கமானது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டுவருவதற்கு அமைய மேற்படி அமைச்சு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்னும் 19603 வீடுகளின் தேவைப்பாடுகள் உள்ளதாகவும், கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் அவர்களின் சிபார்சுக்கு அமைய, அமைச்சரவையினால் 10 இலட்சம் பெறுமதியான வீடமைப்பு திட்டமானது 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 06 பெறுமதியான வீடமைப்பு திட்டமானது 09 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 620 வீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்து இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் அவர்களிடம் ஒரு கோரிக்கையினை முன்வைப்பதாகவும், அந்தவகையில் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளில் வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது போக்குவரத்து செலவு அதிகமாகவுள்ளதாகவும், அதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ஆதலால் கடல் போக்குவரத்துக்கு ஏற்ப ஒதுக்கீட்டு தொகையினை அதிகரித்து வழங்குவதற்கு கெளரவ அமைச்சர் அவர்கள் ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தமதுரையில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 40 வீதமான வீடுகள் கொட்டில்களாகவிருந்ததாகவும், தற்போது படிப்படியாக மாறி வந்தாலும் அது முழுமை பெறவில்லை எனவும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, விசேடமாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் செயற்றிட்டம் உள்ளதால், மேலும் பல வீடமைப்புத் திட்டங்கள் வழங்கப்படும் எனவும், எமது அரசாங்கத்தினால் வீடமைப்புத் திட்ட நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், வீதி, குளங்கள் இறங்குதுறை என்பனவும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும், எமது அரசாங்கத்தினால் துரித அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார். மேலும், நாளைய தினம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டப்படும் எனவும், அதற்கு போக்குவரத்து நெடுச்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் வருகைதரவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், கொழும்புத்துறை இறங்குதுறை அபிவிருத்தி, பரந்தன் இரசாயன தொழிற்சாலையினை மீளச் செயற்படுத்தல் மற்றும் முதலீட்டு வலயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார். போதைப் பொருள் மற்றும் வாள்வெட்டுஆகியவற்றை முற்றாக ஓழிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், பொருளாதார ரீதியாக எமது நாடு தற்போது முன்னேறிவருவதாகவும், டொலரின் பெறுமதி சீராகவுள்ளதாகவும் கெளரவ அமைச்சரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பயனாளிகளுக்கான வீடமைப்புத் திட்டத்தினைபெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழ்களும், தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் அமைச்சின் பிரதி திட்டப் பணிப்பாளர் திருமதி பிரியங்கா செனவிரத்தின, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள், மீள்குடியேற்ற கிளை மற்றும் காணிக்கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக வீடமைப்பு திட்ட விடய அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் 09.08.2025 அன்று குறிகட்டுவான் இறங்குதுறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரிய அறிவுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதற்கமைய, அதன் தொடர் நடவடிக்கையாக பங்குதார்களுடனான கலந்துரையாடலாக இது அமைந்திருந்து குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர், மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திரு குரூஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், வேலணை பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர், கடற்படை அதிகாரி மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.

Little Master பாலர் பாடசாலையின் - யாழ்ப்பாணம், மல்லாகம், தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய கிளைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (01.10.2025) சந்தித்து நல்லாசியினைப் பெற்றுக்கொண்டனர்.
இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.
மேலும், யாழ்ப்பாண மாவட்ட 9 கிளைகளில் இருந்தும் 60 ஆசிரியர்களின் வழிநடத்தலுடன் 295 மாணவர்கள் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடாளவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில் மாவட்டச் செயலக நிர்வாக எல்லைக்குள் நியமிக்கப்பட்ட 20 பேர் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (01.10.2025) காலை 09.00 மணிக்கு சந்தித்து தமது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
இதன்போது அவர்களுக்கான புதிய சேவை நிலையங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர் கலந்துரையாடினார்.







