1மாவட்ட பண்பாட்டு பெரு விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (30.09.2025) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட பண்பாட்டுப் பெரு விழா தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக பதிவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு. எஸ். ரமேஷ்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, நிர்வாக உத்தியோகத்தர் திரு ஆ. சத்தியமூர்த்தி, புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளர் திரு எம். வித்தியானந்தநேசன், மாவட்ட பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 46 7 8 9 10
3வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, அவர்களுக்கும் யாழ் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்கேற்புடன்
இன்றைய தினம் (30.09.2025) பிற்பகல் 12.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கருத்துரைத்த
வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, அவர்கள் தற்போது வருடத்திற்கு இருநூற்று நாற்பதாயிரம் மெற்றிக்தொன் கீரிச்சம்பா அரிசி தேவைப்பாடு உள்ளதாகவும் ஆனால் நாட்டில் 160ஆயிரம் மெற்றிக்தொன் கீரிச்சம்பா அரிசி மட்டுமே உற்பத்தி நடைபெறுவதாகவும் இந்நிலையிலேயே சம்பா அரிசி விலை அதிகரித்து செல்வதாக தெரிவித்தார். மேலும் குறுங்கால தேவையை நிறைவுசெய்யும் வகையில் கீரிச்சம்பா அரிசியை இறக்குமதி செய்து சதோஷ விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கவும் தொடர்ந்து அதன் உற்பத்தி அளவை அதிகரிப்பது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி நாட்டிற்கு திரும்பியவுடன் நாற்பதாயிரம் மெற்றிக் தொன் கீரிச்சம்பா அரிசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொலன்நறுவையில் இருந்து கொள்வனவு செய்யப்படும் கீரிச்சம்பா அரிசியை அங்கீகரிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்யவும் கௌரவ அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.மேலும் நெல்விளைச்சல் அதிகமாக உள்ள பொலன்நறுவை அநுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அரிசி ஆலைகள் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக பிறவுன் சீனி ,அரிசி உள்ளிட்ட 23 வகையான பொருட்களை விநியோகம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வர்த்தக சங்க உரிமையாளர்கள் களஞ்சியவசதி மற்றும் 350மெற்றிக் தொன் -500மெற்றிக் தொன் வரையான பொருட்களை துறைமுகம் ஊடாக கொண்டு வருவதற்கான அனுமதி கோரிய நிலையில் அதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன்,
சட்ட விரோத பொருட்களை சட்டரீதியற்ற முறையூடாக நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக கௌரவ அமைச்சர் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில் . தற்போது துறைமுகம் ஊடாக பயணிகள் போக்குவரத்து மட்டுமே நடைபெறுவதாகவும், 350மெற்றிக் தொன் -500மெற்றிக் தொன் வரையான ஆடை வகை, வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருவதற்கான அனுமதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபர் அவர்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
மேலும் களஞ்சிய வசதிக்கான தேவை உள்ளமையால் நாவற்குழி அரச களஞ்சியசாலையை பயன்படுத்த வர்த்தக சங்கத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் நாவற்குழி களஞ்சியசாலையில் திருத்த வேலைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கு கௌரவ வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் நாவற்குழி களஞ்சியசாலையில் மூன்று பிரிவுகள் காணப்படுவதாகவும் அதில் ஒரு பிரிவு மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றையது உணவுத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ க.இளங்குமரன், கௌரவ எஸ்.ஸ்ரீபவானந்தராசா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு ம.பிரதீபன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் திரு.தெ.கபிலன் மற்றும் வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
 
 
 
1 2 3 4 5 6
சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் UNFPA நிறுவனத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புடன் JSAC நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் பணியாற்றுபவர்கள் தொடர்பான தகவல் திரட்டு தயாரித்தல் நிகழ்வு (Digital Service Directory Preparation Programme) உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி தலைமையில் இன்றைய தினம் (30.09.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) இணைப்பாளர் திரு. ந. சுகிர்தராஜ், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கி தயாபரி, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மருத்துவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமுதாயம் சார்ந்த சீர்திருத்த உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5
27யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பண நிகழ்வு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (30.09.2025) காலை 09.30 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ வசந்த சமரசிங்க அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களும், கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா அவர்களும், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் அவர்களும் கலந்து கொண்டு, யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் உத்தியோகபூர்வமாக மீள அங்குரார்ப்பணம் செய்து யாழ்ப்பாணம் உள்ளூர் விளைபொருட்கள் மொத்த விற்பனை வியாபாரிகளிடம் கையளிக்கப்பட்டதுடன் வியாபார செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், இன்றைய நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகைதந்துள்ள வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ வசந்த சமரசிங்க அவர்களையும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களையும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வருகைதந்த அனைவரையும் வரவேற்று, அமைச்சர் கெளரவ வசந்த சமரசிங்க அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்து கலந்துரையாடியதற்கு அமைய இன்று மீள அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு காத்திரமான பங்களிப்பை கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் வழங்கி வந்தமையினை அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், இவ் விசேட பொருளாதார மத்திய நிலையம் சரியான முறையில் இயங்கினால் சந்தை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் எனவும், குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கத்தக்கவகையில் இவ் நிலையம் அமைவதன் மூலம் இலங்கை பூராகவும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும், ஏனையமாவட்டங்களின் பொருட்களை இங்கு பெற்றுக்கொள்ளவும் வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டு, இவ் நிலையம் சிறப்பாக இயங்குவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், அனைவரினதும் பங்களிப்புடன் சவால்களுக்கு மத்தியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை ஆக்கபூர்வமாக தொடர்ச்சியாக செயற்படுத்த அனைவரிதும் ஒத்துழைப்பு தேவை எனவும், தேசிய உற்பத்திக்கு விவசாயம் முக்கிய பங்குவகிப்பதாகவும், அந்த வகையில் விவசாயத்தினை ஊக்குவிக்க வேண்டும் எனவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது குறைவாகவுள்ளதாகவும், அதனை ஆராய்ந்து ஊக்குவிக்க புத்திஜீவிகள், அதிகாரிகளுக்கு தாம் அழைப்புவிடுவதாகவும் யாழ்ப்பாணத்தின் முதுகெலும்பான விவசாயத்தினை முன்னேற்றவும் வலுப்படுத்தவும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்திலும், போதைப் பொருள் இலஞ்சம் மற்றும் வாள்வெட்டுஆகியவற்றை முற்றாக அழிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், பொருளாதார ரீதியாக எமது நாடு தற்போது முன்னேறிவருவதாகவும், டொலரின் பெறுமதி சீராகவுள்ளதாகவும் குறிப்பிட்டு, இவ் பொருளாதார மத்திய நிலையம் மேன்மேலும் சிறப்பாக இயங்குவதற்கான சகல வசதிகளும் எமது அரசாங்கதினால் மேற்கொள்ளப்படும் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ வசந்த சமரசிங்க அவர்கள் தமதுரையில், யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்திய நிலையம் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது எனவும், தமது அரசாங்கம் கட்டியெழுப்ப முனைப்புக்காட்டி வருவதாகவும், வட மாகாண உற்பத்திக்கான சந்தைவாய்ப்பிற்கான வாய்ப்பாக பயன்படுத்தலாம் எனவும், உல்லாசப் பயணிகள் வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், பனை உற்பத்திகள், கருவாட்டு உற்பத்திகள் போன்றவற்றிற்கான மத்திய நிலையமாக பயன்படுத்தவும், விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மத்திய நிலையமாகவும், சுயதொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மத்திய நிலையமாக மாற்றவும், கூட்டுறவு மற்றும் சதோச விற்பனை நிலையங்களை உருவாக்கி இவ் நிலையத்தினை மேம்படுத்தலாம் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார். இவ் விசேட பொருளாதார மத்திய நிலையத்தினை மீள இயக்குவதற்கு கடற்றொழி்ல் அமைச்சர் மற்றும் அரசாங்க அதிபருடன் தாம் கலந்துரையாடியதாகவும், இன்று மீள அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நிலையத்தினை தொடர்ச்சியாக திறம்பட இயக்குவதற்கு வர்த்தகர்கள், வியாபாரிகள் பூரணமான ஒத்துழைப்பினை வழங்குமாறு கெளரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் அமைச்சின் ஆலோசகர் கலாநிதி ஜெயரட்ண, அமைச்சின் உயர் அதிகாரிகள், வடமகாண விவசாய அமைச்சின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
 
 
27 28 29 30 31 32 33 34 35 36 37 38 40 40 42 43
விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு - விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடக யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விளையாட்டு த்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.09.2025) பி.ப 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், பழைய பூங்காவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் உடற்பயிற்சிக்கான நடைபாதையினை மேம்படுத்துவதற்கும், சிறுவர்கள் விளையாடும் போது அவர்களுடன் வருகை தரும் பெற்றோர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்களை பொருத்துவதற்குமான மதிப்பீடுகளை உள்ளடக்கிய முன்மொழிவினை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான முன்மொழிவு கிடைத்தவுடன் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் நிதியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், விளையாட்டுப் பாடசாலையான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் ஆராய்ந்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர், புவிச்சரிதவியல் உதவிப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் திருமதி சி. எஸ். ஆர். செல்வகுணாளன், பாடசாலை அபிவிருத்திச் சங்க பொருளாளர் திரு. ஆர். ஜனதன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எல். அனுராகாந்தன், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிநிதி திரு. தனராஜ், விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6