யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வானது நலன்புரிச் சங்க தலைவரும் புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளருமான திரு. ம. வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் பங்குபற்றுதலுடனும் இன்றைய தினம் (19.09.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இவ் இரத்ததான ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய அதிகாரி S.சண்முகப்பிரியா,
பொதுச் சுகாதார பரிசோதகர் திரு. த.ரவீனதாஸ், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
மேலும், இரத்ததான நிகழ்வில் 31 மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் குருதிக் கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தினால் பிரஜா சக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் திணைக்கள தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (19.09.2025) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தினுடைய பிரஜா சக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலான செயலமர்விக்கு வடக்கு மாகாண சபையினுடைய பிரதம செயலாளர் சார்பில் வருகை தந்துள்ள பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திரு ஆழ்வார்பிள்ளை சிறி அவர்களுக்கும் சனாதிபதி செயலக உதவிச் செயலாளர் திருமதி சாரதாஞ்சலி மனோகரன் அவர்களுக்கும் கிராமிய அமைச்சினுடைய பணிப்பாளர்கள், வடக்கு மாகாண அமைச்சினுடைய செயலாளர்கள் ,மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதம கணக்காளர் ,பிரதேச செயலாளர்கள் ,உதவிப் பிரதேச செயலாளர்கள் ,திட்டமிடல் பணிப்பாளர்கள்,வடக்கு மாகாண சபையினுடைய பிரதிப்பிரதம செயலாளர் உட்பட ஏனைய திணைக்களங்களினுடைய தலைவர்கள் , மத்திய மாகாண அரச திணைக்களங்களினுடைய தலைவர்கள் ,பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் வரவேற்றுக் கொண்டு தனது தலைமையுரையில் அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு செயற்பாட்டில் முக்கியமானதாக இந்த பிரஜா சக்தி திட்டம் காணப்படுகிறது எனவும் சனாதிபதி செயலகதினால் மூன்று வகையான கொள்கை பிரமாணங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.அதிலும் முதலாவதாக தூய்மை இலங்கை (Clean srilanka) திட்டமாகும். இந்த திட்டங்களின் ஊடாகவே அரசாங்கம் இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் இரண்டாவதாக பிரஜா சக்தி காணப்படுவதாகவும் மூன்றாவதாக டிஜிட்டல் ஶ்ரீலங்கா (Digital srilanka) உடன் சேர்ந்ததாக டிஜிட்டல் அரசுத்தொகுப்பு (Gov pay) காணப்படுவதாகவும் இவ்விரண்டும் திட்டங்களும் தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார். மேலும் சனாதிபதி செயலகம் மாவட்டங்களினுடைய அரசாங்க அதிபர்களுக்கு இது தொடர்பான போதுமான தெளிவூட்டல்களை வழங்கி மாகாண மற்றும் மாவட்டங்களில் இச் செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் "வளமான நாடு அழகான வாழ்க்கை " என்ற தொனிப் பொருளில் இந்த பிரஜா சக்தி செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்ததோடு பொருளாதாரத்தினை மட்டும் வைத்து வறுமையினை தீர்மானிக்க முடியாதெனவும் அதனோடு இணைந்ததாக கல்வி, சுகாதாரம்,சிறந்த வாழ்க்கைத்தரம், மனப்பாங்கு போன்றன முக்கியமான கருப்பொருளாக இருப்பதாகவும் யாழ்ப்பாண மாவட்டத்திலே இந்த பிரஜா சக்தி செயற்றிட்டத்தை மேற்கொள்வதன் மூலம் வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தை ஒன்றினைந்து செயற்படுத்த முடியும் எனவும் பிரதேச,கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மட்டுமன்றி அனைவரும் ஒன்றினைந்து இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை முற்றாக ஒழிக்க முடியாவிட்டாலும் அதனை குறைத்து கொள்ளக்கூடிய ஏதுநிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது சமூக வலுவூட்டல் மூலம் வறுமை ஒழித்தல் என்னும் தொனிப்பொருளில் இவற்றை செயற்படுத்தவுள்ள சமூக அபிவிருத்திக் குழுவின் சட்ட அடிப்படை, ஆக்க அமைவு, ஸ்தாபிப்பு மற்றும் பணிகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இதன் வளவாளராக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திருமதி சாரதாஞ்சலி மனோகரன் அவர்கள் கலந்து கொண்டார்.
குறித்த வேலைத்திட்டம் வறுமையை ஒழித்து நாட்டு மக்களை அனைத்து வகையிலும் வளமான மனிதர்களாக மாற்றியமைக்கும் நோக்கில் "செழுமையான தேசம் பசுமையான வாழ்க்கை" எனும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும் குறித்த செயலமர்வு சம நேரத்தில் சிங்கள மொழி மூலமாக மாவட்ட செயலக திட்டமிடல் கிளையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து தொடர்பான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினதும், போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடனும் இன்றைய தினம் (18.09.2025) காலை 09.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்களையும், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், எமது மாவட்டத்தின் போக்குவரத்து தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டமாக இது அமையவுள்ளதாகவும், கடல் வழிப்போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து புகையிரத மற்றும் விமான போக்குவரத்து தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்யும் கலந்துரையாடலாக இது அமையவுள்ளதாகவும் இவை தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தமது தொடக்கவுரையில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து துறையினை புனரமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்கள் இங்கு வருகை தந்து விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், எமது அரசாங்கத்தின் கொள்கைகளில் ஒன்றாக போக்குவரத்து துறையில் பாரிய அபிவிருத்தி மாற்றத்தை மேற்கொள்வதாகும், அதற்கிணங்க ஜனாதிபதி மற்றும் போகுக்குவரத்து துறை அமைச்சரின் நடவடிக்கையால் போக்குவரத்து துறை வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்கின்றது. அந்த வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மந்த நிலையில் உள்ளதாகவும், ஒப்பீட்டளவில் யாழ் மாவட்டம் போக்குவரத்து துறையில் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் மாவட்டமாக உள்ளதாகவும் போக்குவரத்து துறையை இன்று இருக்கும் நிலையை விட தரமுயர்த்தவுள்ளதாகவும் இது தொடர்பில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்கள் உரையாற்றுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விசேட போக்குவரத்து ஒருங்கிணைப் குழுவை அமைத்துள்ளதாகவும் அதற்கு அமைய இன்று போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த ஒருங்கிணைப்புக்குழு ஊடாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பில் 3 முறைமைகள் அமைக்கவுள்ளதாகவும் அதாவது பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் அரச அலுவலர்கள் அனைவரும் இந்த பிரிவின் உடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும்
இதன் முதலாவது முறைமையாக மேலதிக செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் ஊடாக எம்மோடு தொடர்பை எற்படுத்த முடியும். இவர்கள் எமது அமைச்சின் கீழ் உள்ள 17 திணைக்களங்களை ஒருங்கிணைப்பார்கள். இதற்கு மேலாக 25 மாவட்டங்களில் அமைச்சு சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் அக்குழுவின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இரண்டாவது முறைமையில் யாழ் மாவட்ட போக்குவரத்து துறை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவு செய்யப்பட்டு இவருக்கூடாக உச்ச கட்ட சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மூன்றாவது முறைமையில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். இந்த மூன்று அமைச்சர்களுக்கும் ஒருங்கிணைப்பு செயலாளர்கள் 5 பேர் வீதம் 15 பேர் உள்ளனர். யாராக இருந்தாலும் அவர்களுடன் கடிதம் மூலமாக மட்டுமல்லாது நேரடியாகவும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இக் கூட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள் குறித்தும் அதன் தேவைப்பாடுகள் குறித்தும், குறிகட்டுவான் ,நயினாதீவு புதிய பாதை சேவையை (Forry)ஆரம்பித்தல் தொடர்பாகவும் அதாவது நவம்பர் மாத ஆரம்பத்தில் இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. வீதி சமிக்ஞைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது தேவையற்ற இடங்களின் வீதி சமிக்ஞைகள் பொருத்துவதற்கு அனுமதி இல்லை என்றும் வீதிச் சமிக்ஞைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளினால் ஆராயப்பட்ட பின்பே அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சாரதி பயிற்சி நிலையங்களை மாதம் ஒருமுறையாவது கண்காணித்து தகுதியுள்ளவர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டும். இதற்கு மேலாக நீண்ட தூர பயண வாகனங்கள் இருக்கை பட்டி கட்டாயம் அணியப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாடசாலை வாகன சாரதிகள், அலுவலக வாகன சாரதிகள் மற்றும் பேருந்து சாரதிகள் கட்டாயம் பொது போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் இதனை இறுக்கமாக பின்பற்றுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புகையிரத சேவை பற்றாக்குறையாகவுள்ளதாகவும் புகையிரதங்களின் என்னிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு பாதுகாப்பான புகையிரத கடவை பற்றியும் அது தொடர்பாகவும் இதேவேளை, யாழ். நகரத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் மத்திய பேருந்து நிலையம் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நகரின் நெருக்கடி காரணமாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சிவில் விமான நிலையம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கௌரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி எம். தனுஜா, அமைச்சின் மேலதிக செயலாளர்கள் ,மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், முப்படைகளின் அதிகாரிகள் , திணைக்களத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது.
இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருப்பதுடன் நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழியாக சாதாரண மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வெளிப்படையானதும் சிக்கனமானதுமான மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் அரச திட்டங்களுக்கு வழிகாட்டும் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாகும். மேலும் GovPay செயலியின் மூலம், மக்கள் அரசு சேவைகளை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் நம்பகத்தன்மையாகவும் பயன்படுத்த முடியும். மேலும் இது அழுத்தங்களை குறைப்பதோடு மட்டுமில்லாது அரசுத் துறைகளில் நம்பிக்கையை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகும்.
இதன் இறுதி இலக்காக இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் சேவையின் மூலம் பாதுகாப்பும்,நம்பிக்கையும் வழங்குவதுடன், அனைவரும் பங்கு பெறக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் எதிர்காலத்தை கட்டமைப்பதே இதன் நோக்கமாகும்.
இந் நிகழ்வில் லங்கா பே (Lanka pay) துணை தலைமை அதிகாரி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதம கணக்காளர் ,பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டாரகள்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் பாடசாலை மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித் திட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(17.09.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மு.ப 9.00 தொடக்கம் பி.ப 2.30 மணி வரை நடைபெற்றது.இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலம் என்பதற்கு அமைவாக மாணவர்களாகிய உங்களுடைய ஆளுமைகளை விருத்தி செய்துகொள்வதோடு சக மாணவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் அவர்களை ஆற்றுப்படுதத்க் கூடியவர்களாகவும் திகழவேண்டும் என்றும் இவ்வாறான வாய்ப்புக்களை பயன்படுத்தி உங்கள் ஆளுமைகளை விருத்தி செய்து கொள்வதை நீங்கள் ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக்கொள்வதோடு மாறிவரும் இன்றைய சூழல் போக்கை உரியமுறையில் சாதகமாக பயன்படுத்தி ஒவ்வொரு மாணவரும் தங்கள் குடும்ப நிலையை புரிந்து அதற்கேற்ற வகையில் நேரான பாதையில் முன்னேறிச்செல்ல வேண்டும் என்றும் மாறிவரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் உங்கள் ஆளுமைப்பண்புகளை விருத்தி செய்து வெற்றியடைய வேண்டும் என தெரிவித்தார். மேலும் பாடசாலை நிர்வாக கட்டமைப்புக்களை சீராக நடத்துவதற்கு மாணவர்களாகிய நீங்களே பக்கபலம் என்றும் குறை கூறும் சமூகத்தில் இருந்து நாம் மாற வேண்டுமானால் மாணவர்களாகிய நீங்கள் மாற வேண்டும் எனவும் வீட்டுச்சூழல் ஆரோக்கியமானதாக இருப்பதில் மாணவர்களாகிய உங்களது பங்கு அளப்பரியது எனவும் தெரிவித்தார்.
இவ் நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கங்களாக மாணவ தூதுவராக செயல்படும் மாணவர்கள் சவால்களாக காணப்படும் பிரச்சினைகளை அறிவார்ந்த ரீதியாக சிறப்பாக பகுப்பாய்வு செய்து தேர்வுகளை காண்பதற்காக பயிற்றப்படுவதுடன் ,சிறுவர்நேய சூழல் மலர்வதை உறுதிப்படுத்துவதும், பொறுப்பு கூறும் மாணவ சமூகம் உருவாக்கப்படுவதையும் எதிர்பார்ப்பாக காணப்படுவதுடன் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கையை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
இச்செயலமர்வில் " ஆளுமை மேம்பாடும் உளநோய் குறைபாடுடைய மாணவர்களை கையாளும் நுட்பங்களும்" தொடர்பாக அடம்பன் ஆதார வைத்தியசாலையின் உளமருத்துவர் திரு.க.சிவசுதன் அவர்களும் "கட்டுக்காவல் சட்டங்கள் மற்றும் சிறுவர்களின் அடிப்படை மனித உரிமைகள்" தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவின் பிராந்திய ஆணையாளர் திரு.T. கனகராஜ் அவர்களும் எண்ணக்கரு தொடர்பான கருத்தமர்வினை சங்கானை பிரதேச செயலக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு .இ.ராவிராஜ் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.







