பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08.09.2025) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு. சங்கரன் இராஜகோபாலன், இந்திய நிறுவன அதிகாரிகளான திரு. என். ரவிசங்கர், திரு. எம். பி. பெலியப்பா உள்ளிட்டவர்கள் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் அவர்களினால் துறைமுக அபிவிருத்தியின் அவசியம், தேவைப்பாடுகள் அதனால் ஏற்படும் சாதகங்கள், மீனவர்களுக்கான நன்மைகள், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக விளக்கமளித்து, அபிவிருத்தி தொடர்பாக இந்தியத் தூதரக அதிகரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்தரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பருத்தித்துறை பிரதேச செயலாளர், கரையோரம் பேணல் மற்றும் மூலவள முகாமைத் திணைக்கள பொறியியலாளர், கடற்றொழி்ல் நீரியல் வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாவட்டச் செயலணி ஸ்தாபித்தல் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.09.2025) பிற்பகல் 03.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இக் கூட்டத்தில்
தொற்றாய் நோய்களான நீரழிவு, உயர்குருதி அழுத்தம், கொலஸ்ரோல், புற்றுநோய் போன்றவற்றால் இலங்கையில் 83% இறப்பு ஏற்படுவதாக
டாக்டர் கே. இலங்கோகனிகர் அவர்களினால் விபரமாக எடுத்துக் கூறப்பட்டதுடன், ஆரோக்கியமான சுகாதார முறையிலான உணவின் அவசியம், உடற்பயிற்சி, பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு, பாடசாலைகளில் ஆரோக்கிய சிற்றுண்டிச் சாலையின் அவசியம், விபத்துக்களைத் தடுத்தல், போன்றவை தொடர்பாக விபரிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் அவர்களால் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டது.
1.பாடசாலை களிலும், அலுவலகங்களிலும் ஆரோக்கியமானமேம்பாட்டு அறை (Healthy Promostion Room) இருத்தல் வேண்டும்.
2.வயது 35 இனைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். பொதுமக்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அல்லது சுகாதார நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு தமக்குரிய தனிப்பட்ட மருந்துவப் புத்தகத்தினை பேண முடியும்.
3.அலுவலகங்கள், நிறுவனங்கள் கேட்க்கும் பட்சத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மேற்கொள்ளப்படும்.
4.அலுவலகங்களில் புகைத்தல் தடைசெய்யப்பட்ட பிரதேசம் என காட்சிப்படுத்தப்பட்ட பலகை இருத்தல் வேண்டும் என்பதுடன் அலுவலகங்களுக்கு வருபவர்கள் வெற்றிலையுடன் (வெற்றிலையினை சாப்பிட்டுகொண்டு) வருவதனையும் அனுமதிக்கக் கூடாது.
5.வீதி விபத்துக்களை தடுத்தல் வேண்டும் என்பதுடன், பாதுகாப்பற்ற கிணறுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி இறப்பது அதிகரித்துள்ளதால் அது தொடர்பில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனவும் - ஆபத்தானது என்று அடையாளப்படுத்தல்கள் அல்லது தடுப்புக்கள் அவசியமானது.
6.கடந்த ஆண்டில் விசர்நாய் கடியினால் ஒருவருக்கு இறப்பு ஏற்பட்டது என்றும் பொதுமக்களுக்கு இது தொடர்பிலான விழிப்புணர்வு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன அவர்கள், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் காட்டும் அக்கறையினை பிள்ளைகளின் சுகாதாரத்திலும் செலுத்த வேண்டும் எனவும், பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியம் அவசியம் எனவும் தெரிவித்தார்.
மாவட்டச் செயலணியின் தலைவர்களாக அரசாங்க அதிபரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் செயற்படுவார்கள்.
இக் கூட்டத்தில் செயலணியின் உறுப்பினர்களான திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விளையாட்டுத் துறை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுக் கூட்டம் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் கெளரவ ரி. பி. சரத் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (04.09.2025) ஆம் திகதி காலை 09.15 மணிக்கு மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி டீபானி டொடங்கோட, பணிப்பாளர் (மீள்குடியேற்றம்) திருமதி கே. ஜி. பி. பூர்ணிமா அபேசிறிகுணவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதன் போது கருத்து தெரிவித்த நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் கெளரவ ரி. பி. சரத் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக தமது அமைச்சின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும், மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முன்னேற்றங்களை தாம் நேரில் ஆராய வந்துள்ளதாகவும் தெரிவித்தார். எமது அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு விவசாயம், கைத்தொழில், அபிவிருத்தி போன்றவற்றில் வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், நேற்றைய தினம் கிளிநொச்சியிலுள்ள கிராமங்களுக்குச் சென்ற போது அடிப்படைத் தேவைகள், போக்குவரத்து வசதிகள், அபிவிருத்திகள் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சி காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 3847 வீடுகளுக்கான மிகுதி நிதி அமைச்சரை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வீட்டுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரூபா 1 மில்லியன் நிதி போதாமையினால் அதனை ரூபா 1.5 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும், கிராமங்கள் ரீதியாக பிரஜா சக்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகள் ஒன்றிணைந்து தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இலங்கை யின் வடக்கு, கிழக்கு தெற்கு மேற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வோம் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், மீள்குடியேற்றம் அமைச்சானது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே அதிக நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும், மேலும் தேவைப்பாடுகளை சாதகமாக பரிசீலிப்பதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்து, மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்கள் பிரதேச செயலக ரீதியாக இருத்தல் வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் நிறைவேற்றி முடிக்குமாறும் கெளரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடல் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.09.2025) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்கள், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாடு ஓரளவு சீரகவுள்ளதாகவும், தொடர்ச்சியான கட்டுப்பாட்டு கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவித்து, அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோர் பங்குபற்றியதுடன் முன்னேச்சரிக்கை மற்றும் தடுக்கும் வழிவகைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார் கள்.
மேலும் இக் கூட்டத்தில்
முன்னெச்சரிக்கையாக டெங்குக் நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.இம் மாதம் - செப்டம்பர் 08 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதிக்கிடையில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டு கூட்டத்தினையும், கிராம அலுவலர் தலைமையில் கிராம மட்ட டெங்கு நோய் கட்டுப்பாட்டு கூட்டத்தினையும் நடாத்துதல்.
2 டெங்கு விழிப்புணர்வு வாரத்தினைஇம் மாதம் - செப்டம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடாத்துவது எனவும், அந்தவகையில் 14 ஆம் திகதி வணக்கஸ்தலங்களிலும், 15 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பாடசாலை களிலும் சம்பந்தப்பட்ட சுகாதாரம் வைத்திய அதிகாரி ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.விசேட நுளம்பு கட்டுப்பாட்டு தினங்களான இம் மாதம் - செப்டம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிகளில் - சுத்திகரிப்பு சிரமதான வேலைகளை வீடுகள், பாடசாலைகள், அரச தனியார் நிறுவனங்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் மேற்கொள்ளுதல். இலங்கையில் மலேரியா நோய் கட்டுப்பாட்டில் உள்ளது எனினும் குறிப்பாக தென் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பது தொடர்பில் விழிப்புணர்வின் அவசியம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
4.திண்மக் கழிவகற்றலில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதை உறுதிப்படுத்தல்.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பொலிஸ் கடற்படை மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.09.2025) பி.ப 01.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் இந்திய இலங்கை கடற்போக்குவரத்திற்கு மேலதிகமாக இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் பொருட்களைகொண்டுவருதல் மற்றும் இங்கியிருந்து என்ன பொருட்களை கொண்டு செல்லலாம் எனவும் அதன் மூலம் ஏற்படும் தொழில் வாய்ப்பு மற்றும் சாதக பாதகங்கள் ஆராயப்பட்டதுடன், காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி தேவைகளுக்கான காணித் தேவைப்பாடு தொடர்பாகவும், இவ் துறைமுக அபிவிருத்தியை ஏற்படுத்துவதனூடாக எவ்வாறான சிறப்பான சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும் அல்லது அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக பிராந்திய இணைப்பை வலுப்படுத்துதல், வர்த்தகத்தை எளிதாக்குதல் மற்றும் வடக்கு மாகாணத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், வேலைவாய்ப்புக்கள், சுற்றுலாத்துறை வளர்ச்சி , சுற்றுச்சூழல்தாக்கம், சமூக நடத்தையில் ஏற்படும் மாற்றம், அரச சேவைகள், போக்குவரத்து சேவைகள் போன்றவற்றின் அபிவிருத்திசார் விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது .
இக்கலந்தரையாடலில் இலங்கை துறைமுக அதிகாரசபை உதவி முகாமைத்துவ பணிப்பாளர்திரு. ஜெ.ஏ.சந்திரரத்ன, பிரதம பொறியியலாளர் திரு. சி.எல்.தசநாயக்க, திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பி. கெட்டியாராய்ச்சி, பிரதம பொறியியலாளர் திரு. எஸ்.எச்.எம்.பி. அபயசேகர, நிகழ்சித்திட்ட முகாமையாளர் திரு. தேவசுரேந்திரா, பிரதம பொறியியலாளர் திரு. கே.ஆர்.என்.என்.எம் காரியவசம், யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்நிரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்சினி மற்றும் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






