யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை (08.03.2025) காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்நிகழ்வானது தொழில் தேடுநர்கள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் என தெரிவித்ததுடன், இந் நிகழ்வில் 45 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இந்நிகழ்விற்கு அனுசரனை வழங்கிய நிறுவனங்களுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் தனியார் உற்பத்தி நிறுவனங்கள், ஆடை உற்பத்தித் துறை, பாதுகாப்புச் சேவை, தாதியர் வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறை, கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் துறை போன்ற தொழில் வெற்றிடங்களிற்கான ஆட்சேர்ப்பதற்கான நிறுவனங்கள் மற்றும் கணினித்துறை, தாதியர் பயிற்சி நெறி, கப்பல் துறை ஹோட்டல் முகாமைத்துவம் போன்ற பாட நெறிகளை நடாத்தும் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் வங்கிக் கடன் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் போன்றவை உள்ளடக்கிய வகையில் தொழிற் சந்தை நடைபெற்றது.
இன்றைய தொழிற் சந்தையில் 400 இற்கு மேற்பட்ட தொழில் நாடுவோர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் உதவி மாவட்ட செயலாளர் ,மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் , வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், தொழில் தருநர்கள், மற்றும் தொழில் தேடுவோரும் பங்குபற்றியிருந்தனர்.

மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும் அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திரு.ஆர்.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.03.2025) பிற்பகல் 4.00மணிக்கு மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்தகைய இரண்டு எஞ்சின்களை கொண்ட மோட்டார் சைக்கிளை வடிவமைப்பு செய்து மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமைத்தமை சிறப்பான விடயம் எனவும் அதிகளவில் மாற்றுவலுவுள்ள பெண்கள் இவ் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுகொள்ள வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் இத்தகைய மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டு அதற்கென தனித்துவமாக இலக்கத்தகடுகள் உருவாக்கப்பட்டிருப்பது எமது மாவட்டத்தின் தொழில்நுட்ப அறிவினை பறைசாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக மாற்றுவலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக எழுத்துப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சைகள் என்பன ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தன.அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தினை இன்றையதினம் அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைதடி மாகாண சபைக் கட்டடத்தொகுதியில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது மாற்றுவலுவுள்ளோரினால், மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளை திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவினரால் பரிசீலிக்கப்பட்டு அந்த வாகனங்களுக்குரிய அடிச்சட்ட இலக்கங்கள் பொறிக்கப்பட்டன. அதன் பின்னர் குறித்த வாகனங்களிற்கு 325-6000 என்ற தொடர் இலக்கங்கள் ஒதுக்கப்பட்டு குறித்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பதிவுச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும் அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலமும் அவர்களுக்கு வாகனத்தை செலுத்துவதற்கான அங்கீகாரம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்து, அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது யாழ்ப்பாண மாவட்டத்திலேயே முதன்முதலாக நடைபெறுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,உதவி மாவட்ட செயலாளர் ,பிரதம கணக்காளர் ,மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ,சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ,சிறுவர் நன்னடத்தை மாகாண பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் மாற்றுவலுவுள்ளோர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (06.03.2025) காலை 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சுற்றாடல் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தில் சுற்றாடல் தூய்மையும் உள்ளடங்குவதால் கழிவகற்றல் பொறிமுறை சிறப்பாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதற்கு முதற்கட்டமாக திண்மக்கழிவகற்றல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு கழிவு சேகரிப்பின் போது தரம் பிரிக்கப்படாத கழிவுகள் உள்ளூராட்சி அமைப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதையும் அறிவித்து தரம்பிரித்து கழிவுகளை வழங்குவதற்குரிய விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு வழங்கி குறித்த கால அவகாசத்துடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு இந்த திட்டத்தினை இறுக்கமாக பின்பற்றுமாறும் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் விழாக்களின் போது ஒலிபெருக்கி மூலமான ஒலி வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் வழிபாட்டுத்தலங்களிலும் ஏனைய நிகழ்வுகளிலும் ஒலிபெருக்கிகள் குறித்த எல்லைக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இதனை மீறும் பட்சத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. மேலும் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் போது பொதுமக்கள் அது தொடர்பாக கிராம அலுவலர்கள் ,பிரதேச செயலாளர்களுக்கு தொலைபேசி மூலமாக தெரியப்படுத்த வேண்டுமெனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரதேச செயலாளர்கள் நேரடியாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு தெரிவிப்பதோடு அவர்கள் அழைப்பதற்கான தொலைபேசி இலக்கங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் வழங்கியதோடு இதற்கு மேலதிகமாக பொதுமக்கள் தங்களுடைய முறைப்பாடுகளை 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ்அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இக் கூட்டத்தில் நகர்புறங்களில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைகள், வளி மாசு மற்றும் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகர் சார்பான பிரதிநிதிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ,அலுவலக உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர், அறிவியல் நகர் வனப்பரிபாலன திணைக்கள உதவிப்பணிப்பாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.03.2025) பி.ப 02.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் கடந்த கூட்ட விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன்,
இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்கள் 9000 பேர்வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பாா்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து செல்லுகின்ற பயணிகளுடைய பதிவுகள் குறிகாட்டுவானில் மேற்கொள்ளபடுமெனவும் ஏனைய பிரதேசங்களிலிருந்து செல்லுகின்றவர்கள் கடற்பாதுகாப்பு கருதி தங்களுடைய பிரதேசங்களில் உள்ள கடற்படை முகாம்களில் தங்களுக்குரிய பங்குகளிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1300.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இம்முறை சாரணர்கள் 25பேர்வரை இத்திருவிழாவில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுதுடன்,
கடற் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள படகுகள் சேவை மற்றும் அவை புறப்படும் நேரங்கள் தொடர்பாக கடற்படை அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டன
யாத்திரிகர்களுக்கு 14 ஆம் திகதி இரவு உணவும், 15 ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர்களுக்கான தங்குமிட வசதிகள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், ஆலயச்சூழல் துப்பரவு செய்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம், தொலைத்தொடர்பு வலையமைப்பு வசதிகள் (Dialog,mobital)ஊடகங்களுக்கான அனுமதி தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, மாவட்ட பிரதம கணக்காளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை அதிகாரிகள், பிரதேச சபை பிரதிநிதி , யாழ்ப்பாண சாரணர் பிரதிநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்று (06.03.2025) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனவும் இளம் விவசாயிகளை பிரதேச மற்றும் மாவட்ட குழுக்கூட்டத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம் இளைய சமுதாயத்தை நவீன விவசாயத்தை நோக்கி உள்ளீர்க்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் பயன்படுத்தப்படாமல் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிப்பின் அவர்களின் பயன்படுத்தப்படாத விவசாய நிலங்கள் ஆகியவற்றை தற்காலிகமாக விவசாயத்தேவைகளுக்கு பயன்படுத்த சரியான பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதனூடாக விவசாய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தாா். மேலும் கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட
திட்டங்களின் முன்னேற்றம், பிரதேச செயலகங்கங்களின் கலந்துரையாடலில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்,
தற்போது அதிகரித்து வரும் தென்னை மரத்தை பாதிக்கும் வெண் ஈ தாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்கள் குறித்து மக்களுக்கு சரியான விழிப்புணர்வு மேற்கொள்ளுமாறும் தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதுமட்டுமன்றி மாவட்டத்தில் புதிதாக பன்றி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு பிரதேச சபை , சுகாதார வைத்திய அதிகாரி , மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் சிபார்சு வழங்கப்பட்டதன் பின்னர் அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாவும் வீதி அபிவிருத்திஅதிகாரசபை ,வீதி அபிவிருத்தி திணைக்களம் , உள்ளூராட்சி அமைப்புக்கள் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளும் போதும் மதகுகள், பாலங்கள் அமைக்கப்படவேண்டிய சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்ட அந்தந்த திணைக்களங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்குமாறும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி உதவிஆணையாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்,கூட்டுறவு உதவி ஆணையாளர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வங்கி மற்றும் காப்புறுதி சேவை பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.






