மாவட்டச் செயலகத்தில் 08.03.2025 நடைபெறவுள்ள தொழிற்சந்தை நிகழ்வுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.03.2025) பி.ப 3.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களால் தொழிற்சந்தை நிகழ்வுக்கான விடயங்கள் விளக்கமளிக்கப்பட்டதுடன், தொழிற்சந்தை நிறுவனங்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். மேலும் இத் தொழிற் சந்தையில் 500 வரையான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் ஆயிரம் வரையான தொழில் தேடுனர்கள் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நிறுவனங்களின் அபிப்பிராயங்கள் கேட்டறிந்து சிறப்பாக தொழில் சந்தையினை நடாத்துவதற்கும் யாழ்மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அதிகவாய்ப்பானதாக அமைய அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
இக்கலந்துரையாடலில் 30 வரையான நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவன பிரதிநிதிகளும் மனிதவள மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.03.2025) மு.ப 09.30. மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இந்திய முதலீட்டாளர்கள் இந்தியாவுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் ஆன்மீகம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் முதலீட்டு பிரிவின் பணிப்பாளர், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக தலைவர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் (காணி), இந்திய முதலீட்டாளர் குழு, காணி ஆணையாளர் அலுவலக பிரதிநிதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி மாவட்ட செயலாளர் , பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள் உட்பட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய விடய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.02.2025) பி.ப 1.45 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டத்தினூடாக நிலையான மற்றும் உயர்வான வாழ்க்கைத்தரத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பொருளாதார சமூக மற்றும் உள ரீதியாக வலுவூட்டுதலை இலக்காகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தை யாழ்ப்பாண நடைமுறைப்படுத்த மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைள் தொடர்பாகவும் அவை தொடர்பாக மாவட்ட உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் மற்றும் பயனாளிகள் தெரிவு தொடர்பாகவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம்(திட்டமிடல்) திருமதி .ஏ. பாக்கியராஜா அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் ,பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தி திணைக்கள கணக்காளர்கள் மற்றும் முகாமையாளர்கள் ,மாவட்ட திணைக்களத்தலைவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற பனைமரங்களுக்கான மீள் நடுகை செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்
பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற பனைமரங்களுக்கான மீள் நடுகை செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.02.2025) பி.ப 3.15 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் அனர்த்தம் ஏற்படக்கூடிய பனைமரங்கள் காணப்படுமாயின் அவற்றினை ஐந்துபேர் கொண்ட குழுவொன்றினை அமைத்து அவர்கள் நேரில் சென்று பாா்வையிட்டு தறிப்பதற்கான அனுமதி வழங்குதற்கும் , அரச வீட்டுத்திட்டம், அரசசாா்பற்ற வீட்டுத்திட்டம் என்பவற்றினால் பிரதேச செயலகங்களினூடாக வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் பனை மரம் தறிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும் பனை அபிவிருத்தி சபைக்கு ஆலோசனை வழங்கியதுடன் , பனை அபிவிருத்தி சபையினால் யாழ் மாவட்டத்தில் பனம் விதை நடுவதற்கான இடங்கள் காணப்படுமாயின் அதற்கான இடஅமைவு தொடர்பான விடயத்தினை பிரதேச செயலாளர்களை அறிக்கையிடுமாறும் தெரிவித்தாா்.
பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாக பிரதேச செயலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான உடனடித் தீர்வுகள் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் திரு வி. சகாதேவன் அவர்களும் கலந்து கொண்டார்.
மேலும் இக்கலந்துரையாலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி .உ.தர்சினி ,பிரதேச செயலாளர்கள், பனைஅபிவிருத்தி சபையின் முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் உதவித் தேர்தல் ஆணையாளர் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா
வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு வருடாந்த இடமாற்றம் மூலம் இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திரு இ. கி. அமல்ராஜ் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (24.02.2025) பி. ப. 03.15 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய
அரசாங்க அதிபர் அவர்கள் எமது மாவட்டத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர் 06 ஆண்டுகள் பணியாற்றியவர் எனவும், நிதி, நிர்வாகம் தொடர்பாக பயிற்சி வகுப்புகள் மற்றும் தடைதாண்டல் பரீட்சைகளுக்கான வகுப்புக்களை நடாத்தி பல பேரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி புரிந்துள்ளார் எனவும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 04 தேர்தல்களை நடத்தியுள்ளார் எனவும் தாம் தெரிவத்தாட்சி அலுவலகராக கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் கடமையாற்றிய போது தம்முடன் பக்கபலமாகவிருந்து தேர்தல் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை மிகவும் நேர்த்தியாக கையாளுபவர்
என பாராட்டு வழங்கிய அரசாங்க அதிபர் இவரின் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதேவேளை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் அவர்களினால் வாழ்த்துரை வழங்கப்பட்டதுடன் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களினாலும் வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது அரசாங்க அதிபர் அவர்களினால் பொன்னாடை அணிவித்து
கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






