யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான
சீன அரசாங்கத்தின் "சீனாவின் சகோதர பாசம்" செயற்றிட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி கெளரவ சூ யன்வெய் அவர்களும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை பொழிந்த கன மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட 1070 குடும்பங்களிற்கு தலா ரூபா 6500.00 பெறுமதியான ஏறத்தாள 6.90 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கிய சீனா அரசாங்கத்திற்கும், இந் நிகழ்விற்கு வருகைதந்த இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி கெளரவ . சூ யன்வெய் அவர்களுக்கும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் சீனத் தூதரக அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.02.2025) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழா சிறப்பாக நடைபெற்றமைக்கு உயர்ந்த ஒத்துழைப்பினை வழங்கிய
கடற்படை மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்து, எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்பு பிரதானமானதெனவும் குறிப்பிட்டதுடன், இத் திருவிழாவுக்கு சிறப்புற நடைபெற அனைவரின் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின் கட்டண நிர்ணயம் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேற்படி கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்கு என 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேலதிகமாக உத்தியோகத்தர்கள், ஏனையோர்கள் உட்பட
9000 பேர் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2.குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1300.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், இவ்வாறு படகு சேவையில் ஈடுபடுகின்ற படகின் உரிமையாளர்கள் பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் அதற்குரிய சான்றிதழ்களை கடற்படையினரிடம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேரூந்துக்களும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் 14 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் 11.30 வரை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்துக்கள் புறப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
4.யாத்திரிகர்களுக்கு 14 ஆம் திகதி இரவு உணவும், 15 ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், அருட்தந்தை பி. பத்திநாதர், இந்திய துணைத் தூதுவர் திரு இ. நாகராஜன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512 வது பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, திணைக்களத் தலைவர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை, இராணுவப்படை அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், நெடுந்தீவு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி வீர வீராங்கனைகளுக்கான நிகழ்வானது யாழ்ப்பாண வலைப்பந்தாட்ட பயிற்றுனர் செல்வி மனோன்மணி சின்னத்தம்பி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (21.01.2025) மு. ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஒரு போட்டியில் வெற்றி தோல்வியினைக்காட்டிலும், அப் போட்டிகளில் பங்குபற்றுவதே பாராட்டத்தக்கவிடயம் எனவும், அதிலும் குடும்பச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் குறிப்பாக பெண் அரச உத்தியோகத்தர்கள் பங்குபற்றியமை சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்டார். மேலும், போட்டித்தன்மை இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்க கூடாது எனவும், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவதன் ஊடாக நல்ல மனப்பாங்கு உருவாவதற்கும், நேரமுகாமைத்துவம் பேணுவதற்கும் மற்றும் அர்ப்பணிப்பாக செயற்படுவதற்கும் துணை நிற்கும் எனவும் குறிப்பிட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தினை பெருமைப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியானது 23.11.2024 அன்று மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் 40 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும், ஆண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. போட்டியில் பங்குபற்றிய வீர வீராங்கனைகளுக்கான போட்டிச் சான்றிதழ்களும் , அரசாங்க அதிபரின் மெச்சுரையும் வழங்கப்பட்டதுடன், அணிகளுக்கான வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது. மேலும், கலப்பு போட்டியில் பங்குபற்றிய வீர வீராங்கனைகளுக்கும் அரசாங்க அதிபரின் மெச்சுரை வழங்கப்பட்டது.
மேலும், இப் போட்டிகளுக்கு முன்னின்று உழைத்த வலைப்பந்தாட்ட பயிற்றுனர் செல்வி மனோன்மணி சின்னத்தம்பி அவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதனை முன்னிட்டும் அரசாங்க அதிபர் அவர்களால் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், வடக்கு வலய பதிவாளர் நாயகம், மேலதிக மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (06.02.2025) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கிளீன் ஶ்ரீலங்கா செயற்றிட்டத்தில் சுற்றாடல் தூய்மையும் உள்ளடங்குவதால் கழிவகற்றல் பொறிமுறை சிறப்பாக இருத்தல் வேண்டும் எனவும், அதற்கு முதற்கட்டமாக பாடசாலை மாணவர்களிடமிருந்து விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு உள்ளூராட்சி அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச ரீதியாக பொது மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி கழிவகற்றல் பொறிமுறையினை உருவாக்கலாம் எனவும் குறிப்பிட்டார். மேலும், சண்டிலிப்பாய் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்களில் முன்னோடி செயற்றிட்டமாக பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடி பொறிமுறையினை உருவாக்கிச் செயற்படுத்துமாறும் கேட்டுக் கொண்டதுடன், சுண்ணக்கல் அகழ்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திற்குரிய பிரதேச செயலாளர்/உதவிப் பிரதேச செயலாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக பொறியியலாளர்,பிரதேச சபைச் செயலாளர் மற்றும் பொலிசார் ஆகியோர் அடங்கியவகையில் குழு அமைத்து சிபார்சு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், இக் கூட்டத்தில் நகர்புறங்களில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைகள், திண்ம கழிவு முகாமைத்துவம், வளி மாசு மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்திய அதிகாரி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உதவி ஆணையாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வானது மாவட்ட சமூக தேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் திரு ந. ரதிக்குமார் தலைமையில் இன்றைய தினம் (06.02.2025) Tilko Jaffna City Hotel நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் எனவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,500 வரையிலான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் எனவும், அவர்களுக்குரிய ஏதேனும் திறனை அடையாளம் கண்டு அவர்களுக்கான வாழ்வாதார த்தினை ஏற்படுத்த வேண்டும் எனவும், அந்த வகையில் JICA நிறுவனத்துடன் இணைந்து
சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், JICA (Employment Support for Persons with Disabilities) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது மாவட்டம் குறிக்கப்பட்ட இலக்கினை விட கூடுதலான இலக்கை அடைந்து அதிகளவான மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான வேலைவாய்புக்களைப் பெற்றுக்கொடுத்தவர்கள் என்ற வகையில் எமது மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்கள்
தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது எனக் குறிப்பிட்டு, அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள், சமூகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவலு வேலை வாய்ப்பு உத்தியோகத்தர்கள், தொழில் வாய்ப்பினை வழங்கிய நிறுவனங்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றி இலக்கினை அடைய செயற்பட்ட சமூகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள், தொழில் வாய்ப்பினை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் கெளரவிக்கப்பட்டார்கள்.
2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டம் 14 நபர்களை தொழில் ஈடுபடுத்தி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஜப்பான்JICA நிறுவனத்தின் திட்டத்திற்கான பிரதான ஆலோசகர் திரு. Shimizy Takachi, நிபுணர் Ms. Miho Ito, பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர்கள் மாவட்ட பிரதேச மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.






