FAIRMED நிறுவனத்தின் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.02.2025) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சமூகத்தில் பொருளாதார மட்டத்தில் நலிவடைந்த குடும்பங்கள் மற்றும் அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சித் திட்டங்களை FAIRMED நிறுவனம் முன்னெடுத்துவருகின்றது. அத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திவரும் சக்கர நாற்காளி மற்றும் மூன்று சில்லுச் துவிச்சக்கரவண்டி என்பன திருத்த வேண்டி ஏற்படும் போது அதனை FAIRMED நிறுவனத்தின் அனுசரணையில் இலவசமாக திருத்தி வழங்குவது தொடர்பான பொறிமுறையும் ஆராயப்பட்டதுடன் அதன் விபரங்களை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக விரைவில் அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, FAIRMED நிறுவன இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரயாராச்சி, சமூகசேவை திணைக்கள மாவட்ட இணைப்பாளர் திரு. ந. ரதிகுமார், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கி. தயாபரி, FAIRMED நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்
 
 
 
1 2 3 4
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.02.2025) யாழ் மத்திய கல்லூரிவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் ,சமூக சேவைகள்,கூட்டுறவு ,உணவு வழங்கலும் விநியோகமும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தகமும் வாணிபமும் மாகாண அமைச்சின் செயலாளர் திரு .பொ. வாகீசன்,அவர்களும் சிறப்பு விருந்தினராக FAIRMED செயற்றிட்ட தலைவர் திருமதி.ஞானரதன் பிரியரஜினி,அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் இத் தடகள விளையாட்டுப்போட்டி இடம்பெற்றது.
7 வகையான மாற்றுத்திறனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 87 வகையான விளையாட்டுக்கள் நடைபெற்றன.
இவ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் நல்லூர் பிரதேச செயலகம் முதலாவது இடத்தினையும், பருத்தித்துறை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான
மாவட்ட தடகள விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
 
1 2 3 4 5 7  8
"க்ளீன் ஸ்ரீலங்கா" கடற்கரையோரத்தினை சுத்தப்படுத்தல் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.02.2025) பி. ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், எதிர்வரும் 23.02.2025 ஆம் திகதி பிரதேச செயலக ரீதியாக கடற்கரையோரத்தினை சுத்தப்படுத்தல் செயற்றிட்டத்தினை வினைத்திறனாக செயற்படுத்த வேண்டும் எனவும், அதற்கான ஒழுங்கமைப்பினை சிறப்பாக மேற்கொள்ளுமாறும் அனைவரையும் கேட்டுக் கொண்டார். பிரதேச செயலாளர்களால் தமது பிரதேச செயலகத்தினால் சுத்தப்படுத்தவுள்ள கடற்கரைகளின் விபரங்கள் அறியத்தரப்பட்டது.
இக் கலந்துரையாடலினைத் தொடர்ந்து பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (14.02.2025) மு.ப 9.30 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், அவர்களின் தலைமையில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று தனது வரவேற்புரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்க்காக ரூபா 56 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவற்றுக்கான முன்மொழிவுகள உரிய முறையில் சமர்ப்பிப்பதற்க்கான முன் ஆயத்த கலந்துரையாடலாக இது அமையும் என தெரிவித்தார் .
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 56 மில்லியன் ரூபாயினை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 9 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தேவை அடிப்படையில் பிரதேசசெயலக ரீதியாக இந்த நிதியினை பயன்படுத்துமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், கௌரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே. சிவஞானம், வடக்குமாகண ஆளுநரின் செயலாள‌ர் திரு.எம் நந்தகோபாலன் , திணைக்களத்தலைவர்கள் ,பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் ,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,, ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4
அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான கலந்தாய்வு மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.02.2025) காலை 9.00 மணி தொடக்கம் 01.00 மணி வரை தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக் கலந்தாய்வில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
2025ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறை ப்படுத்தவுள்ளதிட்டங்கள் தொடர்பாகவும், பிரதேச செயலகங்களுக்கிடையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களில் காணப்பட்ட சமநிலையின்மை தொடர்பாகவும் ஆராயப்பட்டு, திட்டங்களின் பகிர்வு தொடர்பாகவும் இறுதி செய்யப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், பிரதி உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
1  2 3 4