அனைவருக்கும் இனிமையான பயணம் எனும் தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து பொதுப்போக்குவரத்து பேரூந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 23.03.2022 அன்று மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், முன்னாள் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரும், தற்போதைய தேசிய பெண்கள் குழு உறுப்பினருமான திருமதி. இமெல்டா சுகுமார் அவர்கள் கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. கோசலை மதன் (சட்டபீடம், யாழ்.பல்கலைக்கழகம்) மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பேரூந்து செலுத்துநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கைத்தொழில் வர்த்தகத்துறை தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 18.03.2022 அன்று மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்களும், கடற்தொழில் அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும் கலந்து கொண்டதோடு,மேலும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், துறைசார் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஏற்பாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (21.03.2022) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்டம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய ''சுகாதார பாரிய திட்டம்'' என்னும் நூல் வெளியிடப்பட்டதுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்திட்டத்தினை 2020-2030 க்குள் எவ்வாறு மேற்கொள்வது, அதன் குறிக்கோள்கள் அடைவதற்கான சாத்தியப்பாடுகள், எவ் இடங்களில் மேற்கொள்வது, கழிவு நீர் சுத்திகரிப்பை சரியாக மேற்கொள்ளாமையால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள், அதற்கான தீர்வுகள், நிதித் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி யாழ்ப்பாண கோட்டையில் இன்றைய தினம் (22.03.2022) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த கண்காட்சியினை இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் ரஞ்சா கொங்றிவிப் (tanja gonggrijp) ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப. புஷ்பரட்ணம், கௌரவ யாழ். மாநகர முதல்வர், தொல்பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயற்திட்ட முகாமையாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் தமது உற்பத்திகளை தகுந்த விலையில் விற்பனை செய்வதற்கும், நுகர்வோர் குறைந்த விலையில் மரக்கறிகள் பழங்களை கொள்வனவு செய்வதற்குமான வசதிகளை உருவாக்கும் நோக்கில் 200 மில்லியன் ரூபா செலவில், யாழ்ப்பாணம் மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் 20.03.2022 அன்று காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சஷீந்திர ராஜபக்ச அவர்களினதும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினதும் அழைப்பின்பேரில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், குடாநாட்டு விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாகும்.