யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் "யாழ். மாவட்டச் செயலக மடல்" இன்றையதினம் 2022.03.01 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியீட்டுக் குழு சார்பில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிற்கு வழங்கி வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இவ் யாழ்.மாவட்டச் செயலக மடலானது 2021 ஆண்டின் தை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரையிலான யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழ்செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனம் மற்றும் வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவன அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இக்குறித்த கலந்துரையாடலில் செவிப்புல வலுவிழந்தோர் நிறுவன பிரதிநிதிகளால் மாவட்ட அரசாங்க அதிபரிடம் "கடந்த காலங்களில் தமிழ் சைகைமொழி எவ்வித இடையூறுமின்றி கற்பிக்கப்பட்டதெனவும் தற்போது இத் தமிழ் சைகைமொழியை கற்பதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதோடு, யாழ். அரச அதிபரின் ஆளுகைக்குட்பட்ட சைகைமொழி மொழிபெயர்ப்பாளர்களிற்கான தமிழ் சைகைமொழி பயிற்சி நெறியினை நடாத்துவதற்கும், அதற்கான விண்ணப்ப படிவங்களை அரச அதிபரின் ஊடாக பெறவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வு மாவட்ட சாரண ஆணையாளர் அவர்களின் தலைமையில் 23.02.2022 அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டதுடன், கொழும்புத் தலைமைக் காரியாலய சாரண ஆணையாளர்கள் திரு.அப்துல் முகஜித், திரு. அசோக்குமார் மற்றும் மாவட்ட சாரணர் ஆணையாளர்கள் மற்றும் உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர்கள், அதிபர்கள், பெற்றோர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், விருதுபெறும் சாரண மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து இணையவழி நிகழ்நிலையில் நேரலை ஊடாக சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

எதிர்வரும் மார்ச் 11,12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 28.02.2022 காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில்,தற்போதுள்ள கொரோனா இடர் நிலையில் உற்சவத்தில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை, நீர் வழங்கல் வசதி, சுகாதார ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள் , உணவு ஏற்பாடுகள், உள்ளக பாதுகாப்பு ஏற்பாடு ,ஒளி ஒலி வழங்கல் ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி ஏற்பாடுகள், படகு வசதிகள்,ஊடகங்களுக்கான அனுமதி உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

World Vision நிறுனத்தினால் சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "சமூக ஒருங்கிணைப்பை மீளமைத்தல் செயற்திட்டம்" தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (22) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இச் செயற்திட்டத்தில் பதினெட்டு சிறுவர் கழகங்கள் தெரிவு செய்யப்பட்டு சிறுவர்களை இனங்காணல், சிறுவர்களின் திறமைகளை வலுப்படுத்தல், தொழிற் பயிற்சிகளை வழங்குதல், சமூக மட்ட பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு பொருத்தமான தீர்வுகளை உருவாக்க வழிகாட்டுதல் ஆகியன மேற்கொள்ளப்படவுள்ளது.