வடக்கு நோக்கி செடி நாட்டுதல் - திட்டத்தின் யாழ்.மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகள் நேற்று 29.03.2022 காலை 9.18 மணிக்கு யாழ்.நகர் கிழக்கு சமுர்த்தி வங்கி அலுவலகத்தில் இடம்பெற்றன.
கொவிட் பெருந்தொற்று எல்லா நாடுகளிலும் சமூக, பொருளாதாரத் துறைகளில் பாரிய தாக்கங்கள் ஏற்படுத்திய நிலையிலும், இந்த நெருக்கடியிலிருந்து உருவான சவால்களை எதிர்கொள்வதற்காகவும், பசுமைச் சமூகப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கையை மாற்றுவதற்காக - அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத்திட்டத்திற்கமைய, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிநடத்தலிலும்,நிதி அமைச்சரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும்,நீர்ப்பாசன அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சரும், வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை வேலைத்திட்ட மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்கான தேசியக்குழுவின் தவிசாளருமான கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களின் வழிநடத்தலிலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யத்தக்க உணவுப் பயிர்களைக் கிடைக்கச்செய்து, இறக்குமதிக்கான மாற்றீடுகளின் உள்ளூர் உணவு உற்பத்தியினை அதிகரிப்பதற்கு முதலிடம் வழங்கப்பட்டு - தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைப் புரட்சியினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி ஆர்வமூட்டி, நேரடியாக பங்கேற்க நடடிவக்கை எடுக்கும் வகையில், “பசுமையான தேசம்” தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை - 2022 திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 29.03.2022 காலை 10 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம், பிரதேச மட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகளான பிறப்பு பதிவு செய்வதிலுள்ள பிரச்சனை, சிறுவர்களின் பாதுகாப்பு குறைபாடு , சிறுவர்களை வைத்து யாசகம் பெறுதல் அதிகரித்துள்ளமை, பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம், பாதுகாப்பற்ற கிணறுகள் மற்றும் குளங்களினால் சிறுவர்கள் இறப்பு, சிறுவர் மதுபாவனை, போதைப்பொருள் பாவனை, உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவிட வசதிகளின்மை ஆகியன தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, எதிர்காலத்தில் இப் பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (24.03.2022) காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட காணிப்பயன்பாட்டு வலயமாக்கல் தயாரித்தல் செயற்திட்டத்தின்(2021)வரைபு திட்டத்தில் பங்குதாரர்களின் கருத்துக்கள் பெறப்பட்டதோடு, மேலும் காணிகளை குத்தகைக்கு வழங்குதல், மருதங்கேணி J/428 பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தை அதன் சிறப்புக்களின் அடிப்படையில் காணிப்பயன்பாட்டு வலயமாக்கல் வரைவு மாதிரி தொடர்பான விடயங்கள், சுரமுகி கங்கா திட்டம், ஒரு லட்சம் காணித்துண்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பிரித்து வழங்குதல் ஆகியன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் சிறுவர் இல்ல மேற்பார்வை தொடர்பான மாகாண மட்டக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.03.25 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது " சிறுவர்கள் பல்வேறுபட்ட காரணங்களால் சிறுவர் இல்லங்களை தஞ்சமடைந்துள்ளார்கள். இச் சிறுவர்களை நெறிப்படுத்தி சமூகத்தில் ஆளுமைமிக்கவர்களாக மாற்றுதல் வேண்டும். அத்தோடு சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களிற்கு போதிய பாதுகாப்பினை வழங்குவதோடு கல்வி, கலாசாரச் செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துதல் வேண்டும் அத்தோடு சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை கண்காணிப்பது நுட்பமான பணியாகும்" எனவும் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் இனிமையான பயணம் எனும் தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து பொதுப்போக்குவரத்து பேரூந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.03.2022) காலை ஒன்பது மணிக்கு யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வில் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், முன்னாள் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரும், தற்போதைய தேசிய பெண்கள் குழு உறுப்பினருமான திருமதி. இமெல்டா சுகுமார் அவர்கள் கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் மற்றும் யாழ்.பேரூந்து நிலையத்தின் முகாமையாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.