நல்லூர் பிரதேச சபை உள்ளூர் அபிவிருத்தி ஆதரவுத்திட்டத்தின் கீழ் (LDSP) கைத்தொழில் அபிவிருத்தி சபை இணைந்து நடாத்தும் " அடிப்படை கணனிப் பயிற்சி" ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் மாவட்ட முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் திரு.சசிகரன், தொழில்முயற்சி ஊக்குவிப்பு முகாமையாளர் திருமதி. ர.சிவராணி மற்றும் கௌரவ தவிசாளர் (நல்லூர் பிரதேசசபை), வளவாளர்களாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.மேலும், இப் பயிற்சிநெறி 22.03.2022 ஆம் திகதியிலிருந்து 25.04.2022 வரை பதினைந்துநாட்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் புவி தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது " நிலையான வாழ்வியலுக்கு பொருத்தமான முதலீட்டை செய்வதில் விழிப்படையச் செய்தல்" எனும் நோக்கத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 25.04.2022 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கையில் வாழ்வியலுக்கான மூலதனங்களில் முதலீடு நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் கருத்தாடல் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 21.04.2022 பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எரிபொருள் பாவனை, சிறுபோகத்திற்கான பசளையின் தேவைப்பாடு, சமூக அமைதியின்மை தொடர்பான அறிக்கையிடல், மாவட்டத்தின் உணவு தேவைப்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் எவ்வாறு தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளல் தொடர்பான செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் 22.4.2022 காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மேலும், வளவாளர்களாக வைத்திய கலாநிதி DR.S.சிவதாஸ் , DR.A.வினோதா ஆகியோரினால் மாணவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய கருத்தமர்வு இடம்பெற்றது. அத்தோடு எதிர்காலச்செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையின் பொதுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.04.19 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையின் மூலம் பல்வேறுபட்ட திறமைகளை கொண்டவர்களை முன்னேற்ற வேண்டும். அத்தோடு இப் பேரவையானது கலைஞர்களின் பங்களிப்பின் ஊடாகவே உயிர்ப்புடன் இயங்க வேண்டும். மேலும் கலைஞர்களின் படைப்புக்களை ஆவணப்படுத்தல்களாக மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி. எஸ். சி. என். கமலராஜன், பண்பாட்டு பேரவையின் உப தலைவர் திரு.சோ.பத்மநாதன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணலினி விஜயரத்தினம் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.





