நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி ஆலய உயர் திருவிழா நடைபெறுவதற்கான சிறப்பான சேவையினை வழங்கும் பொருட்டான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 10.06.2022 காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்தரையாடலில் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை, அம்புலன்ஸ சேவை, கடற்போக்குவரத்து சேவை , படகுகள் அனுமதி , அரச மற்றும் தனியார் வீதிப்போக்குவரத்து சேவை, அவற்றுக்கான எரிபொருள் ஏற்பாடுகள், சுகாதாரம், மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, புனரமைக்கவேண்டிய வீதிகள், அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், மற்றும் ஊடகங்களுக்கான அனுமதி உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்திய அரசின் இலங்கை மக்களுக்கான இரண்டாம் கட்ட உணவுப்பொருட்களை கொண்ட புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இந்திய அரசின் இலங்கை மக்களுக்காக இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட அரிசிப்பொதிகள் உணவு ஆணையாளர் திணைக்களம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு 09.06.2022 காலை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் கிடைக்கப்பெற்றது. டைக்கப்பெற்ற 540,000 கிலோகிராம் அரிசி 11 பிரதேசசெயலக பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பகிந்தளிப்பதற்காக குறித்த பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
 
 
தெரிவு செய்யப்பட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுப்படுத்துவதற்காக தளபாடங்கள், உபகரணப்பொருட்கள் மற்றும் சுழற்சி முறைக்கடனுக்குரிய காசோலை வழங்குதல், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்திற்கான சந்தைப்படுத்தல் மேம்பாட்டிற்கான உதவிப்பொருட்கள் வழங்குதல் மற்றும் கட்டுமாணத்துறை சார்ந்த பொறி இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி நெறியின் அறிமுகநிகழ்வு (27) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுப்படுத்துவதற்காக தளபாடங்கள், உபகரணப்பொருட்கள் மற்றும் சுழற்சி முறைக்கடனுக்குரிய காசோலைகளை வழங்கி வைத்து கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய பங்காளி நிறுவனங்களின் அனுசரணையுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலைபேறான மீள்குடியேற்றம் மற்றும் மீள்ஒருங்கிணைவுக்கான விரிவுபடுத்தப்பட்ட உதவித்திட்டங்கள் ஊடாக வழங்கப்படும் உதவிகள் மூலம் தொழில்வாண்மையை விருத்தி செய்வதுடன் , வெளிநாடுகளுக்கு வேலைவாய்பிற்காக செல்பவர்கள் சட்டரீதியான அங்கீகாரத்துடன் தொழில்வாய்ப்பை பெறுவதற்கான திறன்களை விருத்தி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டுமென தெரிவித்தார். மேலும், கிடைக்கப்பெறும் இவ் உதவித்திட்டங்களூடாக சந்தர்ப்பங்களை உரியவாறு பயன்படுத்தி சவால்களை வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட பனை அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 07.06.2022 காலை 09.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் கருத்துதெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பனை அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், அதன் விரிவாக்கல் நடவடிக்கைகள் மற்றும் பெறுமதிசேர் வளங்களை பயன்படுத்தி அத்துறையில் வருமானம் ஈட்டும் வழிகள் மற்றும் அவற்றிற்குரிய சந்தைவாய்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்தார். மேலும், பனைசார் உற்பத்தி பொருட்களின் கேள்விக்கேற்ப நிரம்பல் போதாதுள்ளதாக சுட்டிக்காட்டியதோடு பனை சார் உற்பத்திகளை ஊக்குவிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இச்செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பிரதேச பனைசார் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளதாகவும் எமது பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பொருட்டு பனை வளங்கள் அழிக்கப்படுவதாகவும் இதனால் பனை உற்பத்தி சார் பொருட்கள் பார்வைக்குரிய காட்சிப்பொருளாக மாறி பனைசார் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தும் தன்மை நலிவடைந்து மக்கள் நவீனத்துவம் நோக்கி செல்வதாகவும் தெரிவித்தார்.எனவே பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை துறைசார் தரப்பினர் இனங்கண்டு முன்னெடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான மெச்சுரைகளையும், ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளையும் வழங்குதல் நிகழ்வானது அரசாங்க அதிபர் தலைமையில் (25) மாவட்டசெயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்ட நடைமுறைப்படுத்தலில் சிறப்பான அடைவு மட்டங்களை அடைந்த பிரதேச செயலகங்களிற்கான மெச்சுரைகளும், மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக ஓய்வூதியத்திட்ட நடைமுறைப்படுத்தலில் யாழ் மாவட்டமானது தேசிய ரீதியில் 1 ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. மேலும் தெல்லிப்பளை பிரதேச செயலகம் தேசிய ரீதியில் பணச்சேகரிப்பு, விகிதாசார அடிப்படை மற்றும் பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் 1ஆம் இடத்தினையும், கரவெட்டி பிரதேச செயலகம் பணச்சேகரிப்பில் 2ஆம் இடத்தினையும் பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் 3 ஆம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் பணச்சேகரிப்பில் 3ஆம் இடத்தினையும், பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் 2 ஆம் இடத்தினை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.