தேசிய சாரணர் தலைமைக் காரியலயத்தின் பணிப்பின் கீழ் யாழ்.மாவட்ட சாரணர் சங்கமானது தேசிய சாரணர் சேவை மாதத்தை முன்னிட்டு 03.08.2022 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் சாரணர் சேவை மாத அட்டைகளை குருளை சாரணர்கள், கனிஷ்ட சாரணர்கள், சிரேஷ்ட சாரணர்கள், பெண் சாரணர்கள் ஆகியோரிற்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
இச் சாரணர் சேவை மாத அட்டை செயற்திட்டமானது நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்படுவதோடு, இச் சேவையின் மூலம் திரட்டப்படும் நிதியானது சாரணர் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும், இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்.மாவட்ட சாரணிய ஆணையாளர் இ.தவகோபால் மற்றும் சிரேஷ்ட சாரணர்கள், கனிஷ்ட சாரணர்கள், பெண் சாரணர்கள்,குருளை சாரணர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
 

உணவுப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நிலைமையினை ஆராயும் நோக்குடனான ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 07.07.2022 காலை 9.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நிலைமையினை ஆராயும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் மாவட்ட அடிப்படையில் நேரடி கள ஆய்வினை மேற்கொள்ள ஐ.நா. உயரதிகாரிகள் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு விஐயம் செய்திருந்தனர்.இதன் போது யாழ் மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டதுடன், விவசாயம், கால்நடை,மீன்பிடி மற்றும் போசாக்கு சம்மந்தமான தற்போதைய நடைமுறைப் பிரச்சனைகளான இரசாயன உரப்பற்றாக்குறை, எரிபொருள், விதைத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு, சந்தைப்படுத்தல் மேற்கொள்ளமுடியாமை மற்றும் கால்நடைகளின் உணவின் விலை அதிகரித்தமை மற்றும் போசாக்கு மட்டம் குறைவடைந்தமையும், மீன்பிடிக்கான எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், அண்ணளவாக 20 வீதமான பாடசாலை மாணவர்களின் போசாக்குமட்டம் குறைவடைந்துள்ளதாகவும், சமுர்த்திப் பயனாளிகளின் விபரம் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய உணவுப்பாதுகாப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்ட காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து கிளிநொச்சி முறிகண்டி புகையிரத நிலையம் வரையிலான "யாழ். ராணி" புகையிரத சேவை இன்றையதினம் காலை (2022.07.11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட புகையிரத நிலையத்தில் நடைபெற்ற இவ் உத்தியோகபூர்வ ஆரம்பநிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், அனுராதபுர பிரதேச போக்குவரத்து பொறுப்பதிகாரி பி.என்.என்.விசுந்த, யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன், கடற்தொழில் அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதி ருசாங்கன் மற்றும் யாழ்.நகர இராணுவ கட்டளைத்தளபதி, புகையிரத நிலைய அதிபர்கள், புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
"யாழ்.ராணி" புகையிரத சேவையானது காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி முறிகண்டி புகையிரத நிலையத்திற்கு சென்றடையுமென மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், இப் புகையிரத சேவையானது உரிய நேர அட்டவணையின்படி தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதோடு, நாளாந்த கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள், தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தற்போதுள்ள அசாதாரணசூழலில் நன்மைபெறக்கூடியதாகயிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு Google Form (Click here to register) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறித்த இணையதளத்தினை நேரடியாகவோ, இணைக்கப்பட்டுள்ள QR CODE இனை பயன்படுத்தியோ தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும்.

எரிபொருள் கிடைக்கப்பெறும்போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம் என்பன பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அறிவிக்கப்படும். பொதுமக்கள் குறித்த நேரத்தில் தங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

கிராமமட்டங்களில் சிகரட்,மதுசாரம் உட்பட ஏனைய போதைவஸ்துக்கு செலவாகும் தொகையை குறைத்து தற்பேதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு மக்களை வலுப்படுத்துதல் தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 23.06.2022 காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிராம மட்டத்திலான போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்தின் முக்கியத்துவம், நிலைபேறான செயற்திட்டத்தின் முக்கியத்துவம், கிராம மட்டங்களில் ஆரம்ப மதிப்பீடுகள் மேற்கொள்வதற்கான நுட்பங்கள், வழிமுறைகள், கிராம அபிவிருத்தியில் போதைப்பொருள் பாவனையின் ஆதிக்கம், கிராமிய தகவல்களை திரட்டிக்கொள்ளல், ஆரம்ப கட்ட செயற்பாட்டினை திட்டமிடல் என்பன தொடர்பாக குறித்த செயலமர்வு இடம்பெற்றது.
மேலும், இச்செயலமர்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக போதைப்பொருள் பாவனை காணப்படுவதோடு பல சவால்களுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தடுப்புமுயற்சிகளில் ஈடுபடவேண்டியுள்ளது. அத்தோடு சமூகமட்டத்தில் இதன் தாக்கம் அதனை எவ்வாறு வெற்றி கொள்வது போதைப்பொருள் பாவனைக்குள்ளானவர்களை அதிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு உளமாற்றத்தை ஏற்படுத்தல், அவர்களை சமூகமட்டத்தில் குடும்பம் மற்றும் சமூகத்தோடு இணைத்தல் தொடர்பாக எடுத்துக்கூறினார். மேலும் தனி மனித முயற்சியினால் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டியதுடன் அனைவரும் இணைந்தே போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்த முடியுமென தெரிவித்தார்.