
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு நிகழ்வு கழகத் தலைவர் செல்வி உ. தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் 26.12.2024 பி.ப 02.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபரும் நலன்புரி கழகத்தின் போசகருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் தொடர்பாக அனுபவப் பகிர்வினை உத்தியோகத்தர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

அனர்த்ததின் போது இறந்தவர்களை நினைவு கூருவதோடு பாதிக்கப்பட்டவர்களிற்கு நல்லாசி வேண்டும் முகமாக, மார்கழி 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் தேசிய ரீதியாக நினைவு கூரப்பட்டு வருகின்றது. அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் 26.12.2024 காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி, சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
சர்வமத ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வும் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா அவர்களின் தலைமையுரையுடன், அரசாங்க அதிபரால் சிறப்புரையாற்றப்பட்டது.
அரசாங்க அதிபர் தமதுரையில், இதே தினத்தில் 20 ஆண்டு பின்னோக்கிச் செல்லும் போது இலங்கை தேசம் உட்பட பலநாடுகள் சுனாமி ஆழிப்பேரலை காரணமாக பாரதூரமான இழப்புக்களை சந்தித்த நாளாகும் எனவும், இலங்கையில் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டார்கள் எனவும், எமது மாவட்டத்தில் 1,005 பேரை சுனாமி ஆழிப்பேரலை காவுகொண்டுள்ளது எனவும், பாரியளவு சொத்தழிவுகள் ஏற்பட்டது எனவும், அதில் குறிப்பாக முழுமையாக 4,391 வீடுகளும், பகுதியளவில் 1,182 வீடுகளும் சேதமடைந்திருப்பதனை புள்ளிவிபரங்கள் தெரிவித்தாலும், அதற்கப்பால் இன்னமும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீளமுடியாத துயரத்தில் உள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும், மருதங்கேணியில் மேற்படி சுனாமி ஆழிப்பேரலக்குப் பின்னரான நிலமைகளை நேரடியாக கண்டதாகவும், இறந்தவர்களின் உடல்களையும், மரண ஒலங்களைக் கேட்டதாகவும், இது இன்று வரை ஜீரணிக்க முடியாத சம்பவமாகவுள்ளதாகவும் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இனிமேலும் இவ்வாறு நிகழாமலிருக்க விழிப்புணர்கள் தேவை என்ற செய்தியினை சர்வதேசத்திற்கு சுனாமி ஆழிப்பேரலை ஏற்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாமலிருக்க முன்னாயத்த பொறிமுறையினை அனைவரும் சேர்ந்து எடுத்து பொறுப்புக் கூறுபவர்களாக இருத்தல் வேண்டும் எனத் தெரிவித்தார்.
சுனாமி முன்னாயத்தம் தொடர்பான விழிப்புணர்வு காணோளி காட்சி ப்படுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.

சிறிய மற்றும் நடுத்தர அவிலான வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடாத்தவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (23.12.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் செயலமர்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களின் கடமைகள் திருப்திகரமாகவுள்ளதாகவும், மனித வாழ்க்கைக்கு பொருளாதாரவிருத்தி முக்கியமானது எனவும், இத் திட்டத்தின் மூலம் பல குடும்பங்களின் வாழ்க்கை மென்மேலும் ஒளிமயமாகும் எனக் குறிப்பிட்டதுடன், சரியான பயனாளிகளை தெரிவு செய்வது உத்தியோகத்தர்களின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்கும் திட்டத்தில் அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 09 மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் உள்ளடங்கப்பட்டுள்ளது. இச் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,050 முயற்சியாளர்கள் ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளார்கள்.
இச் செயலமர்வில் விசேடமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகர் திரு. உபாலி தரணகம மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட ஆய்வாளர் திரு. நாமல் வீரசேன ஆகியோர் பங்குபற்றி உத்தியோகத்தர்களுக்கு பயனாளிகளை எவ்வாறு தெரிவு செய்வது தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினார்கள்.
சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு. தி. தனஞ்சயன் மற்றும் மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.


யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக இன்று பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் மானந்த யஹம்பத் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்
(23.12.2024) பி. ப. 04.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் உதவி மாவட்ட செயலாளருமான செல்வி உ.தர்சினி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (17.12.2024) பி. ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது .
நத்தார் தீப ஔியூட்டலுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் போசகருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, ஆசியுரையினை சுண்டுக்குளி சென்ஜோன்ஸ் ஆலய முகாமைக்குரு வணக்கத்திற்குரிய J.ஸ்ரிபன் ஜெபச்செல்வன் அவர்களும், கிறிஸ்துமஸ் செய்தியை பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் அவர்களும் வழங்கினார்கள்.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நலன்புரிச் சங்கத்தின் இவ் ஔி விழா ஒழுங்கமைப்பு எளிமையாகவும், சிறப்பாகவும் உள்ளமைக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன்,இந்து, கிறிஸ்தவம் ,பௌத்தம், இஸ்லாம் ஆகிய எல்லா மதங்களின் நிகழ்வுகளும் ஔியை போற்றுவதாகவும்ஏற்றுவதாகவும் மேம்படுத்தாவதாகவும் அமைந்திருப்பதால், அரச பணியாளர்கள் என்ற ரீதியில் எமது நோக்கமும் மற்றவர்கள் வாழ்வில் ஔியூட்டுவதாக இருக்க வேண்டும் எனவும் அந்த வகையில் இறைவன் எல்லோரையும் வல்லமை பொருந்தியவர்களாக படைத்திருக்கிறாா் எனத் தெரிவித்ததுடன், எமது பணியும் மக்கள் நலன் சாா்ந்த விடயங்களையும் அவர்கள் தேவைப்பாடுகளையும் நிறைவேற்றுவதாகவும் இருக்கும் போது அதன் பிரதிபலிப்பு எங்கள் வாழ்விலும் ஏற்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் சிறுவர்களின் வரவேற்பு நடனம், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் கரோல் கீதங்கள், பாடல், நாடகம் ,பேச்சு மற்றும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், நத்தாா் தாத்தா வருகையுடன் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு கிறிஸ்மஸ் நத்தார் இசையுடன் விழா சிறப்பாக இனிதே நிறைவு பெற்றது.
மேலும் குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.





