பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (11.12.2024) மு. ப 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களை ஏற்று தற்துணிவின் அடிப்படையிலும் செயற்பட்ட மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களையும் பாராட்டுவதாகவும், குறிப்பாக இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் தொடர்பாக ஏற்பட்ட சாவல்களுக்கு மத்தியிலும் கடும் முயற்சிகள் எடுத்துவருவது எமது இளைஞர் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான விடயம் எனத் தெரிவித்ததுடன், அவ் உபகரணங்களின் பாவனை தொடர்பாக பிரதேச செயலக ரீதியான கண்காணிப்பு அவசியமானது எனக் குறிப்பிட்டதுடன், வேலைத்திட்டங்களில் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிபர குடிசன தொகைமதிப்பிடும் கணிப்பீட்டில் காரைநகர், வேலணை, சங்கானை மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்கள் முறையே இதுவரை பூர்த்தி செய்துள்ளதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, நலன்புரி நன்மைகள் (அஸ்வெசும) தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், அஸ்வெசுமத் திட்டத்திற்குப் பொறுப்பான மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (11.12.2024) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள்,வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த வர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட போதும் பயிர் அழிவு மற்றும் கால்நடை இழப்புக்கள் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், அவை தொடர்பான துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள பிரதேச செயலாளர்கள் ஊடாக பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் வெள்ள நீர் வீதிகளில் தேங்கியமைக்கு வீதிகளின் அமைப்பு முறைகள், மதகுகள் போன்றவை அமைத்ததில் சரியான ஆலோசனைளைப் பெற்றுக் கொள்ளவில்லை எனப் பல முறைப்படுகள் கிடைக்கப் பெற்றதால் இதற்கான பொறிமுறை உருவாக்குவதற்கு பிரதேச செயலக ரீதியாக கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்யுமாறு கோரியதுடன்,பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய உத்தியோகத்தர் மற்றும் துறைசாா் உத்தியோகத்தர்கள் ஊடாக
வெள்ள அழிவு பயிர்களின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு பிரதேச செயலாளர்களை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும் வங்கிகளால் வழங்கப்படும் விவசாய கடன்கள் பற்றிய தெளிவூட்டல்கள், காப்புறுதி, 2024 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண, மாவட்ட விவசாய திட்டங்கள், வெண்முகுது தாவரதத்தி, கபிலத்தத்தி ஒருங்கிணைந்த பீடைக்கட்டுப்பாடு மற்றும் முற்காப்பு நடவடிக்கை என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பதில்விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.எஸ். ஜே. அரசகேசரி, கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதிநிதிகள், வங்கி மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களைச் சாா்ந்த பங்குதார்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.12.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பால்நிலை வன்முறையினால் பாதிக்கப்பட்டோருக்கான சேவையினையும் மற்றும் முற்தடுப்பு நடவடிக்கைகளை வழங்குவதனை நோக்காகக் கொண்டு குறித்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி என்.எச்.எம். டபிள்யூ.டபிள்யூ. நில்மினி ஹேரத் அவர்கள், பணிப்பாளர் திருமதி. இரேஷ தர்மசேன அவர்கள்,UNFPA ஆலோசகர் செல்வி. உதேனி தேவப்பெரும ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட , பிரதேச மட்டத்தில் ரீதியாக பெண்கள் வன்முறைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும், பால்நிலை அடிப்படையிலான தாக்கம் ஓர் பிள்ளையின் கல்வி , விளையாட்டு, கலாசாரம் போன்ற அனைத்து விடயங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் இவ் வன்முறையை தடுக்க பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், அனைத்து பிரதேச செயலக துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் இணைந்து பிரச்சனைகளை தீர்க்க ஒருமித்து முயற்சி எடுக்க வேண்டும் எனவும், இதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பும் அவசியமானது எனவும் கூறினார்.
மேலும் அமைச்சின் மேலதிகச் செயலாளர் மற்றும் பணிப்பாளர் கொழும்பிலிருந்து வருகை தந்து கரிசனையோடு இக் கலந்துரையாடலில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களைச் சாா்ந்த பங்குதாரர்கள் பங்களிப்பு, இவ் வன்முறைகளை தடுப்பதற்கான வழிகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரினால் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்காக 15 மடிக் கணினிகள் (Laptop) அரசாங்க அதிபரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளவளப் பிரிவின் வைத்திய அதிகாரி மற்றும் நட்பு நிலையத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகளின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சாா் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும், இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதன்மைச் செயலாளர் வினாவிய போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வார காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் போல் எதிர்காலத்தில் ஏற்படாவண்ணமிருக்க சீரான வடிகாலமைப்பு முறைகளின் அவசியம் பற்றி தெரிவித்த அரசாங்க அதிபர், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் இது வரை ரூபா.50 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டது எனவும் இதில் சமைத்த உணவு வழங்கல் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் என்பவற்றிற்காக ரூபா 49 மில்லியன் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ரூபா 1 மில்லியன் உடனடி அனர்த்த தணிப்பு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்ததுடன், எமது அரசாங்கத்திடம் மாவட்ட த்திற்கான தேவைப்பாடுகளை முன்வைத்த போது, நாம் கோரிய நிதி ஒதுக்கீட்டினை சம்பந்தப்பட்ட அமைச்சு விரைவாக விடுவித்தமையானது மகிழ்ச்சியான விடயம் எனவும் அரசாங்க அதிபரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
மீள்குடியேற்ற நிலவரங்கள், அஸ்வெசுமத் திட்டத்தில் பயனாளிகள் தெரிவு முறைமை, வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் விபரங்களை அரசாங்க அதிபரிடம் முதன்மைச் செயலாளர் கேட்டறிந்து கொண்டார். இதன் போது, யாழ்ப்பாண மாவட்ட த்திற்கான வீடமைப்புத் திட்டத்தின் தேவைப்பாடுகளையும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன் மேலும், மீள்குடியேற்ற வேலைத் திட்டங்கள் முன்னேற்றகரமாக நடைபெற்று வருவதாகவும், நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த காணியற்ற குடும்பங்களுக்கு காணி அரசாங்கத்தின் நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்டு வீடமைப்புத் திட்டமும் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன், ஒரு நலன்புரி நிலையத்தில் மாத்திரம் இரண்டு குடும்பங்களே தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கும் காணிக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இம் மாத இறுதிக்குள் அவ் ஒரேயொரு நலன்புரி நிலையமும் மூடப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரித்தானிய தூதரகத்தின் அலுவலர் செல்வி. ப்ராக் வேர்தூஸ் அவர்களும் உடனிருந்தார்கள்.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்
இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் 10.12.2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 03.00 மணி வரை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந் நடமாடும் சேவையினை அரசாங்க அதிபர் அவர்களுடன் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி. நில்மினி ஹேரத் அவர்களும், பணிப்பாளர் திருமதி இரேஷ தர்மசேனா அவர்களும் மற்றும் UNFPA நிறுவனத்தின் ஆலோசகர் செல்வி. உதேனி தேவப்பெரும அவர்களும் அவதானித்ததுடன், பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழை களை பயனாளிகளுக்கு வழங்கியும் வைத்தார்கள்.
இன்றைய நடமாடும் சேவையில் காலங்கடந்த பிறப்பு பதிவு 52 சிறுவர்களுக்கும், உத்தேச வயதுப்பத்திரம் 06 பேருக்கும், பிறப்புச் சான்றிதழ் திருத்தம் 14 பேருக்கும், இறப்பு பதிவு 04 பேருக்குமாக 76 பயனாளிகள் பயனடைந்தார்கள்.
இவ் நடமாடும் சேவையில், வட மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா, மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.






