யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடலானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (27.11.2024) பி. ப 03.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், வெள்ளப் பாதிப்புக்குட்பட்டுள்ள பகுதிகளை தாம் நேரில் சென்று பாா்வையிட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டமிட்டு கணிசமான மாற்றங்களை மேற்கொள்ள அனைவரதும் ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

மேலும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், இன்றைய நிலையில் மாவட்டத்தை வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்க அனைவரதும் ஒருங்கிணைந்து செயற்பட ஒத்துழைப்பினை நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன் அவர்களாலும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா அவர்களாலும் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பாகவும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாகவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பனை அபிவிருத்தி சபைத் தலைவர், முப்படைகளின் அதிகாரிகள், துறைசாா் திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4

 

1

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய (27.11.2024) பி. ப 03.00 மணி நிலவரப்படி 8,460 குடும்பங்களைச் சேர்ந்த 29,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 103 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 40 பாதுகாப்பு நிலையங்களில் 831 குடும்பங்களைச் சேர்ந்த 2,883 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2

யாழ்ப்பாண மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (19.11.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் ஏற்கனவே கிராம ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 70 புலம்பெயர் தொழிலாளர் சங்கங்கள் காணப்படுவதாகவும் அதன் வெளிப்பாடாக மாவட்ட மட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதலை நோக்கமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் நடைபெறுவதாகவும் தெரிவித்தாா். மேலும் வெளிநாடுகளுக்கு செல்வோா் அதிகமாகக் காணப்படுவதாகவும் உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தல் குறைவாகவே உள்ளதெனவும்
இதன் நோக்கத்தை சரியான முறையில் அடையாளப்படுத்தி நலன்சாா் விடயங்களை செயற்படுத்துவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்ததோடு , புதிதாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தாா்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ,மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோத்தர் ,
பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ,பிரதேச செயலக புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்கள், வெளிநாடு செல்லவுள்ள நபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும், பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், அனர்த்த ஆபத்து காரணமாக வதிவிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருப்போருக்கு சமைத்த உணவு வழங்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபர் அவர்களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
1
ஏசியன் பவுன்டேஷன் பிரதிநிதிகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (18.11.2024) பி. ப 03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் ஏசியன் பவுன்டேஷனால் நடைமுறைப்படுத்திவரும் சிறு நடுத்தர முயற்சியாண்மை திட்டங்களின் முன்னேற்றங்கள் மேம்படுத்தல்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன், ஏசியன் பவுன்டேஷன் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி. டினிஷா டி. சில்வா விக்ரமநாயக்க, அலுவலக முகாமையாளர் ஹயசின்ந் ரஷாக், திட்ட இணைப்பாளர் திரு. சுபாகரன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. ந. தயாபரன் ஆகியோா் பங்குபற்றினார்கள்.
 
1 2 3