மூன்றாம் காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.10.2024) பி. ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இக் கூட்டத்தின் நோக்கமானது நிதி முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதும், நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதாகவும் தெரிவித்ததுடன், இவ் மீளாய்வுக் கூட்டத்தில் நிதி முன்னேற்றங்களைஆராய்ந்தவகையில் திருப்திகரமாகவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
இலங்கையின் 15 வது குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பின் இறுதிப் பகுதியான கணக்கெடுக்கும் கட்டத்தின் ஓர் அங்கமாக, யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கணக்கெடுக்கும் பணியானது இன்றைய தினம் (16.10.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தொகை மதிப்பு ஆணையாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் கோப்பாய் பிரதேச செயலக பிரிவிலுள்ள கோப்பாய் வடக்கு கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலாளர் திரு. எஸ். சிவஸ்ரீ, மாவட்ட புள்ளிவிபரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ம. வித்தியானந்தநேசன், கோப்பாய் பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தர் மற்றும் கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
 
1 2 3
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வு மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (15.10.2024) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் 33 சமுர்த்தி வங்கிகள் இயங்கிவருவதாகவும், சமுர்த்தி வேலைத்திட்டத்திலிருந்த நிவாரண வழங்கல் விடுவிக்கப்பட்டு நலன்புரி நன்மைகள் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிகளின் நுண்நிதி செயற்பாடுகள் தொடர்பாக எழும் ஐயவினாக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், தற்போது எமது யாழ்ப்பாண மாவட்டமானது சமுர்த்தி வங்கிச் செயற்பாடுகளில் தேசிய அளவில் முன்னணி வகிப்பதாகவும் அதற்கு சமுர்த்தி சார்ந்த அலுவலகர்களின் ஒத்துழைப்பிற்கு தமது நன்றியினையும் தெரிவித்தார். மேலும் மக்களின் வறுமையினை குறைத்து அவர்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் மேன்மேலும் வினைத்திறமையாக செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள் (தலைமைப்பீடம்), வங்கி முகாமையாளர்கள், மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி வடிகாலின் நிலைமை தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து மானிப்பாயில் அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (15.10.2024) காலை 10.00 மணிக்கு நேரடியாக பார்வையிட்டார்.
மேற்படி இரு வடிகால்களினையும் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடன் அரசாங்க அதிபர் பார்வையிட்டு, டெங்கு நோய் வராமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள், மழைநீர் தேங்கி நிற்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள், வடிகாலின் நீரோட்டம் மற்றும் துப்பரவு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து, எடுக்க வேண்டிய நடிவடிக்கைகளை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஊடாக எடுப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும் இதன் முன்னேற்றங்களை அடுத்துவரும் இரண்டு வாரங்களில் டெங்கு கட்டுப்பாடுக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
இக் களஆய்வில் நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், நல்லூர் மற்றும் மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாாிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியிலாளர், யாழ் மாநகரசபை ஆணையாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர், நல்லூர் மானிப்பாய் பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாநகர சபை, மற்றும் பிரதேச சபைகளின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
 
1 2 3 4 5
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய நல்லிணக்கக் கொள்கை மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் செயற்றிட்டம் உருவாக்கலுக்கான ஆலோசனைச் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.10.2024) காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் இன,மத, மொழி , சமூக,பொருளாதார , அரசியல் சமத்துவத்தை பேணுவதற்காக இவ் அலுவலகம் செயற்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றம் ஊடாக சட்டம் அமுல்படுத்தப்பட்டது எனவும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எல்லோரும் எவ்வித வேறுபாடுகளின்றி சமமானவர்கள் என்ற நோக்கத்தை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டாா். மேலும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது தேசிய ஒற்றுமையினை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
இச் செயலமர்வில் வடக்கு மாகாணத்தின் 05 மாவட்டங்களில் - ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 05 பிரதிநிதிகள் வீதம் பங்குபற்றினார்கள்.
இச் செயலமர்வில் மதகுருமாா், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் பிரதிப்பணிப்பாளா், உதவிப்பணிப்பாளர்கள், வடமாகாண தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் வடக்கு மாகாண மாவட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5