1
 
யாழ்ப்பாணத்திற்கும் மாத்தளைக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தல் நிகழ்விற்காக மாத்தளையிலிருந்து வருகைதந்த இளைஞர் யுவதிகள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு இன்று பி.ப 01.00 மணிக்கு வருகை தந்தனர்.
வருகை தந்தவர்களுக்கான அறிமுக நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இந் நிகழ்வானது இனங்களுக்கிடையில் நல்லெண்ணத்தினை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாகவும், மாத்தளை மற்றும் யாழ்ப்பாணத்திற்கிடையிலான கலாசாரம், இன மற்றும் மதங்களை ஒன்றிணைக்கப்படும் நிகழ்வாக அமைத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இவ் விஜயம் மொழிமூலம் கலாசார ஒருங்கிணைப்பை வளர்த்து மக்கள் குழுக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டு அமைந்தது.
இவ் நல்லிணக்க விஜயத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் (தேசிய மொழிகள்) மேலதிகச் செயலாளர் திரு.எம்.எல். கம்மம்பில மற்றும் நிர்வாக அலுவலர் திருமதி.ஏ.ஏ. எப். நதிமியா, யாழ்ப்பாண உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, தேசிய மொழிகள் மாகாணப் பொறுப்பதிகாரி திரு. ந. உமாநாத், அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மற்றும் மாத்தளை மாவட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டார்கள்.
 
 2 3 4 5
சாவகச்சேரியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (01.12.2024) பல்வேறு நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
சாவகச்சேரி யில் அமைந்துள்ள பாதுகாப்பு நிலையங்களுக்கு அரசாங்க அதிபர் சென்று அங்குள்ள மக்களுக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை கேட்றிந்து கொண்டார். மேலும், இதுவரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும், தனிநபர்களாலும் உணவுகள் வழங்கப்பட்டதனை கேட்டறிந்த அரசாங்க அதிபர் அவர்கள், நாளையிலிருந்து அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 03 தினங்களுக்கு சமைத்த உணவு வழங்குமாறு சாவகச்சேரி பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
 
1 2 3
1
 
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக 2024.11.28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கெளரவ போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கெளரவ அமைச்சர் அவர்களுக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதியிடப்பட்ட 2024.11.28 ஆம் திகதிய கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.
மூளாய் முங்கோடை மற்றும் வேரம் ஆகிய கிராமங்கள் வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டமைக்கு மழை நீரோட்டமானது மூளாய் நெடுங்குளத்திற்கு போகாமைக்கான காரணத்தினை அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்று (30.11.2024) நேரில் ஆய்வு செய்தார்.
இதன் போது கால்வாய் அல்லது வடிகால் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தினை கண்டறிந்து முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு சங்கானைப் பிரதேச செயலாளரை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
 
1 2  4 3

1

யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (28.11.2024) பி. ப 03.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.

இவ் விசேட கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத் தூயகொந்த அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளை ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனக்குறிப்பிட்டு, அதிமேதகு சனாதிபதி அவர்கள் இயற்கை அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மருந்துகள் இடையூறு இன்றி சீராக விநியோகிக்க திறைசேரி விசேட ஒதுக்கீடுகளை காலதாமதமின்றி ஒதுக்க அறிவுறுத்தியுள்ளார் எனவும், இயற்கை அனர்த்தத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று தீர்வுகள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் . மேலும், சகல மாவட்டங்களிலும் முப்படையினர் போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட க. பொ. த உயர்தரப் பரீட்சையானது டிசெம்பர் மாதம் 04 ஆம் திகதியிலிருந்து நடாத்த பரீட்சைத் திணைக்களத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணம் உட்பட அவ் மக்களுக்கு கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், டெங்கு நோய் மற்றும் ஏனைய தொற்றுநோய்கள் வராமல் தடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் மேலும் தெரிவிக்கப்பட்டது. அவர் மேலும் தெரிவிக்கையில் இயற்கை அனர்த்ததிலிருந்து பாதுகாக்க நிரந்தர தீர்வானது அனைவருடனும் இணைந்து காண வேண்டும் எனவும் இதற்கு முப்படையினரின் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பாகவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. பாதுகாப்பு படையினர், கடற்படையினர், விமானப் படையினர் மற்றும் பொலிசார் போதிய ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் துறைசார் திணைக்களத் தலைவர்களால் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியினைத் தெரிவிப்பதாகவும், பாதுகாப்பு நிலையங்களில் இல்லாமல் பாதிக்கப்பட்டு வீடுகளில் இருப்போர்கள் குறிப்பாக கடற்றொழி்லாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கும் உதவிகள் வழங்க ஒன்றிணைந்து நடவடிக்கைகள்மேற்கொள்வோம் எனவும், பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறையில் மின்கம்பங்கள் விழும் நிலையில் உள்ளதாகவும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி பாரிய சேதமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு துறைசார்ந்த திணைக்களங்கள் நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மழைகாலம் முடிவடைந்த பின்னர் கிணறுகளை சுத்தப்படுத்த படையினரின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதற்கு சட்டத்திற்கு மாறாக கட்டப்பட்ட கட்டடங்களும் காரணம் எனவும், அவற்றை அகற்ற நடவடிக்கைகளை மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எடுக்க வேண்டும் என்றும், எதிர்வரும் காலங்களில் வெள்ள அனர்த்தம் வராமல் இருக்க ஒன்றிணைந்து நடிவடிக்கைகள் எடுப்போம் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவோருக்கு நன்றியினைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு, முப்படைகளின் ஒத்துழைப்புக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.

இவ் விசேட கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் , வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. இ. இளங்கோவன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. ரி. என். சூரியகுமார், முப்படைகளின் உயர் அதிகாரிகள், வடமகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2 3 4 5