பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (21.10.2024) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த சனாதிபதித் தேர்தல் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்து, தபால் மூலமான வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுக்கள் மற்றும் உரிய ஆவணங்களை பொதியிட்டு விநியோகிக்கும் கடமையானது ஒரு குழுக்கடமையாகும் என்பதால் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்கள் வினைத்திறமையாக செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான
கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும் கடமையில் ஈடுபடவுள்ள பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.10.2024) பி.ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் சிரேஷ்ட வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. ரி. சி. ஏ. தனபால, பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. றுவான் குணசேகர, பிரதிப் பொலிஸ்மா அதிபர் (கிளிநொச்சி) திரு. சமந்த டி. சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. சிறிமோகனன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. டி. எல். ஏ. சூர்யபண்டார, பொலிஸ் அத்தியட்சகர் திரு. எம். எம். சந்தன ஹமகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் உதவித் தெரிவாட்சி அலுவலர் உட்பட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
இக் கலந்துரையாடல் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (18.10.2024) மு. ப 09.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைக்கு சிறப்பான ஒத்துழைப்பு வழங்கிய கிராம
அலுவலர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும் இக் கலந்துரையாடல் ஒரு பின்னூட்டலாகவே நடைபெறும் எனவும், சனாதிபதித் தேர்தல் கடமைகளில் கற்றுக் கொண்ட பாடங்களுக்கமைய நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் கடமைகளில் வினைத்திறமையாக பங்களிப்பினை வழங்குமாறும் கேட்டுக்கொண்டதுடன், கடந்த சனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் செல்லுபடியற்ற வாக்குகள் அதிகமாகவிருந்த காரணத்தினால் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை பிரதேச செயலக ரீதியாக வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கான ஒத்துழைப்பினையும் கிராம அலுவலர்கள் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் கிராம அலுவலகர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. லூ. சூரிய பண்டார அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (18.10.2024) மு. ப. 10.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. கி. அமல்ராஜ், யாழ்ப்பாண பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி திரு. சம்லி பலுசேன அவர்களும் உடனிருந்தார்கள்.

கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு / சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதால் இன்று (18.10.2024) நண்பகல் 12.00 மணியிலிருந்து 03 நாட்களுக்கு இப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அறிவித்துள்ளார்கள்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் பயணித்து சில இடங்களில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், மேலும் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறியத்தந்துள்ளார். மேலும், கனகர வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்திற்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.





