யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் இன்றைய தினம் (05.07.2024) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் ,பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்ட து .
மேலும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்காக 826 திட்டங்களுக்காக 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தில் அகழ்ந்த சுண்ணாம்புக்கல்லை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதற்கான அனுமதியைப் பெறுதல், பாடசாலை ஆரம்ப மற்றும் முடியும் நேரங்களில் கனரக வாகனங்கள் வீதியில் செல்வதை கட்டுப்படுத்தல் மற்றும் வீதி ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் வகையில் பெயர்ப்பலகைகளை பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தில் பொது மலசலகூடம் அமைத்தல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நயினாதீவு படகு விபத்து குறித்தும் அவ்வாறான விபத்து வரும் காலங்களில் நடைபெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், தற்போது அதிகரித்துவரும் வீதி விபத்துக்களுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு அதற்கு கையாளவேண்டிய நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் குறித்த அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டது.
மேலும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்ட நடவடிக்கைகள், விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டம், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுத்தல் மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இடப்பற்றாக்குறை சம்பந்தமான விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந் துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராஜா கஜேந்திரன், வடக்குமாகாண அமைச்சின் பிரதம செயலாளர் திரு.இளங்கோவன், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மற்றும் மாகாண அமைச்சின் திணைக்களத்தலைவர்கள், முப்படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பான தொழிலாளர் ஆட்சேர்ப்பு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சேவைகள் தொடர்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 2024.07.08 அன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் புலம் பெயர் மக்களின் அனுசரணையில் உதவித்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் வெளிநாட்டு பயணம் தற்போது இறுக்கமான சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டதாகவும் மாறியுள்ளமையால் அரச சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் , இது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு இலங்கை வேலைவாய்ப்பு பணியகம், பதிவு செய்யப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுகளில் தொழில் மற்றும் இலங்கை வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தொழில் மற்றும் இலங்கை வேலைவாய்ப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வளவாளராக கலந்துகொண்டு தெளிவூட்டல்களை வழங்கியதுடன் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் வதிவிட பிரதிநிதி திரு.அப்துள் ரகீம் சித்திக் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (04.07.2024) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து உலக உணவுத் திட்டத்தின் "Food for Assets" செயற்றிட்டத்தின் விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில்(நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய்) " Food for Assets" செயற்றிட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை செயற்படுத்தல் குறிப்பாக குளங்கள் கால்வாய்களை புனரமைத்தல் தொடர்பாகவும் செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேற்படி கலந்துரையாடலில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி திரு.முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் திரு.று.யு.சந்திரதிலக்க வீரசிங்க , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர் நியமனம் மற்றும் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி பிரிவுக்கான மேலதிக விவாகப்பதிவாளர் ஆகிய நியமனங்கள் 2024.07.08 அன்று யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் பிரதிப்பதிவாளர் நாயகம், உதவிப் பதிவாளர் நாயகம்,காணி மாவட்ட பதிவாளர் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சரவை அனுமதியுடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் முழுநேர பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உத்தியோக பூர்வமாக இன்றைய தினம் (2024.07.04) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதில் அரசாங்க அதிபருக்கான வரவேற்பு நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அவர்களுடைய தலைமையில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் இன்றைய தினம் காலை மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்டது.






