யாழ் மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கையில் வெண்முதுகு தத்தி மற்றும் கபிலத் தத்தி நோய்த்தாக்கம் வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்று (12.12.2023) மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருத்தமற்ற இரசாயன மருந்துகள் மற்றும் உரங்களின் பாவனை காணப்படுவதோடு, இயற்கை விவசாயத்தினை பின்பற்றுதல் மற்றும் தற்போதைய பொருளாதார பிரச்சினையினை மாற்றி சிறப்பாக கொண்டு செல்ல நவீன விவசாய முறைகளோடு கூடிய இயற்கை விவசாயத்தினையும் பின்பற்றி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டன.
மேலும், இயற்கை விவசாயிகளுக்கு தேவையான வசதிகள், உபகரணங்களை வழங்குதல் மற்றும் மண் வளப்பாதுகாப்பு ,உரம் பாவனையை குறைத்து குப்பை கூழங்களை பயன்படுத்தல்,விவசாயிகள் விவசாய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாய போதனாசிரியர்கள் கருத்துக்களை உள்வாங்குதல், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் விவசாய திணைக்களங்களோடு சிறந்த தொடர்பாடல்களை கொண்டிருத்தல் , சிபார்சு செய்யப்படாத மலிவான இரசாயனங்களின் பாவனை,காலாவதியான மருந்து பாவனை, சட்ட விரோதமான மருந்துகள் விற்பனை செய்தல், பயிர்ச் செய்கையின் போது பயிர்களுக்கு ஏற்படும் நோயினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், பூச்சிநாசினியை விசிறும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் உள்ளிட்டவை விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
வடக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று (01.12.2023) காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்காக பத்தாயிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான பயனாளிகள் தெரிவு மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வீட்டுத்திட்ட நிபந்தனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் சௌபாக்கிய அடுத்த ஆண்டுக்கான வேலைத்திட்டம் தயாரித்தல், மணல்அகழ்வு, வீட்டுத்தோட்டம், காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கைகள், கிராம சேவையாளர் அலுவலகத்துக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுநரின் செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் , பிரதேச செயலாளர்கள் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள், கௌரவ அமைச்சரின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்தும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்றைய தினம் (06.12.2023) காலை 10.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராசா, தினகரன் நாளிதழ் பிரதம ஆசிரியர் திரு.செந்தில் வேலவர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் திரு.சிவகெங்காதரன், சங்கவி பிலிம்ஸ் & சங்கவி தியேட்டர் பணிப்பாளர் திரு.Dr.துரைராசா சுரேஸ், வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு. தம்பிராசா சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும் இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அமைப்புக்களின் அங்கத்தினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தார் கள்.
இதில், மாற்றுத் திறனாளிகளின் நடனம், கவிதை, பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், சுயதொழில் முயற்சியாளர்களின் கௌரவிப்புகளும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி நிகழ்வு மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்க தலைவருமான திரு.இ.சுரேந்திரநாதன் தலைமையில் நேற்றைய தினம் (29.11.2023) பிற்பகல் 01மணிக்கு வேலணை துறையூர் ஐயனார் கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபரும், நலன்புரி சங்க போசகருமான திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபரும் உபபோசகருமான திரு.மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.கனகராஜா ஸ்ரீமோகனன் மற்றும் கௌரவ விருந்தினராக வேலணை பிரதேச செயலாளர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் உட்பட பதினைந்து பிரதேச செயலகங்களுக்கும் இடையில் நடைபெற்ற
அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும், தெல்லிப்பழை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், கரவெட்டி பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளன.
இதில், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.














