யாழ்ப்பாண மாவட்ட செயலக நான்காம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 09.12.2023 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும், இக் கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும், அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ்.சிவரூபன், தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜெயசேகர , தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் சுகந்தராஜ், உதவி கணக்காய்வு அத்தியட்சகர் P.பற்குணன், உள்ளக கணக்காய்வாளர் செ.ரமேஷ்குமார் மற்றும் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.


பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி அவர்கள் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 02 தங்கப் பதக்கங்களையும், 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமையை பாராட்டி (29.11.2023) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களினால் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் முன்பாக மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
இக் கௌரவிப்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.



பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) விழிப்புணர்வு சுவரொட்டி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு 24.11.2023 மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் எனும் தொனிப்பொருளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையான 16 நாட்கள் இச் செயற்பாட்டு வாரம் மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 28.11.2023 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில்,பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடு, சிறுவர் துஷ்பிரயோகம், பெற்றோரை இழந்த சிறுவர்களின் விபரங்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகள், பிரச்சனைகள், பிரதேச மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள், சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள், கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழுக்களின் செயற்பாடுகள், சிறுவர்களுக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொடுத்தல், சிறுவர் தொடர்பான பிரதேச மட்ட செயற்பாடுகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
அத்தோடு எதிர்வரும் மார்கழி மாதம் இருபதாம் திகதி மாவட்ட செயலகத்தில் சிறுவர்களுக்கான விசேட பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை பதிவுசெய்யும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள, உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக பிரதி பதிவாளர் நாயகம், பொலிஸார், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.


தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் ( 10) மு.ப 9.00மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வு நல்லாட்சி மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பாக மக்களின் தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவம் கருதி அரச அதிகாாிகளுக்கு காலத்துக்குக்காலம் விழிப்புணர்வூட்டும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது.
இதில் தகவல் சட்டம் தொடர்பான அறிமுகம், தகவல் சட்டத்தின் தகவல் உத்தியோகத்தர் , பெயர் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்களின் கடமைக்குரிய விஷேடமான உறுப்புரைகளை தெளிவுபடுத்தல், 2004/66 ம் இலக்க கட்டளை மற்றும் ஒழுங்குவிதிகளை தெளிவுபடுத்தல், தகவல் சட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளிற்கிணங்க ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடையாளங்காணல் தொடர்பான விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.
இச் செயலமர்வில் தகலறியும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்
பியதிஸ்ஸ ரணசிங்க , வெகுசன ஊடக அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர்களான உதானி வருசா விதான, றியாசா எம் நெளபர், எப்ரியல் இளையோர் அமைப்பின் தலைவர் ரவீந்திர டி சில்வா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், தகவல் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.









