யாழ் மாவட்ட செயலகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (2023.01.02) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலகம் முன்றலில் நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டுக்கான யாழ் மாவட்ட செயலகத்தினுடைய ஆரம்ப நிகழ்வானது "நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும் சத்தியப்பிரமாணம் செய்தல் போன்ற நிகழ்வுகளுடன் இனிதே ஆரம்பமானது.
இதன்போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் கடந்தகாலங்களில் ஏற்பட்ட கொவிட் தொற்றிடர் நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய நெருக்கடியான காலங்களில் எமது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மிகவும் வினைத்திறனாகவும் அர்ப்பணிப்பாகவும் சேவையாற்றியமைக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்ததுடன், இச் செயற்பாடுகளை சிறப்பான வழி நடத்தல்களை வழங்கி வழிப்படுத்திய முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
 
மேலும் , அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உருவான உணவுப்பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியமானதென தெரிவித்தார்.மேலும் அறிவு, திறன் மனப்பாங்குடன் சிந்தித்து செயலாற்றுவதன் மூலமும் வெற்றி அடையலாம் என்பதுடன் இவ் வெற்றி மூலம் பொதுமக்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் சேவையாற்றுவதே அரச உத்தியோகத்தர்கள் ஆகிய எங்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அரசாங்க அதிபரின் பிரிவுபசார விழா யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 30.12.2022 மு.ப 1.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் மாவட்ட அரசாங்க அதிபராக 31.12.2022 வரை மகத்தான சேவையை மக்களுக்கு நல்மனதுடன் ஆற்றி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று மாற்றலாகிச் செல்லும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் சேவை நலன் பாராட்டு மற்றும் பிரிவுபசார விழா சிறப்பாக நடைபெற்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்அவர்கள் மலர் மாலைகளும் பொன்னாடைகளும் அணிவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டாா்.

யாழ் மாவட்டத்தில் காணப்படும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை சுற்றுலா நோக்கில் சந்தைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 29.12.2022 பி.ப 1.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் நடைபெற்றது
சுற்றுலா நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதை மேம்படுத்தும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் சார்ந்த சுற்றுலா கையேடுகளை தயாரித்தல் அது தொடர்பான காணொளிகளை தயாரித்து வெளியிடுதல்,முக்கியமான இடங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் காட்சி கூடங்களை நிறுவுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களால் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு நினைவுப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் மாவட்ட செயலக கணக்காளருமான அ.நிர்மல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (29.12.2022 ) மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது .
நத்தார் தீப ஔியூட்டலுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு இறைவேண்டுதலுக்காக உரும்பிராய் தூய இம்மானுவேல் ஆலய அருட்தந்தை வணக்கத்திற்குரிய எஸ்.ஜனகன் அவர்களும் கிறிஸ்துமஸ் பிறப்புச் செய்தி பற்றிய உரையினை வழங்குவதற்காக பங்குத்தந்தை பரிபாலகர் சாட்டி சித்தாந்தரை மாதா திருத்தலத்தின் அருட்தந்தை வணக்கத்திற்குரிய மிக்கேல் ஜெகன்குமாா் கூஞ்ஞ அவர்களும் வருகை தந்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இயேசு பிரான் பிறப்பு மற்றும் அவர் கூறும் விடயங்களை வாழ்கைக்குரிய பாடத்துடன் இணைத்து மேம்பாடடைய வேண்டும் எனவும் உள்ளங்களில் மன இருளை நீக்கி தீப ஔியை ஏற்றி எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க வேண்டும் என்றும் அன்பு, அமைதி ,சமத்துவம், நீதி போன்ற மனித நேயப் பண்புகளை வளர்த்து மகிழ்ச்சிகரமாக வாழ வேண்டும் மேலும் 2023 ஆம் ஆண்டு மகிழ்ச்சியும் சுபீட்சமும் சமாதானமும் நிறைந்த மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் .

fairmed நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சமூக சேவை உத்தியோகத்தர்கள் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான வலுவூட்டல் திறன் விருத்தி மூன்று நாள் பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 29.12.2022 பி.ப 12.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது
பிரதேச மட்டத்தில் அங்கவீனமுற்ற நபர்களுக்காக சேவை புரியும் இவர்கள் கல்வி மற்றும் மனப்பாங்குடன் செயற்படுகின்றார்கள் இத்தகைய உத்தியோகத்தர்ளின் வலுவூட்டல் திறன் விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான பயிற்சி நெறிகள் அவசியமாக உள்ளது அந்த வகையில் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் முகமாக இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.