யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்கள் மரியாதை நிமித்தமாக நேற்று (19.01.2023) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும் விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்டனர்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நியமிக்கப்பட்ட திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் சர்வ மத தலைவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்ட பின்னர் இன்று (18.01.2023)காலை 10.20 மணிக்கு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு, மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் மங்கள விளக்கேற்றலுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
அரசாங்க அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போது இப்பதவி தனக்கு கிடைத்தமை ஓர் வரப்பிரசாதம் என்றும் அரச உத்தியோகத்தர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்தி பொது மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவைகளை சரியான முறையில் வழங்குவதோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் ஒருங்கிணைந்தும் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (17.01.2023) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
சுதந்திர தின விழா நிகழ்வுகள் யாழ்ப்பாண பழைய பூங்காவில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாண மாவட்ட செயலக முன்றலில் நடைபெறவுள்ளது. குறித்த சுதந்திர விழாவிற்கான ஒழுங்கமைப்புக்கள் தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.
குறிப்பாக கலாச்சார ரீதியிலான ஆரம்ப வரவேற்பு நிகழ்வுகள், வரவேற்பு நிகழ்விற்கான ஆரம்ப ஒத்திகை ஏற்பாடுகள்,வீதி ஒழுங்கமைப்பு, சாரணர் அணிவகுப்பு, மற்றும் தொடர்புடைய இதர விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (17.01.2023) பி.ப. 3.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) எஸ். முரளிதரன் , மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

முகாமைத்துவசேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் மூன்றிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சையில் 2019 (2021) சித்தியடைந்த உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களினால் (17.01.2023) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 12 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், ஸ்தாபன கிளை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்