யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் சகல மக்களிற்கும் இப் புதுவருடம் நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், சௌபாக்கியத்தையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்ததோடு, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு (2023.04.17) புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பான சேவையினை உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார். அத்தோடு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிஷேசத்தினையும் வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அரசாங்க அதிபரின் ஆசியுடன் கைவிஷேசத்தினை பெற்றுகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் நடாத்தப்பட்ட யாழ் பாரம்பரிய உணவுத் திருவிழா நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டாரத்தில் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வேறுபட்ட பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுய முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் நாற்பதிற்கும் மேற்பட்ட கூடாரங்களில் கூழ்வகைகள் , இலைக்கஞ்சி ,பானங்கள், பலகாரங்கள், தீன்பண்டங்கள் , விழாக்கால விஷேட உணவுவகைகள் மற்றும் பற்பல சுவையான பாரம்பரிய உணவு வகைகள் போன்றன ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன் விசேட நிகழ்வாக பாரம்பரிய இசையினை கேட்டு இன்புற்றிட இசை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகமும் இணைந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை சேவையை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (28.03.2023) மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறைச்சேவை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல், அதன் முக்கியத்துவம், எவ்வாறு பதிவு செய்வது, online மூலமாக எவ்வாறு பதிவுகளை மேற்கொள்வது, பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வியாபாரங்களுக்கான அனுகூலங்கள், பதிவு செய்யப்படாத சுற்றுலா வியாபாரங்களுக்கான சவால்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டன.
முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் முகமாக யாழ்.மாவட்ட செயலகத்தினால் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் வாராந்த சந்தை நடாத்தப்படுகிறது.
சமூகப் பாதுகாப்பு தொடர்பான மீளாய்வுக்கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் மற்றும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் (29.03.2023) பிற்பகல் 3.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள சமூகப்பாதுகாப்பு, போதைப்பொருள் பாவனை, வன்முறைகள் மற்றும் கால்நடைகள் கடத்தல் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டதுடன் 02.03.2023 ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு முன்னாயத்த கூட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர்களாலும் அப் பிரிவுகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்பட்டமை தொடர்பாக ஆராயும் முன்னேற்ற கூட்டமாகவும் இது அமைந்துள்ளது.
அத்துடன் இக்கூட்டத்தில் பிரதேச செயலகங்களில் இடம்பெறும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.மேலும் இக்கூட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை பயன்பாட்டால் வடமாராட்சி கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்றிலிருந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடற்படை அரண் ஊடாகவே கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.





