அரசாங்கத்தின் 2022/2023 பெரும்போக நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு 26.03.2023 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களினால் நல்லூர் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் 123282 குடும்பங்களுக்கு அரிசிப் பொதி பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. 28.03.2023ஆம் திகதி வரை 29901 குடும்பங்களுக்கு இவ் அரிசிப் பொதி வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுட்களுக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் முகமாக யாழ்மாவட்ட செயலகத்தினால் 02.04.2023 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் வாராந்த சந்தை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கே யாழ் மாவட்ட விவசாயத்துறை, கைத்தொழில் துறை சார் உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்யமுடியும் இதனூடாக உற்பத்தியாளர்களின் இடைத்தரகர்களுக்கான செலவீனம் குறைக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நுகர்வோர்களின் தேவைக்கேற்றவாறு உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அவர்கள் தமது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவதுடன் ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தை பின்பற்றி பயன்பெற விரும்பும் முயற்சியாளர்கள் தமது பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் அத்துடன் அலுவலக நேரத்தில் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும்.
தொலைபேசி இலக்கம் :- 0212213861, 0778842577
மகளிர் சிறுவர்கள் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சினால் நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் - 2023 "அவள் தேசத்தின் பெருமை "எனும் தொனிப்பொருளின் கீழ் 08.03.2023 அன்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ்யில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து கொண்டு சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் திருமதி இமானுவேல் ஈஸ்வரன் சொரூபினிக்கு விருதுகளையும் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தாா்
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மாவட்ட மகளிர் சம்மேளனமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் - 2023 மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 16.03.2023 அன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெற்றதுடன், சிறந்த பெண்தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகள் 21 பெண்மணிகளுக்கும், சிறந்த பெண் குருதிக்கொடையாளர் விருது ஒரு பெண்மணிக்கும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மருத்துவ பீட உயிர் இரசாயனவியல் சிரேஷ்ட பேராசிரியரும், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சுற்றுத்துறையில் தற்போது மேற்கொள்ளவேண்டிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் தலைமையில் 27.02.2023 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில நடைபெற்றது.
இதன்போது யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.





