அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டு நிகழ்வினை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு 2023.05.11 அன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இவ் இரத்ததான நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட 37 குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடையினை வழங்கியிருந்தனர்.
இதில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் வைத்திய அதிகாாி எம்.நந்தினி, பொது சுகாதார பரிசோதகர் ரி.ரவினதாஸ் மற்றும் தாதியர்கள் ஆகியோர் தமது அர்ப்பணிப்பான சேவையில் ஈடுபட்டிருந்தார்கள்.
பாதுகாப்பான போக்குவரத்துப் பாவனையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தல் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில்(15.05.2023) மாவட்டசெயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குறிப்பாக பாடசாலை மாணவர்களையேற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான வாகனத்தரிப்பிடங்களை சுண்டிக்குளி மகளீர் கல்லூரி மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில் அமைத்தல், பழைய பூங்கா வீதியை ஒருவழிப்பயணப் பாதையாக மாற்றுதல் மற்றும் பாரவூர்திகள் பாடசாலை நேரங்களில் பயணிப்பதை தவிர்ப்பதற்கான சட்ட ஏற்பாடுகள், பாடசாலை ஆரம்பிக்கும் முடிவடையும் நேரங்களில் பொலிஸ்உத்தியோகத்தர்களின் தேவைப்பாடு என்பன தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு வெள்ளிக்கிழமை(05.05.2023) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய பௌத்த மதகுரு மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ விகாராதிபதி ( ஸ்ரீ நாகவிகாரை), மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் இராணுவ கட்டளைத்தளபதி,மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், இராணுவத்தினர் மற்றும் மாவட்டசெயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரக்கிளையின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபரும் தொகை மதிப்பு மாவட்ட ஆணையாளருமான அ.சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு 10.05.2023 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான 15வது குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு நிகழ்ச்சி திட்டத்திற்கான தொகை மதிப்பு ஆணையாளர் மற்றும் பிரதித்தொகை மதிப்பு ஆணையாளர்களுக்கான தொகை மதிப்பு கட்டங்கள், தொகை மதிப்பின் அமைப்பு ,தொகை மதிப்பீட்டின் கடமைப் பொறுப்புகள், காலவரையறை போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது "நாட்டில் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முக்கியத்துவம் அதன் செயற்பாடுகள் பற்றியும் நவீனமயப்படுத்தல் மற்றும் தகவல் திரட்டுதல் முறை ,காலவரையறையில் காணப்படும் குறைபாடுகள் பற்றியும் இதில் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பு" தொடர்பாகவும் கருத்து தெரிவித்தாா்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் (04) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் அனுமதி பெற வேண்டிய விடயங்களாக நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகள், விவசாயத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மீள் குடியேற்ற செயற்பாடுகள், உள்ளூர் அபிவிருத்தி உற்பத்தித்திட்டத்தின் செயற்பாடுகள்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வேலைத்திட்டங்கள், கல்வித்திணைக்கள செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் பிரதான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் யாழ். மாவட்டத்தில் அதன் முன்னேற்றம் தொடர்பாக குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவித்தல், கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள், பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை பாடசாலையில் இணைத்தல், போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை புனர்வாழ்வளித்து மீளவும் சமூகத்தில் இணைத்தல், குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணித்தாய்மாரின் போஷாக்கினை மேம்படு்த்தல், குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் போஷாக்கினை மேம்படு்த்தல், நிலைபேறான வீட்டுத்திட்டங்களை உருவாக்குதல்,மர நடுகைத்திட்டங்கள் போன்ற திட்டங்களில் எதிர்பாா்த்த இலக்குகள் தற்போதைய அடைவு மட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.