தொழிற் கல்வித்துறைகளில் (Vocational Sectors) தொழிற்பயிற்சி முயற்சியாளர்களினை முன்னேற்றும், கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்தி,தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பிரிவின் கீழ் உள்ள திறன்கள் துறைகளினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் (SSDP - Skills Sectors Development Program) தனியார் துறையில் பெண்களினை வலுவூட்டும் செயற்திட்டத்தின் (Private Sectors Women Empowerment Project) கீழ் 17 பயனாளிகளுக்கு மானியமாக தலா Rs. 500,000.00 காசோலைகள் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (29) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த பயனாளிகள் அவர்களின் வியாபாரத்தினை விருத்தியாக்கும் நோக்கில் 05 நாட்கள் வியாபாரத்தினை முன்னேற்றும் (Improved Your Business IYB ) வதிவிடப்பயிற்சியை முடித்து வியாபாரத்திட்டத்தினை சமர்ப்பித்தமைக்கு அமைவாக இந்த மானியம் ழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் (31.05.2023) காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் அனுமதி பெற வேண்டிய விடயங்களாக குளம், வாய்க்கால் புனரமைப்பு மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களான எழுவைதீவிலுள்ள பனைவளங்கள் அழிதல், அத்தோடு கருவேலை மரங்களின் பரவல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, பனைமரங்களை தறிப்பதனை குறைத்தல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.
அத்தோடு புத்தூர்- கந்தரோடை, மானிப்பாய்- காரைநகர் , எழுதுமட்டுவாழ்- நாகர்கோவில் வீதிகளின் அபிவிருத்தி புனரமைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு செம்மணி பகுதியில் முப்பது ஏக்கர் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளித்தல், சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் கலந்தமை தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்புகள், கீழ் பாலியாற்று வடி நிலத்திலிருந்து யாழ் குடாநாட்டிற்கு குடிநீர் விநியோகம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 23.05.2023 காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
விவசாய நடவடிக்கைகளிற்காக வங்கிகளால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த வருடம் வீடமைப்பு கடனுதவிகள் மற்றும் விவசாய உற்பத்திக்கான கடனுதவிகள், அரிசி ஆலைகளின் உரிமையாளர்களுக்கான கடனுதவிகள் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படுகிறது. இக் கடனுதவிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. இதற்கு அரசாங்க அதிபர் வங்கிகளின் கடனுதவிகள் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு செயலமர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
வெங்காய செய்கையில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை தவிர்க்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் வெங்காயத் தாள் துப்பரவு செய்யும் இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ் இயந்திரங்களின் பாவனை தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டு விழா மாவட்ட செயலக கணக்காளரும் நலன்புரி கழக தலைவருமான அ.நிர்மல் அவர்களின் தலைமையில் 2023.05.24 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் நலன்புரிக்கழக போசகருமான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உபபோசகருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) சுப்பிரமணியம் முரளீதரன் அவர்களும், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வின் முதல் நிகழ்வுகளாக தேசியக்கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் , மாவட்ட செயலக கொடி ஏற்றல், பிரதேச செயலக கொடி ஏற்றல், வரவேற்புநடனம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டு நிகழ்வில் கலாசார நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் இறுதி நாள் போட்டி நிகழ்வுகளாக வலைப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற்றன.

யாழ் மாவட்டத்தில பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர், பெண்கள் தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்களால் செயற்படுத்தப்படுகின்ற திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (17.05.2023) மாலை 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வடமாகாண பெண்கள் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள். வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர், அரசசார்பற்ற நிறுவனங்களான SOS Children's village ,World vision,Humedica,Fairmad, Jsac,Friends, Cfcd,Leads,Itham, Chrysalis, Women in Need,Center for Women development ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர், சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.